முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் மனம் திறந்து பேசியுள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ”கரூர் சம்பவத்திலே விஜய் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேனா, இல்லையா? ஏன் வழக்கு போடவில்லை? எதற்காக லிபரலாக நடந்துகொண்டீர்கள்?
அவர் மீது வழக்கு போட என்ன தயக்கம்? காலம் தாழ்த்தி வந்தார், வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால் தான் கும்பல் கூடியது, நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் தான் சாவுக்குக் காரணம் என்கிறபோது, அதற்குப் பொறுப்பேற்கக்கூடிய அத்தனை பேரையும் வழக்கிலே சேர்த்திருக்க வேண்டுமா, வேண்டாமா?
இந்த அணுகுமுறைதானே காரணம்? அப்போதே விஜய் அவர்களின் அரசியலை அம்பலப்படுத்தி இருக்க வேண்டுமா, வேண்டாமா? உங்களைக் குறிவைத்து, திமுகவைக் குறிவைத்து மிகக் கடுமையாக விஜய் பேசும்போது, விஜய்க்கு எதிர் அரசியலைப் பேசி இருக்க வேண்டும்.
நீங்கள் யாருமே பேசவில்லை. நான் பேசினேன், ‘ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை’ என்று நான் பேசினேன். அன்றைக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இன்றைக்கு எப்படி நம்பிக்கை வந்தது? அவர் அதிமுக ஆதரவைக் கேட்கவில்லை. பாமக ஆதரவைக் கேட்கவில்லை. பாஜக ஆதரவைக் கேட்கவில்லை.
காங்கிரஸின் ஆதரவைக் கேட்டார். திருமாவளவனின் ஆதரவைக் கேட்டார். நாங்கள் விமர்சித்தோம்.
‘நீ ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை’ என்று சொல்லிவிட்டு, எப்படி திருமாவளவன் விஜயோடு கைகோர்த்தீர்கள் என்று கேட்கிற நீங்கள், அதே விஜயைத் திருப்பித் கேட்கலாம்ல? ‘உங்களை ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைன்னு சொன்னாரே திருமாவளவன், எப்படி நீங்க அவருடைய ஆதரவைக் கேட்கிறீங்க?’ன்னு நீங்கள் கேட்கலாமா? உங்களை எதிரியா விமர்த்த ஆள்தானே. ஏன் விஜயை நோக்கி யாரும் அந்த கேள்வியைக் கேட்கவில்லை?
அவர்தானே எங்ககிட்ட வந்தார், நாங்க அவர்கிட்ட போகலையே. அவருக்குத்தானே தேவை இருந்தது, எங்களுக்குத் தேவை இல்லையே.
அவருடைய ஸ்டாண்ட் மாறுது. நாங்க வந்து இப்படித்தான் இருக்கப் போறோம், மதச்சார்பின்மையில்தான் இருக்கப் போறோம்.
இப்போது, கூட்டணிக்குப் பெயர் வைத்ததில் நான் சொன்னேன். விஜய் சொன்னார்… இதையெல்லாம் நான் சொல்லவேண்டிய தேவை இருக்கிறது, பெருமைக்காகச் சொல்லவில்லை
முதலமைச்சர் விஜய் அவர்கள் இருந்து சொன்னார், ‘இந்த கூட்டணிக்கு நான் ஒரு பேர் வைக்கப்போறேன், நீங்க வரவேற்று ஆதரிக்கணும்’னு சொன்னார். ஆவலோடு எதிர்பார்த்தோம். ‘சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்று சொன்னார்.
உடனே நான் எழுந்தேன். தேர்தல் முடிவு வந்த நேரத்தில் நடந்ததெல்லாம் சொன்னேன். ‘நீங்க எப்படி ஆட்சியமைக்கப் போறீங்கன்னு தமிழ்நாடு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தது. நான் நினைச்சேன், என்ன நினைச்சேன்னு சொன்னா… நீங்க அதிமுக ஆதரவு பெற்றுத்தான் ஆட்சியமைக்கப் போறீங்கன்னு நான் நினைச்சேன். தேசிய ஜனநாயக முன்னணியினுடைய ஆதரவோடுதான் நீங்க ஆட்சியமைக்கப் போறீங்கன்னு நினைச்சேன், எங்களை நோக்கி நீங்க வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.
காங்கிரஸோடு நீங்கள் நெருக்கம் காட்டினீங்க, எனக்கு தூக்கி வாரிப்போட்டுச்சு, அதிர்ச்சியா இருந்தது. காங்கிரஸோடு நெருக்கமாக இருக்கிற எந்தக் கட்சியையும் பிஜேபி விட்டுவைக்காது, குறிவைத்து விடுவார்கள், நெருக்கடி தருவார்கள். ஆனால் துணிச்சலா நீங்க காங்கிரஸ் ஆதரவைப் பெற்றுக்கிட்டீங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்தது. அப்போதே நான் முடிவு செய்தேன், நீங்கள் துணிச்சலாக ஏதோ முடிவெடுத்திருக்கிறீர்கள்.
ஆனாலும் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. திமுகவைத் தனிமைப்படுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ, பின்னணியில் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் இருக்கிறார்களோ என்று நான் தயங்கித்தான், இடதுசாரிகள் எடுக்கிற முடிவோடு விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து முடிவெடுப்போம் என்று சொன்னேன். நான் சொன்னதற்கு இதுதான் காரணம்.
இடதுசாரிகள் மதச்சார்பின்மையில் உறுதியாக இருப்பார்கள். அவங்க என்ன முடிவெடுத்தாலும் அந்த முடிவை நாம எடுப்போம், அப்படின்னு நான் துணிச்சலா சொன்னேன்.
இடதுசாரிகள் பிரசிடெண்ட் ஆட்சி வந்துவிடாமல் தடுப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள், நாங்களும் எடுத்தோம். காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவு தந்தது, இடதுசாரிகள் ஆதரவு தந்தார்கள், நாங்களும் ஆதரித்தோம். காரணம், குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கு வந்திடக் கூடாது, வந்தா அது பிஜேபி ஆட்சியா மாறிப் போயிரும், அதைத் தடுக்கணும். இரண்டாவது, மதச்சார்பற்ற சக்திகளாக இருக்கிற காங்கிரஸையும் இடதுசாரிகளையும் நீங்கள் உள்வாங்கி கொண்டபோது, அங்கேதான் விடுதலைச் சிறுத்தைகள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம்.
இதை திமுகவிடமும் நாங்கள் சொன்னோம். சொல்லிட்டுத்தான் நாங்க வெளியே வருவதாக முடிவு பண்ணோம்.
மதச்சார்பின்மை என்கிற கருத்துக்கு இந்த பெயரிலேயே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்… ஆனால் அதில் ஏதாவது ஒரு இடத்தில், ’மதச்சார்பற்ற’ என்கிற சொல் இருக்க வேண்டும்.
சொன்னவன் திருமாவளவன்.
உடனே அவர் ஒப்புக்கொண்டார். ‘சார், அது ஒன்னும் தப்பில்ல சார்… மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்று வைக்கப்பட்டது.
நீங்க ‘மதச்சார்பற்ற’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் ஆன்டி பிஜேபி என்கிற நிலைப்பாட்டில் ஏதோ ஊசலாட்டம் இருக்கிறது என்று விமர்சனம் செய்வார்கள். பாஜகவை எதிர்க்க தயக்கம் காட்டுகிறீர்கள் என்பார்கள். சமூக நீதி என்றால் அவர்களும் சில நேரங்களில் சமூக நீதி பேசுகிறார்கள். EWS அவர்களால் தான் வந்தது. . முன்னேறிய சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுப்பது சமூகநீதிதான்.
இப்போது பாஜகவும் சமூகநீதிதான் பேசுகிறது. சாதியவாதிகளும் சமூக நீதி அரசியல் பேசுகிறார்கள். இடதுசாரிகளும் சமூக நீதி அரசியல் பேசுகிறார்கள். நீங்களும் சமூக நீதி அரசியல் பேசுகிறார்கள். அதனால் சமூக நீதி பொதுவாகிவிடும். மதச்சார்பற்ற என்று போட்டால்தான் மைனஸ் பிஜேபி என்று வரும். மைனஸ் ஆர்.எஸ்.எஸ். என்று வரும்.
எனவே, மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற குரலை உயர்த்தியவன் திருமாவளவன்!
சமூக வலைத்தளங்களில் யார் எதைப் பேசினாலும் அதைக் கண்டுகொள்ள வேண்டாம், எதிர்வினையாற்ற வேண்டாம்” என்று விசிகவினரிடம் கேட்டுக்கொண்டார்.
