காவிரி நீர் விவகாரத்தில் சட்டப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், அமைதி வழியில் தீர்வு காணவே பெங்களூரு பயணம் குறித்து யோசிக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “காவிரி நீர் விவகாரத்தை சட்டப்படி அணுகுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது; அதில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும், ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம் என்று திட்டமிடப்பட்டதுதான் பெங்களூரு பயணம். அப்படி ஒரு பயணம் குறித்து முதலில் யோசித்தது நான்தான்.
நாம் பெங்களூரு செல்ல நினைத்தது குறித்து பல்வேறு கருத்துகள் வந்தன. இன்றைய காலத்தில் பகை நாடுகளே பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளப் பார்க்கின்றன; அப்படி இருக்கும்போது பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பார்த்தால் என்ன என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த முயற்சியை எடுக்க முன்வந்தேன்.
‘ஒருவேளை அந்த முயற்சியில் உங்களுக்கு அவமானம் நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயாராகத்தான் இருந்தேன். இருந்தாலும், என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் கூடுதல் விளக்கம் தருவார். அதேபோல, காவிரிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விவசாயத்துறை அமைச்சர் விரிவான பதிலளிப்பார்.
குறுவை சாகுபடிக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எதிர்க்கட்சித் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குருவை சாகுபடிப் பாதிப்புகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. ‘அரசியலே நாங்கள்தான்’ என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இதுகூட தெரியாமல் போய்விட்டது வியப்பாக இருக்கிறது. முன் பின் பேப்பர் படித்திருந்தால் இவை அனைத்தும் தெரிந்திருக்கும்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
