பதவிக்காக பொய்களைச் சொல்லி மடைமாற்ற பார்க்கிறார் வன்னி அரசு – கோவி.செழியன் விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

மாணவன் பாரதிதாசன் கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் பொய்களைச் சொல்லி மடைமாற்ற பார்க்கிறார் அமைச்சர் வன்னி அரசு என முன்னாள் அமைச்சர் கோவி .செழியன் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து இன்று (செப்டம்பர் 23) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாணவன் பாரதிதாசனை வஞ்சித்துவிட்டு, ஆதாரங்கள் எல்லாம் அள்ளிப் போட்ட பிறகு, பழிசொல்லை தவிர்க்க வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் வன்னியரசு அவர்கள்.

ADVERTISEMENT

“பாரதிதாசனுக்கு நிதியை வழங்க முடியாது என்றால், திமுக-வும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து மாணவரின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று அவரைப் படிக்க வைப்போம்” என எங்கள் தலைவர் சொன்ன பிறகுதானே ’’நிதி வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிடுகிறீர்கள்!

ஏழை எளிய பட்டியல் சமூக மாணவர்கள் அயல்நாடுகள் சென்று உயர்கல்வி பயில பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்! இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2021-22 -ல் ரூ.5.31 கோடி என்பது 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 84.87 கோடியாக உயர்த்தப்பட்டது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 2021-22 இல் 9 என்பது 2025-26 இல் 213 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

‘அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், கடந்த முறை ஏன் எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கவில்லை’ என எங்களைப் பார்த்து கேள்வி எழுப்பும் வன்னியரசு இந்தப் புள்ளிவிவரத்தை தெரிந்து கொண்டு பேச வேண்டும். நிதி தரவில்லை என்றால் எப்படி நிதி ஒதுக்கீடு உயர்ந்தது? பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வாறு கூடியது?

பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்களாக கொட்டுவதை அமைச்சர் வன்னியரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் எந்தத தொய்வும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த இந்த திட்டம், தவெக ஆட்சியில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் பொதுவெளியில் கேட்டுவிட்டார் என்ற வஞ்சகத்துடன் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூக வலைதளங்களில் தமது ஆதரவாளர்களைக் கொண்டு அந்த மாணவனை அசிங்கப்படுத்துவதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு விட்டு, இப்போது பாரதிதாசனை ’’தம்பி’’ என்று உருகுகிறார். இது கூட அந்த மாணவன் சிந்திய கண்ணீரும், எங்கள் தலைவர் ’’செலவை ஏற்று படிக்க வைப்போம்’’ என சொன்ன பிறகுதானே நடக்கிறது?தன்னுடைய தவறுகளை மறைக்க பொய்களை சொல்லி மடைமாற்ற பார்க்கிறது இந்த அரசு! அதற்கு உடந்தையாக இருக்கிறார் அமைச்சர் வன்னியரசு.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share