ADVERTISEMENT

நவோதயா பள்ளிகள் வழக்கு: தமிழக மண்ணில் இந்தி கற்பிக்கக் கூடாது என கூற முடியாது – உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னது என்ன? முழு விவரம்!

Published On:

| By Mathi

Navodaya Schools Case: Supreme Court

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும்; நவோதயா பள்ளிகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ”தமிழக மண்ணில் இந்தி கற்பிக்கக் கூடாது என கூற முடியாது” என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நவோதயா பள்ளிகள்

ஜவஹர் நவோதயா வித்யாலயா (Jawahar Navodaya Vidyalaya – JNV) என்பது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், கிராமப்புறங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க உருவாக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளி. இது மத்திய அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தப் பள்ளிகளை Navodaya Vidyalaya Samiti என்ற அமைப்பு நிர்வகிக்கிறது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்த பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படும். 6-ஆம் வகுப்பில் சேருவதற்கு Jawahar Navodaya Vidyalaya Selection Test (JNVST) என்ற நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் 1986-ல் இருந்தே நவோதயா ஜவஹர் பள்ளிகளுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் நவோதயா பள்ளிகள் 1986-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இந்தப் பள்ளிகள் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. இந்த பள்ளிகளில் இந்தி உட்பட மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்த பள்ளிகளை அனுமதிப்பதன் மூலம் மத்திய அரசு இந்தி மொழி திணிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பது தமிழ்நாட்டின் எதிர்ப்புக்குக் காரணம். இதனால் தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அமையவில்லை.

ADVERTISEMENT

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் குமரி மகா சபா என்ற அமைப்பு ஒரு வழக்கு தொடர்ந்தது. ”தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க” கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ”தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று 2017-ம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. The State of Tamil Nadu v. Kumari Maha Sabha and others – SLP(C) 33459/2017 என்ற இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி, “தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்குத் தேவையான நிலம் எங்கு உள்ளது என்பதை மாநில அரசு கண்டறிய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

விஜய் அரசு முறையீடு

இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி தற்போதைய தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று செப்டம்பர் 17-ந் தேதி விசாரித்தது.

உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

இன்றைய விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், குமரி மகா சபா சார்பில் வழக்கறிஞர்கள் ஜி. பிரியதர்ஷினி, ராகுல் ஷ்யாம் பண்டாரி ஆகியோர் ஆஜராகினர்.

ஆட்சி மாற்றம் பற்றி..

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான ஜெய்தீப் குப்தா, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட 2025 டிசம்பர் 15-ஆம் தேதி உத்தரவைத் திரும்பப் பெறக் கோருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, “மாநிலத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்

இந்தி கற்பிப்பதை எதிர்க்கவில்லை.. ஆனால்

இதனையடுத்து வாதிட்ட ஜெய்தீப் குப்தா, “ நவோதயா பள்ளிகள் அமைப்பதையோ அல்லது இந்தி மொழி கற்பிக்கப்படுவதையோ தமிழக அரசு அடிப்படையில் எதிர்க்கவில்லை. ஆனால், நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கை மற்றும் அதில் இந்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தையே தமிழக அரசு எதிர்க்கிறது. இந்த பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் இந்தி மொழி முதன்மையாக இருக்கிறது; இது தமிழ்நாடு அரசின் தமிழ் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற மாநில சட்டத்துக்கு எதிரானது.

இது நேரடியாக மத்திய அரசு நடத்தும் பள்ளி அல்ல; Navodaya Vidyalaya Samiti என்ற அமைப்பால் நடத்தப்படும் பள்ளி. அதேநேரத்தில் இந்தி மொழியே முதன்மையாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளது. இந்த பிடிவாதம் என்பது அரசியல் சாசனம் வலியுறுத்துகிற ஒருமைப்பாட்டுக்கானது அல்ல; தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளுவதாகும். மும்மொழி கல்வி கொள்கையை மாநில அரசு எதிர்ப்பது தொடர்பான ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தமிழக அரசு தாக்கல் செய்த அந்த பிரமாணப் பத்திரத்தில், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கான பின்னணியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 1968 ஜனவரி 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தின்படி, பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டின் நீண்டகால மொழிக் கொள்கைக்கு முரணாக இருப்பதாக தமிழக அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ் மண்ணில் இந்தி கற்பிக்கப்படவே கூடாது என்ற நிலை இருக்க முடியாது

அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, “தமிழ் மொழி 2-வது மொழியாக இருக்க வேண்டும் என மாநில அரசு விரும்பினால் அது குறித்து பரிசீலனை செய்யலாம். இது தொடர்பாக மாநில அரசின் துறைசார் செயலாளர் மத்திய அரசின் துறைசார் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்” என்றார்.

மேலும், ”தமிழக மண்ணில் இந்தி கற்பிக்கப்படவே கூடாது என்ற நிலைப்பாடு இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றும் நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.

நிதி வழங்காத மத்திய அரசு- தமிழ்நாடு அரசு புகார்

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, “மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்தி மொழி கற்பிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

அதாவது, நவோதயா பள்ளிகள் தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு இடையே 2026 ஜனவரி 5-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தமிழக அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் நவோதயா பள்ளிகளின் மொழிக் கொள்கை, சட்டம், நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான தனது நிலைப்பாடுகளை மத்திய அரசிடம் தமிழ்நாடு எடுத்துரைத்ததாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், “மத்திய அரசானது தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.5,000 கோடி நிதியை ஏற்கெனவே வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போதைய புதிய திட்டங்களால் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் நிதிச் சுமைதான் ஏற்படும். இதை எப்படி மாநில அரசால் ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றும் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் 2024–25 மற்றும் 2025–26 நிதியாண்டுகளுக்கு மத்திய அரசின் பங்காக ₹3,998.82 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதில் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான ₹450.60 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ₹3,548.22 கோடி மத்திய அரசிடமிருந்து நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, “நிதி ஒதுக்கீடு பிரச்சனையும் மொழிப் பிரச்சனையும் வெவ்வேறானவை; பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும்” என்றனர்.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், “மாநில அரசு நிலம் மட்டும் கொடுத்தாலே போதும்; இதர கட்டமைப்பு செலவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்” என்றார். அத்துடன், “மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து வேறுபாடுகளுக்கு மத்திய- மாநில அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்; ஆனால் தமிழ்நாடு அரசு இத்தகைய நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காணக் கூட தயாராக இல்லை” என குற்றம் சாட்டினார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ்.

மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு பதில்

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, ”ஒரு நவோதயா பள்ளி அமைப்பதற்கு சுமார் 30 ஏக்கர் நிலம் தேவைப்படும். நவோதயா பள்ளிகளை ஏற்பதா? இல்லையா? என்பதிலேயே மாநில அரசு முடிவு எடுக்கவில்லை. அப்படியான ஒரு நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பள்ளிகளுக்காக 30 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்பது நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார்.

நீதிபதிகள் சொன்னது என்ன?

இதனை கேட்ட நீதிபதிகள், “மாநில அரசு உடனே நிலத்தை கையகப்படுத்துங்கள் என்று சொல்லவில்லையே… இந்த திட்டத்துக்கு பொருத்தமான நிலம் எது? என அடையாளம் காணத்தானே சொல்கிறோம்” என்றனர்.

இதனையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, “நவோதயா பள்ளிகள் திட்டம் என்பது மத்திய அரசின் கட்டாயத் திட்டம் அல்ல; மாநிலங்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய optional policy மட்டும்தான். அரசியல் சாசனத்தில் கல்வி பொதுப் பட்டியலில்- Concurrent List-ல் உள்ளது. அதனால் மாநில அரசுகளுக்கு கல்விக் கொள்கையை வகுக்கும் அரசியல் சாசன அதிகாரம் இருக்கிறது. ஆகையால் மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுதான் ஆக வேண்டும் என கட்டாய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அப்படி ஏற்றுத்தான் ஆக வேண்டும் எனில் இது தவறான முன்னுதாரணமாகும். அரசியல் சாசனம் வலியுறுத்தும் கூட்டாட்சி முறையை பாதிக்கும்” என்றார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி நாகரத்னா, “கல்வி Concurrent List-ல் இருக்கிறது. கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative Federalism) என்பது இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினால் நிலைமை என்ன ஆகும்?” என கேள்வி எழுப்பினார்.

கூட்டுறவு கூட்டாட்சி ஒருவழிப் பாதை அல்ல..

இதற்குப் பதிலளித்த ஜெய்தீப் குப்தா, “கூட்டுறவு கூட்டாட்சி என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. அது இரு திசைகளிலும் செயல்பட வேண்டும். மாநில அரசு மட்டுமே மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூற முடியாது” என வாதிட்டார்.

அத்துடன், “தமிழக அரசு தனது சொந்த கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்தலாம்; தனது பாடத்திட்டத்தையும் பின்பற்றலாம். நவோதயா பள்ளிகள் வருவது என்பது தமிழக அரசுப் பள்ளிகள் அல்லது பாடத்திட்டத்தில் தலையிடுவது அல்ல” என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த ஜெய்தீப் குப்தா, “இது மனநிலை தொடர்பான பிரச்சினை அல்ல. ஒரு மாநில அரசுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் சார்ந்த பிரச்சினை” என்று வாதிட்டார்.

38 மாதிரி உறைவிடப் பள்ளிகள்

மேலும், “தமிழ்நாட்டில் கல்வி வசதிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதால் புதிதாக ஒரு திட்டத்தைக் கொண்டுவர வேண்டிய நிலை இல்லை. கல்விக்காக மாநில அரசு சுமார் ₹45,000 கோடி செலவிடுகிறது. தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தேவைகள் ஏற்கெனவே சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன” என தெரிவித்த ஜெய்தீப் குப்தா, தமிழக அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் ஏற்கெனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒன்று என 38 மாதிரி உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், புதிதாக நவோதயா பள்ளிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கலாம் என ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, இந்த 38 மாதிரி உறைவிடப் பள்ளிகளில் ஒவ்வொன்றுக்கும் சுமார் ₹50 கோடி மூலதனச் செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து பள்ளிகளையும் இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஆண்டுக்கு சுமார் ₹210 கோடியை மாநில அரசு செலவிட்டு வருகிறது. 2024–25 கல்வியாண்டில் இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த 1,340 மாணவர்கள் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும் சில மாணவர்கள் முழு நிதியுதவியுடன் வெளிநாடுகளில் படிப்பதற்கான கல்வி உதவித்தொகைகளையும் பெற்றுள்ளதாக தமிழக அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியை சென்னையும் சென்னையை டெல்லியும் ஒதுக்க கூடாது

இதற்கு நீதிபதி நாகரத்னா, “உங்கள் மாநிலத்தில் கல்விக்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் அறிவோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது என்பதையும் அறிவோம். கூடுதலாக ஒன்று (நவோதயா பள்ளிகள்) வருவதால் உங்கள் தரம் குறைந்துவிடாது. டெல்லியில் இருந்து வரும் கல்வி சென்னையின் கல்வித் தரத்தைக் குறைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதேநேரத்தில் சென்னையில் இருப்பவர்கள் டெல்லியை ஒதுக்கக்கூடாது; அதேபோல் டெல்லியும் சென்னையை ஒதுக்கக்கூடாது.

நாங்கள் உங்களை ஒதுக்கவில்லை; அவர்களையும் ஒதுக்கவில்லை. உங்கள் மாநிலத்தில் மேலும் ஒரு வகையான பள்ளிகள் வருவது, ஏற்கெனவே உயர்ந்த நிலையில் இருப்பதாக நாங்கள் அறிந்துள்ள தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தவே செய்யும். ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் என்று கூற முடியாது. இன்று அது கல்வித் துறையாக இருக்கலாம்; நாளை வேறொன்றாக இருக்கலாம். உங்கள் மனதிலிருக்கும் இந்த இறுக்கமான நிலையை நீங்கள் தளர்த்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தின் கல்வித் தரத்தைக் குறைக்கும் என்ற நிலை இருந்திருந்தால், நீங்கள் என்ன கூறினாலும் அதற்கு எதிராக நாங்களே கருத்து தெரிவித்திருப்போம். ஆனால் இங்கு அப்படியில்லை. இது மேலும் வாய்ப்புகளை வழங்கும். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

புதுவையில் நவோதயா பள்ளிகள்

இதைத்தொடர்ந்து குமரி மகா சபா சார்பில் வழக்கறிஞர்கள் ஜி. பிரியதர்ஷினி மற்றும் ராகுல் ஷ்யாம் பண்டாரி வாதிடுகையில், “ நவோதயா பள்ளிகள் மூலம் கிடைக்கக்கூடிய இலவசக் கல்வி வாய்ப்பை தமிழக மாணவர்களுக்கு மாநில அரசு மறுக்க முடியாது. தமிழ் மொழி பேசப்படுகிற புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்” என்றனர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர், ”நவோதயா பள்ளிகளை ஏற்பதில் தமிழ்நாடு அரசு திறந்த மனதுடன் இருக்க வேண்டும். – சர்ச்சைக்குரிய அம்சங்கள் தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றனர்.

சரணடைந்துவிட்டதாகிவிடாது

ஆனால் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, “கொள்கை முடிவு விவகாரங்களுக்குள் நீதிமன்றம் செல்லக் கூடாது” என குறுக்கிட்டார்.

இதற்கு நீதிபதி நாகரத்னா, “மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே நீங்கள் மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டதாக ஆகிவிடாது” என்றார்.

இந்த வாதங்களைத் தொடர்ந்து, ”தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதையும், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையும் காரணங்களாக காட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை” என நீதிபதிகள் பதிவு செய்தனர்.

இதன் பின்னர் , தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டபடி முந்தைய உத்தரவைத் திரும்பப் பெற மறுத்து

  • எது எப்படியிருந்தாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை அடையாளம் காண வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி பிறப்பித்த உத்தரவை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்.
  • 3 மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காண வேண்டும்.
  • 3 மாதங்களில் மொழிக் கொள்கை உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் சொல்வது என்ன?

இதற்கிடையே நவோதயா பள்ளிகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், 1986-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கிராமப்புறங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு தரமான நவீன கல்வியை வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 666 மாவட்டங்களில் 689 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாததால் தமிழகத்தில் இதுவரை ஒரு நவோதயா பள்ளிகூட தொடங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மொழிக் கொள்கை தொடர்பான தமிழக அரசின் எதிர்ப்புக்கும் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் நவோதயா பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பிராந்திய மொழி அல்லது ஆங்கிலம் பயிற்றுமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதாகவும், சில மாணவர்கள் பிராந்திய மொழியில் எழுதுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதாகவும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக நவோதயா பள்ளி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான நிலம் மற்றும் நிதி கிடைப்பதும் முக்கியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு நவோதயா பள்ளிக்காக மாநில அரசு சுமார் 30 ஏக்கர் பொருத்தமான நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும். நிரந்தரப் பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரையிலான 3 முதல் 4 ஆண்டுகளுக்கு சுமார் 240 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்குத் தேவையான தற்காலிகக் கட்டடத்தையும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வாடகையின்றி மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதில் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share