தந்தை வைகோ மீதான கோபத்தால் மதிமுகவையே கலைத்துவிட்டு திமுகவில் சேருகிறேன் என மு.க.ஸ்டாலினிடம் சொன்னவர்தான் துரை வைகோ என திமுக முன்னாள் அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசுகையில், “ திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? என்னோட எம்.பி பதவியை திமுக பிச்சை போட்டதாக வைத்துக்கொண்டாலும், கொளத்தூரில் ஸ்டாலினுக்கே மக்கள் பிச்சை போடவில்லையே” என பேசியிருந்தார்.
இந்நிலையில் திருச்சியில் இன்று (செப்டம்பர் 17) செய்தியாளர்களை கே.என். நேரு சந்தித்தார். அப்போது, ஸ்டாலின் மீதான துரை வைகோவின் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கே.என்.நேரு அளித்த பதில்: அவர் (துரை வைகோ) ரொம்ப சின்னப் பிள்ளை; ரொம்ப அதிகமா பேசுறாரு. அவர் என்ன சொன்னாருன்னு எங்களுக்குத் தெரியும்.
‘எங்க அப்பா (வைகோ) கோவக்காரரு, கொஞ்ச நாள் பொறுங்க.. என்னால எல்லாம் கட்சி (மதிமுக) நடத்த முடியாது, பொறுங்க.. நான் உங்களோட வந்துறேன்’னு என்று (ஸ்டாலினிடம்) சொன்னவர்தான்.. ..
அவர் எப்போ, எதைப் பேசுறாருன்னு தெரியல. எங்களுடைய வளர்ச்சி நின்னு போச்சுங்குறாரு; வெற்றி அடைஞ்ச வேட்பாளர் அவங்களோட போயிருந்தா வளர்ச்சி வந்திருக்குமானா தெரியல. கடுமையாதான் பேசுறாரு அவரு. அப்படிப் பேசுறது நியாயம் இல்ல.
நாங்களும் திருப்பிப் பேசினா என்ன ஆகும்? பேஸ்புக்ல வருது, யூடியூப்ல வருது… அவங்களைப் பத்தியெல்லாம் வருது.
எங்களைப் பத்தி எல்லாம், தளபதியைப் பத்தி எல்லாம் (ஸ்டாலினை) பேசலாமா? அப்ப அவர் பொறந்திருக்கவே மாட்டாரு.. என்ன பண்றது? இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
