திருவண்ணாமலை மேல்மா சிப்காட் பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஆதவ் அர்ஜூனா இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற விவாதம்:
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு: சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அமைச்சர்கள் சிறியவராக இருந்தாலும் கூட அந்தத் துறையைச் சொல்லிதான் அழைக்க முடியுமே தவிர, தனிப்பட்ட பேரெல்லாம் சொல்லி அழைப்பது நாகரிகம் இல்லை என்பது நீண்ட நெடுங்காலமாக உள்ள மரபு ஆகும். அதனால் அவர் அமைச்சரின் பெயரைச் சொல்லாமல் தவிர்த்துள்ளார்; மேலும் அவர் பொறுப்பு அமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சரும்தான் என்பதைச் சுட்டிக்காட்டினார். நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர் என்ன கேள்வியைக் கேட்டார்?
2008-ஆம் ஆண்டில் எங்களுடைய மாவட்டத்தில் ஆணி தயாரிக்கும் தொழிற்சாலை கூட திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லை. ஏனெனில் நாங்கள் வேலூர் மாவட்டம் மற்றும் வடஆற்காட்டிலிருந்து பிரிந்து திருவண்ணாமலைக்கு வந்தவர்கள். அனைத்து தொழிற்சாலைகளும் வடஆற்காடு மாவட்டம் வேலூர் பகுதியிலிருந்தும், வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் போன்றவையும் அங்கேயே சென்றுவிட்டன, எங்கள் பகுதியில் அப்போது ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் 2008-ஆம் ஆண்டில், அப்போது நான் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும்போது அண்ணன் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அப்போது எங்களுக்கு சிப்காட் வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். அந்த அடிப்படையில்தான் ராணிப்பேட்டைக்குப் போக இருந்த அந்த சிப்காட் தொழிற்சாலை, அதாவது 10,000 பேர் பணிபுரியும் தொழிற்சாலை, கொண்டுவரப்பட்டு 2008-இல் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்குப் பின்னால் ஜெயலலிதா ஆட்சி வந்தது; அவர்கள் 2-வது விரிவாக்கம் என்ற பெயரில் விரிவாக்கத்தைச் செய்தார்கள். அதுக்குப் பின்னால் எடப்பாடியார் வந்தார். அவர் ஆட்சியில் 3-வது விரிவாக்கம் என்று அவர்தான் முதல் முதலாக, 9 ஊர்களில் நிலம் எடுக்கும் பணிகளை ஆரம்பித்தார்கள். பொதுப்பணித்துறை அமைச்சருக்கு இதன் முழு விவரமும் யாரோ சரியாகச் சொல்லவில்லை போலிருக்கிறது, அதனால் ஏதோ நாங்கள் தான் காரணம் என்பது போல் பேசுவது சரியல்ல.
3-வது விரிவாக்கத்திற்காக மேல்மா, வடமா, உள்ளிட்ட 9 ஊர்களைத் தேர்ந்தெடுத்து நோட்டீஸ் அனுப்பியும், விளம்பரப்படுத்தியும் டி.ஆர்.ஓ மற்றும் 8 தாசில்தார்களை நியமித்தவர் எடப்பாடியார்தான்.
இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பின்னால் நாங்கள் 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனேயே அந்த 3-வது விரிவாக்கத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் நில எடுப்புப் பணிகளுக்குப் போனோம். அந்த நில எடுப்புக்குப் போகிற பொழுது 2 ஊர்களில் மட்டும்தான் பிரச்சனை.
அப்பொழுது அந்த 2 ஊர்களில் இருக்கிற விவசாயிகள், “நாங்கள் நிலம் கொடுக்க மாட்டோம்” என்று கூறி மேல்மா பகுதியில் 50 பேர் உண்ணாவிரதம் இருந்தார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 5,000 பேர், எல்லாரும் பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் மொத்தமாக வந்து 5,000 பேர், “இந்த நிலம் வீணாகத்தான் போகும், எனவே இந்த இடத்தை நீங்கள் எடுத்தே ஆக வேண்டும்” என்று உண்ணாவிரதம் இருந்தார்கள்.
அப்பொழுது ஓசூரைச் சேர்ந்த அந்த அருள் ஆறுமுகம் என்பவர், எங்க மாவட்டமும் கிடையாது, எங்க ஊர் விவசாயியும் கிடையாது, எங்கள் தொகுதியிலும் கிடையாது. அவர் ஓசூருக்கு அருகில் உள்ள சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர். அவர்தான் எங்கள் ஊர் விவசாயிகளைத் தூண்டிவிட்டுப் பிரச்சனை பண்ணினார்.
முந்தைய அமைச்சர்கள் இதுகுறித்து முழுமையான விவரங்களைச் சரியாகச் சொல்லாத காரணத்தால்தான் அவர் அந்தச் செய்தியை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் பொறுமையாக இதைக் கேட்டுக்கொண்டிருந்தேன், ஏன்னா விதிகளின்படி எப்போது பேசுவது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன், ஆனால் தற்போதைய சூழல் காரணமாக நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
அமைச்சர்களாகவோ அல்லது நாமாகவோ யாரையும் நேரடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அந்தப் பகுதியைச் சார்ந்த காவல்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர், “சிலரை வைத்துக்கொண்டு இப்படிப் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள்” என்ற உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
நான் ஊரில் இல்லாதபோதும், தென்பகுதியில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஊருக்கு வந்து பார்க்கும்போது விவசாயி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தேன். இந்தச் செய்தியை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், அவர் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர் நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்று வரவில்லை, அரசாங்கமே நேரடியாக அவர்களை விடுதலை செய்தது; இதான் உண்மையான வரலாறு.
எங்கள் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக வந்துள்ள நீங்கள் (ஆதவ் அர்ஜூனா), எங்களுடைய மாவட்ட வளர்ச்சிக்காக உதவுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நான் உண்மையான நிலவரத்தைத்தான் இங்கு பேசுகிறேன். அருள் ஆறுமுகம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, இந்த இரண்டு கிராமங்களைத் தவிர மீதி ஊர்களில் இருக்கிற விவசாயிகள் அனைவரும் நிலம் கொடுக்க முன்வந்தார்கள்.
3-வது விரிவாக்கத் திட்டம் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது; அவர்தான் நில எடுப்புக்கு அதிகாரிகளைப் போட்டார்கள், அதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்தோம். இப்ப நான் கேட்பது என்னவென்றால், அப்படிப்பட்ட ஒரு விவசாயியை எங்கள் மாவட்டத்தைச் சாராத ஒருவருடன் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் அவர்கள் கேள்வி எழுப்பியதில் உங்கள் நிலைப்பாடு என்ன? 3-வது விரிவாக்கத்திற்கு இடம் எடுக்கப் போறீங்களா? எங்கள் பகுதியில் இருக்கிற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப் போறீங்களா? இந்த ஆட்சியின் நோக்கம் என்ன? என்றுதான் அவர் கேள்வி கேட்டாரே ஒழிய உங்கள் மீது அவர் குற்றச்சாட்டு சொல்லவில்லை.
விவசாயத்தைத் தவிர வேறு எதையும் பார்க்காத எங்கள் பூமியில் இவ்வளவு இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்தது என்றால் அதற்கு சிப்காட் தான் காரணம். 3-வது விரிவாக்கம் வந்தால் எங்கள் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில்தான் கோரிக்கையை வைக்கிறோம். பொறுப்பு அமைச்சர் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு எதிராக இருப்பவர்களுடன் புகைப்படம் எடுப்பதை எங்கள் மாவட்டத்தில் யாரும் விரும்பவில்லை.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ் குமார்: குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் 7 ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மை. ஆனால் அங்கு 50 பேர் போராடியதை மாற்றி 5,000 பேர் சிப்காட் வேண்டும் என்று கேட்பதாகக் கூறுவது பொய்யான விஷயம். முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சியினர் சிலரை வாகனங்களில் அழைத்து வந்து சிப்காட் வேண்டும் என்று நாடகமாகப் போராட்டம் நடத்தினர்; அதற்குரிய வீடியோ ஆதாரங்களும் உள்ளன. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியே எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும். எனவே, 11 கிராமங்களிலும் கிராமசபையைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி மக்களின் உண்மையான கருத்தை அறிய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்டா பெற்று, அடமானம் வைத்து விவசாயக் கடன் வாங்கிய முப்போகம் விளையும் நிலங்களை ‘தரிசு நிலம்’ என்று மாற்றி எழுதியுள்ளனர். எனவே, அந்த 11 கிராமங்களிலும் கிராமசபை நடத்தி மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: வரலாறு தெரியாமல் பேசுவதாகக் கூறுகிறார் முன்னாள் அமைச்சர். எந்த ஆட்சியில் என்ன அரசாணை பிறப்பிக்கப்பட்டது, 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைப்பாடு எவ்வாறு மாறியது என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் நான் நாளை சமர்ப்பிக்கிறேன்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக மாறியவுடன் மற்றொரு நிலைப்பாட்டையும் எடுக்கும் என்பதற்கு எட்டுவழிச் சாலை போராட்டமே சிறந்த உதாரணம். அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து திமுக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.
அப்போது அதிமுக ஆட்சியில் எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் போராடிய அருள் என்பவரைக் கொண்டுதான் அன்றைய எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்; மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டங்களிலும் அவர் மேடையில் இருந்தார். அந்த போராட்டத்தின் பின்னணியில் நான் இருந்தேன் என்பதால் எனக்கு நன்றாக தெரியும். உங்களது பலமும் எனக்கு தெரியும்; பலவீனமும் எனக்கு தெரியும்.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்திலும் திமுக அரசுதான் அரசாணை வெளியிட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின் வேறு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகிறார்கள். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.
