காவிரி விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி – உதயநிதி காட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 7) காவிரி விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், உறுப்பினர்களிடையே காரசார கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன.

விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், “தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், காவிரி பிரச்சினையில் 2014, 2015, 2018, 2022, 2026 ஆகிய ஆண்டுகளில் ஒரே குரலில்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தற்போது இரு முக்கிய சவால்கள் உள்ளன. ஒன்று, உரிய தண்ணீரைப் பெறுவது; மற்றொன்று, காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுப்பது. இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சட்டரீதியாக எதிர்கொள்வதே சரியான தீர்வாக இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்காது என்பதற்குப் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடகா சென்றபோது தீர்வு எட்டப்படாததால், கூட்டத்தில் வைக்கப்பட்ட நீரைக் கூட அருந்தாமல் கூட்டத்தைப் புறக்கணித்து வந்தார். எனவே, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரையும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்” என்றார்.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்:

இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்கிறார்கள். காவிரி விவகாரத்தில் ஏற்கெனவே இந்தச் சபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால், ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட என்ன பயம்?’ என எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார்.

ADVERTISEMENT

கடந்த மூன்றாண்டுகளாக யாரைப் பார்த்தும் பயப்படாதவர் எங்கள் தலைவர். நாளை முதலமைச்சர் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) தொடர்பான அனைத்து எம்.பி-க்கள் கூட்டம் கூடுகிறது. அதில் திமுக எம்.பி-க்களும் பங்கேற்பார்கள்” என்பதை எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பாரா என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில்:

அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சபாநாயகரின் உத்தரவை மதித்து, கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் நான் கொடுத்த விஷயத்தை மட்டுமே பேசினேன். மேட்டூரிலிருந்து எப்போது தண்ணீர் வரும் என்பதைப் பற்றி மட்டுமே கேட்டேன். அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்லது பயிர்க்கடன் தள்ளுபடி பேசும் போது தேவையில்லாமல் அமைச்சர் விவாதத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்” என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

இதைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டப்பேரவையில் கடந்த 06.12.2018 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாநில நலன் கருதி அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து அன்று தீர்மானம் கொண்டு வந்தது போல, இப்போதும் கலந்து பேசி ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றலாம்.

அதேபோல, ‘தமிழர் நலன் கருதியும் விவசாயிகளின் நலன் கருதியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போல, மாநிலத்தின் நலனுக்காகவே நாளைய தினம் அனைத்து எம்.பி-க்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியுள்ளார். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றார்.

மீண்டும் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் விளக்கம்:

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ராமச்சந்திரன், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றால், கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், காவிரி மற்றும் மாநில உரிமை சார்ந்த பிரச்சினைகளில் அவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். அதேபோல தமிழகத்திலும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை ஒன்றிய அரசிற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என்று விளக்கமளித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share