ரூ.100 கோடி மோசடி… பிடி அரசகுமார் பணம் கொடுத்தாரா? அன்பில் மகேஷ் சொன்ன பதில்!

Published On:

| By Kavi

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று 7 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் பதிவு செய்யப்படாத கூட்டமைப்பு தலைவர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் (செப்டம்பர் 16) அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சூழலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்பில் மகேஷுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ADVERTISEMENT

அதன்படி இன்று (செப்டம்பர் 18) சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் ஆஜரானார்.

அவரிடம், காலை 11 மணி முதல் மாலை 6:00 மணி வரை 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வர சொன்னார்கள். நாள் 10.50 மணிக்கே வந்துவிட்டேன். மொத்தமுள்ள 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு விரிவாகவும் பொறுமையாகவும் பதில் அளித்தேன்.  என்னுடைய பதிலை டைப் செய்து வைத்துக்கொண்டார்கள்.  இதை பிரிண்ட் அவுட் எடுத்து என்னிடம் படித்து பார்க்குமாறு கூறினார்கள். 

அதை படித்து பார்க்கும்போது சில இடங்களில் எழுத்து பிழைகள் இருந்தது. அதையும் சுட்டிக்காட்டினேன். பிறகு அதை சரிசெய்தார்கள். 

மாலை நேரம் 5:30 மணி கடந்து செல்லுகின்ற அந்த காரணத்தினால், மீதம் இருக்கின்ற கேள்விகளை அடுத்த வாரம் நாங்கள் அழைக்கும் பொழுது நீங்கள் வர வேண்டும் என்று சொன்னார்கள். 

நீங்கள் எப்போது அழைக்கிறீர்களோ, அப்போது கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்” என்றார். 

118 ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, 

 ”இந்த ஆவணங்கள், நான் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டது தொடர்பானது. அது சார்ந்து நான் வைத்திருந்த ஃபைல்ஸ்.   அதாவது, 10, 12 ஆம் வகுப்பு ரிசல்ட்டு, அச்சீவ்மென்ட்ஸ் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த சாதனைகள் சார்ந்தது.  அதுபோல ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் முடிந்ததும், நான் சட்டமன்றத்தில் வைத்த அந்த புத்தகங்கள்… இது மாதிரி இருக்கக்கூடிய  ஆவணங்களைத்தான் எடுத்துக்கொண்டு சென்றார்கள்” என்றார். 

அரசகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். முத்துக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.  இவர்கள் உங்களிடம்தான் பணம் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் போய் கொண்டிருக்கிறது. இது உண்மையா? என்ற கேள்விக்கு, 

”இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்கும் போது, ’நீங்கள் அரசகுமாரிடமும், முத்துகுமாரிடமும் தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லியுள்ளேன்.  ஏனென்றால் அதுசார்ந்து இதுவரை இருவரும் என்னிடம் பேசியது இல்லை.  இதை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது நானே இங்கு எல்லாவற்றையும் ரிவியல் செய்வது போல் ஆகிவிடும்” என கூறினார். 

இது முழுக்க முழுக்க பொய் வழக்கு எனவும் குறிப்பிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share