காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்திக்கு, தமிழக அரசின் ”கொள்கை வியூக வகுப்பாளர்” பதவி வழங்கப்பட்டுள்ளதா? என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி எழுப்பிய கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், மரியவில்சன் விளக்கம் அளித்துள்ளனர்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி ’பிரவீன் சக்கரவர்த்தி’ குறித்து நடந்த விவாதம்:
திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி: அன்னை தமிழாம் நம்முடைய தமிழ்மொழிக்கு செம்மொழி என்கின்ற அந்த அந்தஸ்தைப் பெற்றுத்தந்து, இயல், இசை, நாடகம் என்கின்ற முத்தமிழோடு நான்காம் தமிழாக கணினித் தமிழை தந்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கெல்லாம் ஒரு சிறந்த எதிர்காலத்தை கணினி மயமாக்கமாக மூலமாக உருவாக்கித் தந்த எங்களுடைய அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவு நாளிலே, அவரை இன்றைக்கு நாங்கள் முதலிலே வணங்குகிறோம்.
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் கையிலே ஜெபமாலையோடு வந்து நிதிநிலை அறிக்கை வாசித்தார்கள்.
நம்முடைய வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு, லட்டு புளியோதரையோடு வந்து இங்கே வேளாண்மைத்துறையினுடைய அறிக்கையை வாசித்தார்கள்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் வழியிலே வந்தவர்கள் நாங்கள்.
என்றைக்குமே திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிற ஒரு இயக்கம்.
அதனுடைய தலைவர்தான் இன்றைக்கு தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்தியாவிற்கு வடக்கேயும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளுகின்ற வண்ணம் திராவிட மாடல் ஆட்சியை அன்றை இன்றைக்கு வடநாட்டிற்கும் உணர்த்தியவர் எங்களுடைய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
அந்தத் தலைவர் எங்கே என்று கேட்கின்றவர்களுக்கு என்னுடைய பதிலுரையை என்னுடைய முறையிலே பல்வேறு விளக்கங்கள் எங்கெங்கெல்லாம் அவர் இருக்கின்றார் என்பதை நான் விளக்க இருக்கின்றேன்.
அந்த ஈடிணையற்ற தலைவனுடைய புதல்வனாக, வேங்கையின் மைந்தனாக, எதற்கும் அஞ்சாத சிங்கமாக, எது வந்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய வல்லமை பெற்றவராக, எங்களுடைய இளங்கலைஞர் என்று இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களாலே புகழப்படுகிற எங்களுடைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, எங்களுடைய அன்புக்குரிய சட்டமன்ற எதிர்க்கட்சியினுடைய துணைத்தலைவர், கொறடா, துணை கொறடா, முன்னாள் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் இருவர் இங்கே இருக்கிறார்கள். எனவே முன்னாள் முதலமைச்சர்களே அனைவருக்கும் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் இந்த உரையிலே பேசுவதற்கான வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கின்ற நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர், அவர் என்னுடைய நெடுநாளைய நண்பர், அவர் இந்த உச்சத்திலே உட்கார வேண்டும் என்று அன்றைக்கே நாங்கள் அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள், இன்றைக்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, உட்கார்ந்திருக்கிறார், வாழ்த்துகிறோம்.
நிதிநிலை அறிக்கைக்குள்ளே செல்வதற்கு முன்பாக ஒரு சில கருத்துக்களை நான் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
உதாரணமாக, தகவல் அறியும் உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறது. அந்த தகவல் அறியும் உரிமை கமிஷனிலே சில கேள்விகளை சிலர் கேட்டிருக்கிறார்கள். அதனுடைய நகல் கூட என்னிடத்திலே தரப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்த தகவல் அறியும் உரிமை கமிஷனுடைய உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இன்னும் தகவல் தரப்படவில்லை என்று சொல்லுகிறார்கள். நாங்கள் எதிலும் வெளிப்படையானவர்கள். ஒளிவு மறைவு கிடையாது. இப்படி சொல்லுகிற இந்த அரசு, ஏன் இன்னும் அவர்களை நியமிக்கவில்லை? பதில் தரப்படவில்லை? தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் பல்வேறு பொறுப்புகளிலே வைத்திருக்கிறீர்கள், அதுகுறித்து தகவல்களை கேட்கின்ற பொழுது, இங்கே தகவல் உரிமை ஆணையத்திலே இருந்து இன்னும் ஆணையர்கள் உரிய நியமிக்கப்படவில்லை என்கின்ற தகவலைத் தருகிறார்கள்.
எனவே விரைந்து தகவல் உரிமை ஆணையம் செயல்பட வேண்டும். அதன் மூலமாக மக்கள் பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த அரசு வெளிப்படையான உண்மையான அரசாக, போலித்தன்மை இல்லாத அரசாக செயல்படுகிறோம் என்று சொல்லுகிறீர்களானால், நிச்சயமாக அதை செய்ய வேண்டும் என்று முதலிலே நாங்கள் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
அடுத்ததாக ஒரு ஆங்கில பத்திரிக்கையிலே ஒரு செய்தி வந்திருக்கிறது.
பிரவீன் சக்கரவர்த்தி என்கின்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், அவருடைய தலைமையிலே காங்கிரஸ் கட்சியிலே டேட்டா அனலிசிங் என்ற அமைப்பு செயல்படுவதாகவும், இதன் வாயிலாக பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், . மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான ரெவின்யூ அக்யூமண்டேஷன் கமிட்டி அமைப்பதிலும் அவர், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதாக அந்த பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. அது உண்மையா? அப்படி ஒரு கமிட்டி இருக்கிறதா? அவருக்கு என்று தனியாக ஒரு அதிகாரத்தை இந்த அரசு தந்திருக்கிறதா?
அமைச்சர் விஸ்வநாதன்: அருமை நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த அவையில் அவர் அங்கத்தினராக இல்லாதவர். இந்த அவையில் அங்கத்தினர் அல்லாதவர், அவரைப் பற்றி பேசுவது என்பது வழக்கத்திற்கு மீறிய ஒரு செயலாக நான் பார்க்கிறேன். மரபு இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள், தமிழக அரசின் சார்பாகவோ, தமிழக அரசினுடைய அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் சார்பாகவோ, தமிழக அரசு அமைத்திருக்கிற குழுக்களின் சார்பாகவோ, தமிழக அரசு அமைத்திருக்கிற எந்த நிர்வாக அமைப்புகளிலுமோ அவர் அங்கத்தினராக இல்லாதவர்.
ஊடகங்கள் சமீப காலமாக ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதி கொண்டுதான் இருக்கிறது. ஆக ஒரு பத்திரிக்கையில் வருகிற செய்தியை வைத்துக்கொண்டு, ஒரு நீண்டகால நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு இயக்கத்திலே இருக்கிற முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத, ஒரு நபரைப் பற்றி கருத்துக்களைச் சொல்வதை ஏற்புடையதல்ல, அது ஏற்புடையதல்ல, அதை அனுமதிக்க முடியாது, மரபுகளை மீறிய செயல் இதை நிறுத்தி கொள்வது நன்றி.
சபாநாயகர்: இனி உங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான், பத்திரிகை செய்திகளை அவையில் மேற்கோள் காட்டுவதாக இருந்தால் என்னுடைய முன் அனுமதி இல்லாமல் நான் அனுமதிக்க மாட்டேன்.
அமைச்சர் மரிய வில்சன்: வெளியே உள்ள செய்திகள், சோஷியல் மீடியா, அதிலிருந்து ஒரு கொஸ்டின்ஸ் ரைஸ் பண்றதே மிக தவறான விஷயம்னு நான் நினைக்கிறேன்.
எங்களோட அரசாணை என்ன சொல்லுது? கவர்மெண்ட் சைட்ல இருந்து அபிஷியல் ஸ்டேட்மென்ட் ஏதாச்சும் வந்திருந்தா, கண்டிப்பா நீங்க அதை மேற்கோள் காட்டி நீங்க பேசலாம்.
மாண்டேக் சிங் அலுவாலியா கமிட்டின்னு ஒன்னு ஃபார்ம் பண்ணிருக்கிறோம். அதில் யார் லிஸ்ட் அவுட் பண்ணிருக்காங்களோ அவங்கதான் எங்க ரெப்ரசென்டேஷன் கமிட்டி மெம்பர்ஸ். அதை இந்த ஹவர்ல இந்த ஹவுஸ் வழியா அவங்க தெரிந்து கொள்ள வேண்டும். தேங்க்யூ.
ரகுபதி: பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மட்டுமல்ல, பல்வேறு தகவல்கள் இன்றைக்கு வந்த காரணத்தால் அதை சொன்னோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
