சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் முஸ்தாபா, தாகிரா பேச்சுகளுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இருக்கைக்கு சென்று தவெக எம்.எல்.ஏக்கள் பேச்சுக்கு ஆட்சேபனையை பதிவு செய்தார்.

தவெக எம்.எல்.ஏ முஸ்தாபா, இஸ்லாமியர்கள் குறித்த திமுகவின் நிலைப்பாட்டை விமர்சிக்க, திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளித்தனர். அப்போது, மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா ஆகியோர் எழுந்து, இஸ்லாமியர்களுக்கு திமுக செய்தவற்றை பட்டியலிட்டனர்.
திடீரென தவெக எம்.எல்.ஏ. தாகிரா எழுந்து திமுகவை விமர்சித்து பேசினார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ”இது வேண்டாம்.. சபை குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என்றார்.

அப்போது, திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் வேறு இருக்கையில் அமர்ந்து உரத்து பேசியதால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ‘நடவடிக்கை எடுப்பேன்’ என்று எச்சரித்தார். இதனையடுத்து திமுக கொறடா, எ.வேலு, வசந்தம் கார்த்திகேயனை அவரது இடத்தில் அமர சொன்னார்.

பின்னர் பேசிய எ.வ.வேலு, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இஸ்லாமியர் பிரச்சனை என்பது சென்சிட்டிவானது. இது அனைவரும் அறிந்தது. சிறுபான்மை சமுதாயம் சம்பந்தப்பட்டது. தங்களுடைய தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு என்னவெல்லாம் செய்தார்கள், அரணாக இருந்தார்கள் என்று பெருமைப்படுத்துவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்தந்த கட்சியினர் அப்படித்தான் பெருமைப்படுத்துவர். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் போகிற போக்கில், “இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய இயக்கம் திமுக. அதற்கு சாட்சியாக இஸ்லாமியர் தலைவர்கள் இங்கேயே (ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி) சொல்லிவிட்டனர் என்றார்.
அப்போது தவெக எம்.எல்.ஏக்கள் தரப்பில் இருந்து திமுகவினரை பார்த்து சில வார்த்தைகள் சொல்ல திமுகவின் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் ஆவேசப்பட்டனர். திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது இருக்கையை விட்டு எழுந்து சபையின் முன்பகுதிக்கு வந்தனர். பின்னர் பூண்டி கலைவாணன் தமது இருக்கைக்கு திரும்பி ஆவேசமாக பேசினார்.

இதனையடுத்து குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், “ரொம்ப நாளாகவே.. இது ஏத்துக்கவே முடியாது.. கொறடாக்கள் எல்லாரும் யோசிக்கனும்.. கேமிராவில் காட்டினாங்களான்னு தெரியலை.. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் அடிக்க பாய்ந்து வருகிறார். எ.வ.வேலு அவரை கட்டிப் பிடித்து அணை போடுகிறார்.. பூண்டி கலைவாணன், நடுவில வந்து அடிக்க வருகிறார்.. இந்த உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக் கூடிய கட்சி அல்ல தவெக.. இது போன்று அநாகரிகமாக, நாகரிகமற்று உருட்டுறது மிரட்டுறதுன்னு செய்யுறதால தமிழக மக்கள் தகுந்த தீர்ப்பை கொடுத்து அங்க உட்கார வெச்சிருக்காங்க” என்றார்.

அப்போது பூண்டி கலைவாணன், தமது இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இருக்கைக்கு சென்று அவரிடம் முறையிட்டார்.
பின்னர் பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், தவெக எம்.எல்.ஏ. பேசியது தவறு எனில் சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இதன் பின்னர், திமுக கோவி செழியன் எழுந்து பிரச்சனையை முடிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்.
அப்போது தவெக எம்.எல்.ஏ. முஸ்தாபா எழுந்து பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “நீங்கள் தொடர்ந்து பேசப் போவது ஆதாரப்பூர்வமாக இருந்தால் ஆதாரத்தை காட்டிவிட்டு பேசுங்கள்.” என அனுமதி மறுத்தார். பின்னர் ஆதாரங்கள் சிலவற்றை சபாநாயகரிடம் முஸ்தாபா, காட்டினார். இதனையடுத்து அவரது தொகுதி சார்ந்த பிரச்சனைகளை பேச சபாநாயகர் அனுமதித்தார்.
