ADVERTISEMENT

மின்வெட்டு, லண்டன் பயணம், புதிய தலைமை செயலகம்.. ரீல்ஸ் ஆட்சி.. விஜய் ‘சர்க்காரை’ விளாசிய எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Mathi

AIADMK EPS Vijay

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

மதுரையில் இன்று (செப்டம்பர் 17) செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: இன்றைய தினம் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இறைவனைப் பிரார்த்தனை செய்திருக்கின்ற இந்த நல்ல நேரத்தில் உங்களை நான் சந்திக்கின்றேன்.

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சர் விஜய், அண்மையில் தமிழகத்திற்குத் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றார். தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகச் செல்கின்ற முதலமைச்சர் அவர்கள், துறை சார்ந்த அமைச்சரை அழைத்துச் செல்லவில்லை. துறைச் செயலாளரையும் அழைத்துச் செல்லவில்லை. ஆனால், சம்பந்தமில்லாத அதிகாரிகளை எல்லாம் அழைத்துச் சென்று தொழில் முதலீட்டை ஈர்த்ததாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்தியாவில் சுமார் 32 இடங்களில் மதர்சன் நிறுவனம் உள்ளது. சென்னையிலேயே அதற்கு அலுவலகம் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அப்படி இருக்கின்றபோது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் லண்டனில் மதர்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

ADVERTISEMENT

இந்தியாவில் இருக்கின்ற நிறுவனம், தமிழகத்திலேயே கிளை நிறுவனம் இருக்கின்றபோது, இங்கேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கலாமே? இதற்காக லண்டன் சென்று அங்கே அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதன் நோக்கம் என்ன? அவர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போயிருக்கிறாரா அல்லது இன்பச் சுற்றுலா போயிருக்கிறாரா என்று மக்கள் கேட்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது; விவாதமும் நடைபெற்றது. பெரும்பாலான அந்த விவாதத்தில் அவர்களுடைய சொந்தப் பிரச்சினைகளைத்தான் சட்டமன்றத்தில் பார்க்க முடிந்தது. மக்களுடைய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் சட்டமன்ற நிகழ்வு நடைபெறுகிறது என்று சொன்னால், அதில் 3 மணி நேரம்தான் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகிறார்கள். மற்ற 7 மணி நேரம் சொந்தப் பிரச்சினைகள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும், எதிர்க்கட்சிகள் அதற்குப் பதிலளிப்பதுமாக நடந்து, அவையின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்கள் எள்ளி நகையாடக்கூடிய அளவிற்குச் சட்டமன்ற நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

ADVERTISEMENT

தற்போது தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. ஆனால், அமைச்சரைக் கேட்டால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று சொல்கிறார். எதார்த்தமான நிலை என்னவென்றால், தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருக்கிறது.

அவருடைய கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிற கூட்ட நிகழ்ச்சிகள், திருமாவளவன் கலந்துகொண்ட நிகழ்ச்சி, சிபிஎம் கட்சியின் செயலாளர் மரியாதைக்குரிய சண்முகம் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி, வருவாய் துறை அமைச்சர் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுவிட்டது. இவை எல்லாம் மின்வெட்டுக்கு சாட்சிகள். இப்படி இருக்கின்ற பொழுது, அந்தத் துறையின் அமைச்சரிடம் நிருபர் கேட்கின்ற பொழுது, தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்ற ஒரு கருத்தை சொல்கிறார்.

இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்களுடைய தூக்கம் தொலைந்து போகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.

மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே, அதே மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதை ஈடுசெய்ய 2,000 மெகாவாட் மின்சாரம் வெளியிலிருந்து வாங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியென்றால் மின்வெட்டு இல்லை என்றால், எதற்காக வெளிச்சந்தையிலிருந்து 2,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது?

இந்த அரசாங்கம் அமைந்த பிறகு புதிய அறிவிப்புகள் வெளிவரும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். தேர்தல் நேரத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மக்களுக்குத் தேவையான நன்மைகள் வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவிற்குப் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. பெரும்பாலான திட்டங்கள் வரவில்லை. மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.

இன்றைக்கு தமிழகத்தில் கடன் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் இதுவரை கிடைத்த தகவல்படி ரூ.40,000 கோடி கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இவ்வளவு கடன் இருக்கின்றபோது, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?

நிதிநிலையைச் சரிசெய்த பிறகு புதிய தலைமைச் செயலகம் கட்டலாம். அதுவும் மீனவர்கள் அதிகமாக வசிக்கின்ற, கடலோரமாக இருக்கின்ற, போக்குவரத்து நெரிசல் மிகுந்த, குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் அதிகமுள்ள ஒரு நெருக்கடியான இடத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது எந்த விதத்தில் சரி?

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. நேற்றைய தினம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வயதான வியாபாரி ஒருவரை, பட்டப்பகலில் சாலையில் இரண்டு பேர் தரதரவென்று இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றுள்ளனர். அவர் அணிந்திருந்த சங்கிலியையும் மோதிரத்தையும் பறித்துக்கொண்டு, பின்னர் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு நடக்காத நாளே இல்லை. எல்லா அமைச்சர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்; முதலமைச்சரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்; ஆட்சிக்கு வந்த பிறகு ஊழலே இல்லை என்று. ஆனால், முன்பு கொடுத்ததை வாங்கிக்கொண்டிருந்தார்கள்; இப்போது டிமாண்ட் பண்ணி வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு ஊழல் நிறைந்த அரசாங்கமாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சுமார் 25 சதவிகிதம் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், புளி, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share