மேல்மா சிப்காட்- விஜய் அரசு திடீர் பல்டி- என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Melma SIPCOT: Vijay Govt. Withdraws Land Acquisition

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த ஆளும் தவெக அரசு பிறப்பித்திருந்த நோட்டீஸ் திடீர் என வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் மேல்மா சிப்காட் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது தொடர்பாக அண்மையில் சட்டசபையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “த.வெ.க. அரசு செய்யாறு தொழிற் பூங்கா திட்டத்துக்காக மேல்மா கிராமத்தில் 22 எக்டேர் புன்செய் நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
த.வெ.க. அரசு மேல்மாவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லியிருந்தது.

2025 ஜூலை மாதம் நடந்த த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது; விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டதை கண்டித்திருந்தது த.வெ.க.

ADVERTISEMENT

சில மாதம் முன்பு மேல்மாவில் சிப்காட் அமைக்க விவசாய நிலம் தேவையா என உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா த.வெ.க. அரசு?

மேல்மா சிப்காட்: நிலம் கையகப்படுத்த
விஜய் அரசு வெளியிட்ட அறிவிக்கை VI(1)/443(d-6)2026

ADVERTISEMENT

வேளாண் நிலங்களின் பயன்பாட்டை மாற்றம் செய்யும் விதிகளை நீர்த்துப் போகச் செய்து திருத்தங்களைச் செய்தது முதல் தொடர்ந்து கடலூர் சிப்காட், உடன்குடி அனல் மின் நிலையம், மேல்மா சிப்காட் என நில எடுப்பு நோட்டீஸ்களை அரசு வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் மேல்மாவில் சிப்காட் அமைக்கும் நடவடிக்கையை தவெக அரசும் மேற்கொள்வது சர்ச்சையானது. அப்பகுதி கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு தமிழக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “தமிழ்நாடு அரசிதழ் எண் 369 நாள் 01.09.2026 அன்று சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை–3 க்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்படி அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை எண். VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்காட் மேலாண் இயக்குநர் இந்த ‘திரும்பப் பெறுதல்’ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share