கூட்டணியை காப்பாற்றும் முயற்சியை திமுக எடுக்கவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த விசிக, தற்போது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் தருமபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்,
“தேர்தல் முடிவு வெளியான பிறகு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவை நாம் எடுத்தோமா?
இன்னைக்கு நான் சொல்லுகிறேன். எங்களை அந்த கூட்டணியில் கட்டிப்போடுகிற முயற்சியை, அல்லது அங்கேயே நிலைநிறுத்துகிற முயற்சியை, அல்லது அந்த கூட்டணியைக் காப்பாற்றுகிற முயற்சியை திமுகவால் எடுக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதை யாரும் விவாதிக்கவில்லை.
காங்கிரஸோடு நல்ல உறவைப் பேணிக் காத்திருந்தால் காங்கிரஸ் உடனே வெளியேறி இருக்குமா? காங்கிரஸோடு அவர்களின் உறவு, திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு தேர்தலுக்கு முன்பு பேச்சுவார்த்தையின் போது எப்படி இருந்தது?
இடதுசாரிகளுக்கும் திமுகவுக்கும் இடையிலான தேர்தல் நேரத்தின் பேச்சுவார்த்தை, அந்த அணுகுமுறை, அந்த உறவு ஆரோக்கியமானதாக இருந்ததா?
திடீரென கடைசி நேரத்தில் தேமுதிகவைக் கொண்டுவந்து கூட்டணியிலே சேர்த்தது, கூட்டணியில் ஏற்கனவே இடம் கொண்டிருந்த கட்சிகளுக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்ததா?
நீண்ட காலம் திமுகவோடு பயணித்தவர்கள் போட்டியிட, தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, திடீரென கட்சியில் சேர்ந்த ஒரு… கூட்டணியில் சேர்ந்த ஒரு கட்சிக்கு யாரும் எதிர்பாராத எண்ணிக்கையைத் தந்தபோது, அந்த கூட்டணியில் நீண்ட காலம் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா? எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதை யாரும் விமர்சிக்கவில்லை, யாரும் பேசவில்லை.
நல்லுறவு, நல்லிணக்கம் என்பது கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு இடையில் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தலைமை தாங்குகிற இயக்கத்திற்குத்தான் உண்டு!
எந்த நெருக்கடியாக இருந்தாலும், அந்த நெருக்கடியை எதிர்கொண்டு கூட்டணியில் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டைத் தோழமைக் கட்சிகள் எடுக்க வேண்டுமானால், நல்லிணக்கமான உறவுதான் முக்கியமானது.
தோற்றது பிரச்சனை இல்லை. அந்த friendship, அந்த relationship… இரண்டு கட்சிக்கும் இடையிலான அந்த உறவு, அந்த நட்புதான் பிணைக்கும். ‘தோற்றுப்போனாலும் பரவாயில்லை, கூட இருப்போம்’ அப்படின்னு அவங்க முடிவெடுக்கணும். அப்படி முடிவெடுக்கக்கூடிய அளவுக்கு உறவு இல்லை; அதுதானே உண்மை?
காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையிலே இருந்த உறவு எப்படி கசந்துபோனது என்பதை யாரும் விவாதிக்கவில்லையே? பேசவில்லையே? உடனே அவர்கள் கட்சி விட்டு… கூட்டணி விட்டு வெளியேறியதற்கும் வெறும் பதவிதான் காரணமா? அமைச்சர் பதவிதான் காரணமா? அதைத் தாண்டி இந்த கூட்டணியிலே அவர்கள் நின்றுருக்கக்கூடிய அளவுக்கு உறவு நல்லிணக்கமானதாக இருந்திருக்க வேண்டாமா?
அங்கே நல்லிணக்கம் இல்லை என்பது முக்கியமான ஒரு செய்தி” என்று குறிப்பிட்டார்.
