ADVERTISEMENT

பாரதிதாசன் கல்வி விவகாரம்: அரசியல் வேண்டாம்.. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் வன்னி அரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vanni arasu

மாணவர் பாரதிதாசனுக்கான கல்வி நிதி விரைவில் வழங்கப்படும் இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், ‘தனக்கு உரிய முறையில் தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை’ என்று நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, ‘மாணவர் பில்களை (Bills) உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை’ என்று சமூக நீதித்துறை விளக்கம் அளித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில், ‘மாணவருக்கு நிதியை ஒதுக்க முடியாது என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; திமுக அந்த மாணவனைப் படிக்க வைக்கும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அந்த மாணவன் உரிய ஆதாரங்களுடன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘என் கனவைச் சிதைக்கிறீர்கள்’ என்று தவெக அரசு மீது வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமுக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனின் முழுமையான படிப்புக்கு அரசு உதவி செய்யும். அவரது படிப்பு தொடர வேண்டும். மாணவர் பாரதிதாசன் முழுமையாகக் கல்வியை முடித்துவிட்டு வர வேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் விரும்புகிறோம்; எங்களது துறையும் தமிழக அரசும் அதைத்தான் விரும்புகிறது.

ADVERTISEMENT

ஒரு மாதத்திற்கு முன்பு நிதி வரவில்லை என்று சொன்னவுடன், கல்விக் கட்டணத்திற்கான நிதி 6 லட்சமும், வாழ்க்கைச் செலவினங்களுக்கான நிதி 6 லட்சமும் அனுப்பப்பட்டுள்ளது. மீதி பணத்தை அவர்கள் துறையில் கேட்டிருக்கிறார்கள்; அதுவும் விரைவில் அனுப்பப்படும். அதனால் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை; கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த அரசு தலித் மாணவர்களைப் பாதுகாக்கக்கூடிய அரசு. தலித் மாணவர்களுடைய கல்வியில் மிகவும் கவனம் செலுத்தக்கூடிய அரசு; சமூக நீதித் துறையும் அப்படித்தான் உள்ளது. ஆகவே, அந்த அடிப்படையில் இவ்வளவு நிதியை நாங்கள் ஒதுக்கியிருப்பது, கடந்த கால அரசின் சாதனையை நாங்கள் முறியடித்திருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது“ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ‘நேற்று இந்த விவகாரம் குறித்து முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் அலுவலகத்தில் இருந்து எங்களிடம் பேசினார்கள். இது ஒரு மாணவனின் கல்வி சார்ந்த விஷயம். தமிழ்நாட்டில் அந்த ஒரு மாணவன் மட்டும்தான் மூளைத் திசுக்கள் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுள்ளான். அவர் படித்துவிட்டு வர வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்; அவருக்கான ஆதரவை நாங்கள் தருகிறோம் என்று சொல்லியுள்ளோம். அதனால் இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் தெரிவித்தார்.

ஆவணங்களை மாணவன் வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, ‘நிர்வாகத்தில் இருந்து துறை ரீதியாகப் பல்கலைக்கழகத்திற்குச் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்றால், அதற்குப் பதில் மின்னஞ்சல்தான் அனுப்ப வேண்டும்; அதற்கு ஒரு வீடியோ வெளியிடுவது பதில் அல்ல. வீடியோவாக வெளியிடுவது ஏற்புடையது அல்ல. அந்த மாணவன் படித்துவிட்டு வெளியே வர வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறோம். இதில் எந்தக் குளறுபடியும் இல்லை; பணம் நிச்சயமாகச் சென்றுவிடும். அதனால் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பது எனது பார்வை’ என்றார்.”

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share