புதிய தலைமைச் செயலகம்: மீனவ மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது முக்கியம் – வன்னியரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் அமைப்பதில் மீனவ மக்களுடைய கோரிக்கைகளையும் பரிசீலிப்பது மிகவும் முக்கியமானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னியரசு தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 110-ஆம் விதியின் கீழ், “சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும்” என முதலமைச்சர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டுவதற்குப் பட்டினப்பாக்கம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக எனப் பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “புதிய நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி தான் செலவானது எனும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைக்க ரூ.1,200 கோடியா?” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, “சட்டப்பேரவையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த காலங்களில் இந்தத் தலைமைச் செயலகத்தை வேறு வேறு இடங்களுக்கு மாற்ற முன்னாள் முதல்வர், மரியாதைக்குரிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயற்சித்தபோது ஓமந்தூரார் வளாகம் முதலில் தலைமைச் செயலகமாகத் தான் கட்டப்பட்டது; பின்னர் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

அதேபோல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரும் அந்த முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுதும் பல்வேறு எதிர்ப்புகள் வந்ததால் அது கிடப்பில் போடப்பட்டு, எந்தச் செயல்பாடும் இல்லாமல் உள்ளது.

ADVERTISEMENT

இந்த முறை இதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எல்லாரும் ஒத்த கருத்துக்களோடு இணைந்துதான் அதைக் கட்டி முடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

மீனவ மக்களுடைய கோரிக்கைகளையும் பரிசீலிப்பது மிகவும் முக்கியமானதுதான். அதனால் எல்லாரும் கலந்துபேசி முதலமைச்சர் இதுகுறித்து நல்ல முடிவை அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share