இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை நேரில் ஆய்வு செய்ய உள்ளோம் என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள்கள் இணையத்தில் கசிந்ததால் மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த குளறுபடியை கண்டித்து டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு இன்று ( செப்டம்பர் 18) நீதிபதிகள் பி.எஸ் நரசிம்மா மற்றும் அலோக் ஆராதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “நந்தன் நிலேகணி தலைமையிலான புதிய உயர்மட்ட பணிக்குழு, கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர் மட்ட நிபுணர் குழுவிடம் .விரிவாக ஆலோசனை செய்துள்ளது.
இந்த பணிக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய செப்டம்பர் இறுதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது நீதிபதிகள், தேசிய தேர்வு முகமைக்கு சொந்த இடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இப்போது மின்டோ சாலையில் தேசிய தேர்வு முகமைக்கு நிரந்தரமாக இடம் உள்ளது. அங்கு தான் செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இதை கேட்ட நீதிபதி நரசிம்மா, “நானும் எனது சகோதரரும் (சக நீதிபதி) நேரில்அங்கு வருவோம். மனித வளம் உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வோம். பணியாளர்களில் குறைந்தபட்சம் பாதி பேராவது நிரந்தர பணியாளர்களாக இருக்க வேண்டும். அனைவரும் பிற துறைகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களாக இருக்கக் கூடாது. நிரந்தர பணியாளர்களாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவும், அந்தத் தகவல்களைத் தனது இணையதளத்தில் பதிவேற்றவும் தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
