காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்படி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 7) காவிரி விவகாரம் குறித்துப் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், “காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் சில விவரங்களைக் கேட்டுள்ளனர். காவிரி நமது உயிர்மூச்சு; நமது உணர்வு ரீதியான ஒன்று. அதனால் இதில் அரசியல் செய்யும் எண்ணம் துளியும் நமது அரசுக்கு இல்லை; அதற்கான அவசியமும் இல்லை.
மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை நேர்முகக் கடிதமாகப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதோடு நாம் அமைதியாக இருந்துவிடவில்லை. மாநிலங்களவையில் ஒன்றிய ஜல் சக்தித் துறை இணை அமைச்சரிடம் மேகதாது அணை குறித்து முழு விவரங்களையும் குறிப்பிடவில்லை என்பது தெரிந்ததும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டு, மேகதாது திட்டத்திற்கு எந்தவித சட்டப்பூர்வ அனுமதியோ, நிர்வாக அனுமதியோ வழங்கக் கூடாது என்று பிரதமருக்கு மறுநாளே நேர்முகக் கடிதம் எழுதியுள்ளோம்.
காவிரி நீர்ப் பங்கீட்டிலும், மேகதாது அணை கட்டும் முயற்சிகளைத் தடுப்பதிலும் தமிழகத்தின் உரிமையை நமது அரசு கொஞ்சமும் விட்டுக்கொடுக்காது; அதுவே நமது உறுதியான நிலைப்பாடு.
அதே நேரத்தில், கர்நாடகாவில் சில அணைகளைக் கட்டத் தொடங்கிய சூழலில், இதே அவையில் 1969-இல் ஒரு விவாதம் நடைபெற்றது. அப்போது, ‘நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் அணை கட்ட விட்டது ஏன்?’ என்று கேட்டு சீப்பான பாலிட்டிக்ஸ் செய்ய நான் விரும்பவில்லை; அது நமது நோக்கமும் இல்லை.
‘காவிரி விவகாரத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். எந்தக் கட்சிக்கு பெருமை என்பதைப் பார்க்கக் கூடாது; அது தமிழக மக்களின் பிரச்சினை’ என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1969-இல் இந்தச் சபையில் அப்படிப் பேசியுள்ளனர். அதன்பிறகு நிலைமை வேறுவிதமாக மாறியுள்ளது என்பதை நாம் அறிவோம். சட்டப்படி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம்; அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார்.
