தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மீண்டும் தமிழக அரசியல் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ள நிலையில் தற்போது தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மதுராந்தகம் தனி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் பரந்தாமனும், தாராபுரம் தனி சட்டப்பேரவை தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் திமுக சார்பில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை திமுக தலைமை இன்று (செப்டம்பர் 11) நியமித்துள்ளது .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மதுராந்தகம் (தனி) தொகுதி
- தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
- க.சுந்தர் (காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
தாராபுரம் (தனி) தொகுதி
- மு.பெ.சாமிநாதன் (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
- இல.பத்மநாபன் (திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
அருகில் உள்ள கழக மாவட்டத்தினர் பொறுப்பாளர்களுடன் இணைந்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

