மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை தற்போதைய அரசால் வழங்க முடியாது என்றால், அதை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக அறிவித்துவிடட்டும். தி.மு.க அந்த மாணவனை படிக்க வைக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், தற்போதைய அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றும், தனது கல்வியையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், “இந்த நாட்டில் ரோஹித் வெமுலாவிற்கு என்ன நடந்ததோ, அதுதான் என் விஷயத்திலும் நடக்கிறது” எனத் தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளிப்படையாக நிதி தரமுடியாது என்றால் சொல்ல வேண்டும் என்றும் தன்னை அரசு மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது என்றும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பதிவில்,
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்; உங்களுக்கு என்ன தேவை என்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற முறையில், இந்தத் தம்பியின் கண்ணீர் என் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது சலுகை அல்ல; அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
“ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது” என்கிறார். அரசியல்ரீதியாக எதிர்க்கட்சியாகவே இருந்தாலும், அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை தற்போதைய அரசால் வழங்க முடியாது என்றால், அதை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடட்டும். தி.மு.க-வும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தை ஏற்று, அவரைப் படிக்க வைப்போம்!” என தெரிவித்துள்ளார்.
