இமானுவேல் சேகரனார் நினைவு தினம்: அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

Published On:

| By Pandeeswari Gurusamy

தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் மரியாதை

இன்று காலை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜீவ், விக்னேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் இமானுவேல் சேகரனாரின் புதிய மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு மற்றும் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

பலத்த போலீசார் பாதுகாப்பு:

நினைவு தினத்தை ஒட்டி பரமக்குடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட 3 டி.ஐ.ஜி.க்கள், 24 மாவட்ட எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 8,000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம். நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share