NLC முதல்ல இதையெல்லாம் செய்து தரட்டும் – சவுமியா அன்புமணி ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

நிதி நெருக்கடி இருக்கும் இந்தச் சூழலில் அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பணைகளைக் கட்டிக் கொடுக்க சொல்லுங்கள் என பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி பேசினார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகைள் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், “நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) தொடங்கப்பட்டபோது நமக்கு மின்சாரம் தேவைப்பட்டது. இன்று கோடைகாலத்தில் கூட தமிழகத்தின் மின்சார தேவை 21,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று தனியார் மற்றும் அரசுத் துறைகளில் 36,000 மெகாவாட்டிற்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம். இதில் என்எல்சி-யின் பங்கு வெறும் 2,000 மெகாவாட் மின்சாரம் மட்டும்தான். அப்படி இருக்கும்போது என்எல்சி நமக்குத் தேவை கிடையாது.

ADVERTISEMENT

என்எல்சி ஆண்டுதோறும் ரூ. 1,300 கோடி அளவிற்கு வருமானம் ஈட்டுகிறது. ஆனால், அவர்களது சி.எஸ்.ஆர். (CSR) நிதியை ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்துகிறார்களே தவிர, தமிழ்நாட்டிற்கு வழங்குவதில்லை. அவர்களது சி.எஸ்.ஆர். தொகையை வைத்து நமக்கு தடுப்பணைகளைக் கட்டிக் கொடுக்கச் சொல்லுங்கள்; இல்லையென்றால் விவசாயிகளுக்கு நெல் பாதுகாப்பு குடோன்களைக் கட்டி தரச் சொல்லுங்கள். நிதி நெருக்கடி இருக்கும் இந்தச் சூழலில் அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பணைகளைக் கட்டிக் கொடுக்க சொல்லுங்கள்.

ஏற்கனவே 40,000 ஏக்கர் நிலத்தை அவர்கள் அழித்துவிட்டு, இரவோடு இரவாக அங்கிருந்த மக்களை ‘விஜயமாநகரம்’ என்ற இடத்தில் தங்க வைத்து, மூட்டை முடிச்சுகளுடன் அகதிகளாகச் செல்ல வைத்தனர். அவர்களுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கும்போது, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுக்க என்எல்சி நிர்வாகம் தயாராகி வருகிறது; அதற்குப் பயங்கர முனைப்புடன் செயல்பட்டது. அந்த சமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி அனைவரையும் அழைத்துச் சென்று என்எல்சி நிறுவனத்திற்குப் பூட்டு போடும் போராட்டை நடத்தினார். அப்போது வஜ்ரா வாகனத்தைக் கொண்டு அந்தப் போராட்டத்தை அடக்க முயற்சிகள் நடந்தன; அனைத்தையும் மீறி பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. எனவே, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்குத் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என்பதைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அங்கு இளநீரில் கூட நச்சுத்தன்மை (டயாசின்) இருக்கிறது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ கணேசன், “என்எல்சியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். அவர்களுக்கு இங்கு வெளியில் நடக்கும் போராட்டம் என்ன என்பது குறித்து பெரும்பாலும் தெரியாது. முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நான் இருந்த போது என்எல்சி அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து பேசி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய கூடுதலான தொகையைப் பெற்றுக்கொடுத்தது திமுக அரசு. அதேபோல, ஆண்டிற்கு ரூ. 100 கோடி சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்றுக்கொடுத்ததும் திமுக அரசுதான்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, “பரந்தூர் மக்களை எப்படி நாம் பாதுகாத்தோமோ, அதேபோல் என்எல்சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் நமது அரசாங்கம் கண்டிப்பாக கைவிடாது. ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன் – என்எல்சி நிறுவனம் யாருடைய நிறுவனம்? அது மத்திய அரசாங்கத்தின் நிறுவனம். நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன; இந்த நேரத்தில் என்எல்சி வரவில்லை. இது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினை. இன்று கூட்டணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களும் மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாமே! உயர்மட்ட குழு கேட்டுள்ளனர். கண்டிப்பாக நமது முதலமைச்சர் அங்கிருக்கும் மக்களை கைவிட மாட்டார்.” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share