M.K. Stalin’s MISA Arrest: Durai Vaiko Echoes Vijay: திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கொடூர அடக்குமுறைகளை எதிர்கொண்டது குறித்து மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ விமர்சன கருத்துகளை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலடியாக துரை வைகோவின் தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, ஸ்டாலின் சந்தித்த மிசா கொடுமைகளை பேசும் பழைய வீடியோவை திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
துரை வைகோ பேசியது என்ன?
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று (செப்டம்பர் 11) துரை வைகோ கூறியதாவது: மிசா (Maintenance of Internal Security Act) சட்டம் நாட்டினுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவசர நிலை காலத்தில், 1975–76-ல் கொண்டுவரப்பட்டது. யார் கொண்டு வந்தார்கள் என்றால், காங்கிரஸ் கொண்டு வந்தது.
அது மிகப்பெரிய ஒடுக்குமுறை சட்டம் என்று சொல்லலாம். அதில் காங்கிரஸ் அல்லாத பிற இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்களாக இருக்கட்டும், திராவிட இயக்கங்களாக இருக்கட்டும், இந்தியாவில் இருந்த அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
அந்த நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற கைதுகளைப் பொறுத்தவரை அது கண்டிக்கத்தக்கது. அது ஒரு வரலாற்றுப் பிழை. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
அது ஒரு படிப்பினை. இனிமேல் யாருமே இப்படிப்பட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வரக்கூடாது என்பதற்கு மிசா சட்டமே ஒரு எடுத்துக்காட்டு.
அதேவேளையில், மிசா சட்டத்தின் கீழ் நடைபெற்ற கைதுகளைப் பொறுத்தவரை அரசியல் காரணங்கள் மட்டுமல்லாது, பிற காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் போன்றவர்களும் அன்றைக்கு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.
மிசாவைப் பொறுத்தவரை, அன்றைய தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதலில் கைது செய்யப்பட்டவர் எங்கள் இயக்கத் தலைவர் வைகோ அவர்கள்; கடைசியாக விடுதலை பெற்றவரும் தலைவர் வைகோ அவர்கள். இது ஒரு வரலாற்று உண்மை.
அந்த நேரத்தில் மிசா சட்டத்தில் கைதானவர்களில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். அன்றைக்கு மிசா சட்டத்தில் கைதாகி மிகவும் சங்கடப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இன்று திமுகவில் இல்லை. எங்கள் தலைவரைப் பொறுத்தவரை, அவரும் திமுகவிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அதுபோல இன்று திமுகவிலிருந்து வெளியே இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
திராவிட இயக்கத் தலைவர்களாக இருக்கட்டும், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கட்டும், மிசா சட்டத்தில் நிறைய பேர் கைது செய்யப்பட்டார்கள்.
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக, இன்றைக்கு நான் பல பேரிடம் கேட்கும்போதும், பழைய செய்திக் குறிப்புகளைப் பார்க்கும்போதும், “இதில் என்ன உண்மை? யார் சொல்வது உண்மை?” என்று கேட்டிருக்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நான் விரும்பவில்லை.
பொதுவாக அவர்கள் சொல்வது என்னவென்றால், அரசியல் காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேவேளையில் பிற காரணங்களுக்காகவும் அந்த நேரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
இது பத்திரிகைக்காரர்களான உங்களுக்கு நன்றாகவே தெரியும். பழைய செய்திகளைப் பார்த்தாலே தெரியும்.
மிசா காலத்தில் அவர் கைது செய்யப்பட்டது உண்மைதான். அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கான காரணம் முழுக்க முழுக்க அரசியல் காரணமா என்று எடுத்துக்கொண்டால், 100 சதவிகிதம் கிடையாது என்று நான் சொல்லுவேன்.
புரிகிறதா உங்களுக்கு? மிசா காலத்தில் கைதானது உண்மைதான். அதை மறுக்கவில்லை. ஆனால் 100 சதவிகிதம் அரசியல் காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அன்றைய மிசா காலத்தில் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பழைய கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள்; என்ன நடந்தது என்று சொல்வார்கள்.
அரசியல் நாகரிகம் கருதி நான் சில விஷயங்களைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் நான் சொல்வது ஒன்றுதான்: அன்றைக்கு அவர் 100 சதவிகிதம் அரசியல் காரணத்திற்காகத்தான் கைது செய்யப்பட்டார் என்று சொன்னால், இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.
முதலமைச்சர் சகோதரர் ஜோசப் விஜய் அவர்கள் தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவருடைய சைகை, அவருடைய gesture-ஐ பொறுத்தவரை, “நான் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிப்பிட்டு அதைச் செய்யவே இல்லை” என்று அவர் அதற்கான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
இன்றைக்கு, “என்னைப் பார்த்துத்தான் அந்த மாதிரி சொன்னார்; என்னைப் பார்த்துத்தான் செய்தார்” என்று இவர்களே சொல்லி, அதன் மூலம் ஒருவிதமான அனுதாபத்தைத் தேடுவது போல எனக்குத் தெரிகிறது. இவ்வாறு துரை வைகோ கூறினார்.
மகன் துரை வைகோவுக்கு அப்பா வைகோ பதிலடி
இதனிடையே துரை வைகோவின் இந்த விமர்சனத்துக்கு பதில் தரும் வகையில் அவரது தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ முன்னர் பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் வைகோ பேசியிருப்பதாவது: நள்ளிரவு ஜூன் 25, ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்கள். 48 மணி நேரத்திற்குள்ளாக நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்து, தானே எழுதி கொண்டு வந்த தீர்மானத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயற்குழுவிலே அண்ணன் கலைஞர் நிறைவேற்றினார்.
டிசம்பர் திங்களிலே கோவையிலே மாநில மாநாடு. ஜனவரி திங்கள் இறுதியிலே ஆட்சி கலைக்கப்பட்டது. சர்வாதிகாரக் கொடுவாள் வீசப்பட்டது.
திருமணமாகிய 5 மாதங்களில், வாலிபத்தின் வசந்தத்தைக் காண வேண்டிய நாளில், மணமகளோடு இருக்க வேண்டியவரை காராகிரகத்துக்கு அண்ணன் கலைஞர் அனுப்பி வைத்தார்.
ஸ்டாலின் சிறைச்சாலையில் தாக்கப்படுகிறபோது, கன்னத்தில் ஓங்கி முதலில் விழுந்த அறையோடு அடுத்தடுத்த அடிகள் பாய, தங்கத் தமிழ்மகனை (ஸ்டாலினை) காப்பாற்ற, தன்னையே பலியாக்கிக் கொள்ளத் துணிந்து பாய்ந்தான் சிங்கமகன் சிட்டிபாபு.
சிறைச்சாலையிலிருந்து, நெருக்கடி நிலை காலத்தில், பாளையங்கோட்டை சிறையிலிருந்து வாரத்துக்குப் பத்து கடிதங்களில், ஒரு கடிதத்தைக் குடும்பத்தாருக்கும், ஒன்பது கடிதங்களை வேறு சிறைகளில் இருப்போருக்கும் எழுதி வந்தேன்.
அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் பதில் மடல் எழுதினார். சிட்டிபாபு தாக்கப்பட்டதைக் குறித்து எழுதினார். “உயிர் அன்புச் சகோதரா…” என அண்ணன் முரசொலி மாறன் எழுதிய அந்த மடலை இன்னும் வைத்திருக்கிறேன். இவ்வாறு அதில் வைகோ பேசி உள்ளார். இந்த வீடியோவை திமுகவினர் பகிர்ந்து துரை வைகோவுக்கு பதிலடி தந்து வருகின்றனர்.
