கர்நாடகா ‘வஞ்சகம்’… ஓடி வராத காவிரி.. களை இழந்த ஆடி-18 கொண்டாட்டம்!

Published On:

| By Mathi

A Dull Aadi-18 Celebration

தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீரை கர்நாடகா திறந்துவிடாத நிலையில் தமிழகத்தில் ஆடி 18 கொண்டாட்டங்கள் களையிழந்தன.

ஆடி மாதம் 18-ந் தேதி ”ஆடிப் பெருக்கு” விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில்தான் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, காவிரி மற்றும் இதர நதிகளில் புது நீர் பெருக்கெடுத்து ஓடும். இதை வரவேற்கும் விதமாகவும், நதிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

சங்க காலத்தில் ஆடிப் பெருக்கு அல்லது ஆடி-18 என்ற பெயரில் விழாக்கள் இல்லை என்றாலும் “புதுப்புனல் விழா”, “நீர் விழா” பற்றி இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.

காவிரி ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நாளில், மக்கள் ஆற்றங்கரையில் கூடி விழா கொண்டாடியதையும், நீச்சல் வீரனான ஆட்டனத்தி ஆடிய நீர் விளையாட்டுப் பற்றியும் விவரிக்கிறது அகநானூறு.

ADVERTISEMENT

”உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!- ” என சிலப்பதிகாரத்தில் விவரிக்கிறார் இளங்கோவடிகள். காவிரியை வெறும் நதியாகக் கருதாமல், உழவுக்கும் வாழ்வுக்கும் ஆதாரமான தாயாகப் பாவித்து மலர்கள் தூவி வரவேற்கும் வழக்கம் அன்றைய காலகட்டத்திலும் இருந்திருக்கிறது.

தற்போது, பொதுமக்கள் ஆற்றங்கரைகளுக்குச் சென்று, காவிரி தாய்க்குப் புத்தாடை, மஞ்சள், குங்குமம், பூக்கள் மற்றும் அரிசி படையலிட்டு வழிபடுகின்றனர்.

ADVERTISEMENT

வேளாண் பெருங்குடி மக்களின் தங்களின் சாகுபடிப் பணிகளை தொடங்கும் புனித நாளாக ஆடி 18-ஐ கொண்டாடுவது வழக்கம். நீர் நிலைகளைத் தெய்வமாக போற்றி மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபடுகின்றனர்.

புதியதாக திருமணமானவர்கள், தங்களது “மஞ்சள்” தாலி கயிற்றை கழற்றிவிட்டு புதிய “மஞ்சள்” கயிறு கட்டுவதும் வழக்கம்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்துப் போனது; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகாவும் திறந்துவிடவில்லை. இதனால் ஒகேனக்கல் தொடங்கி பூம்புகார் வரை காவிரி கரையோர மக்கள் ஆடி 18- ஆடிப் பெருக்கு நாளில் பெரும் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர். சிலர் கரையோரங்களில் பூஜைகளை மட்டும் நடத்திவிட்டு வீடு திரும்பினர். தமிழ்நாடு முழுவதும் ஆடிப் பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share