காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான பிரவீன் சக்கரவர்த்திக்கு (Praveen Chakravarty) தமிழ்நாடு அரசின் “கொள்கை வியூக வகுப்பாளர்” (Policy Strategist for TN Govt) பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது சர்ச்சையாகி உள்ளது.
சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது; ஆனால் திமுக கூட்டணியை உடைத்து விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸை சேர்க்க அதீத முயற்சிகளை மேற்கொண்டு சர்ச்சைகளில் சிக்கியவர் பிரவீன் சக்கரவர்த்தி.
மே 4-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் விஜய்யை சந்தித்தவர் பிரவீன் சக்கரவர்த்தி.
இதனால் முதல்வரான விஜய், தவெகவுக்கு கிடைத்த முதலாவது ராஜ்யசபா எம்.பி. சீட்டை காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்திக்கு கொடுத்தார். தற்போது ராஜ்யசபா- மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் ”Business Standard” ஆங்கில ஊடகத்தில் ”Focus of TN Budget will shift to investment from expenditure: Chakravarty” என்ற தலைப்பில் பிரவீன் சக்கரவர்த்தின் நேர்காணல் இடம் பெற்றுள்ளது.
இந்த செய்திக்கான பிரவீன் சக்கரவர்த்தியின் படத்தின் கீழ் “Praveen Chakravarty, Congress RS MP and policy strategist for TN govt” என்கிற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
இதனால், முதல்வர் விஜய் அரசின் “கொள்கை வியூக வகுப்பாளர்” பதவி, காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளதா? இந்த அரசாணை எப்போது வெளியானது? ஏன் இதை பகிரங்கமாக அரசு அறிவிக்கவில்லை? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு விவாத பொருளாகி இருக்கிறது.
