திமுகவினர் அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்குள் இவ்வளவு போட்டி நடக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்; அவர்களை நாங்கள் தனியாகப் பழிவாங்க வேண்டுமா? இத்தனை ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு கொள்ளையடித்தீர்கள், என்னென்ன செய்தீர்கள் என்பதைப் பார்த்து மக்கள் உங்களை வீசியெறிந்துவிட்டார்கள்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தீய சக்தியான திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறினார்கள். அதற்காகவே அந்த கட்சியை தொடங்கினார்கள். ஆனால், தற்போது திமுகவை நமது தலைவர் விஜய் முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டார்.
இனிமேல் அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விட்டுவிட்டு, அவர்கள் வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்குள் இவ்வளவு போட்டி நடக்கிறது; ஏனெனில், அதில் தான் அனைத்துச் சொத்துகளும் உள்ளன. அந்த அறக்கட்டளையை எந்தக் குடும்பம் கைப்பற்றுவது என்பதில் தான் போட்டியே நடக்கிறது. அறக்கட்டளையைக் கைப்பற்றியவுடன், அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.
நமது தலைவர், உங்கள் அண்ணன் விஜய் தீய சக்தியை முற்றிலுமாக ஒழித்துவிட்டார். இனி நாம் மக்களுக்குத் தேவையான மக்கள் அரசியலை முன்னெடுப்போம். உங்களுக்குத் தேவையான அனைத்தும் நிச்சயமாகக் கிடைக்கும். வரும் ஐந்து ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவோம்” எனத் தெரிவித்தார்.
