இந்தியா கூட்டணியில் தவெக இருக்கிறதா.. விஜய் பிரதமர் வேட்பாளரா? மாணிக்கம் தாகூர் பளிச் பதில்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக-விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்களோ, அப்போது தவெக-வை நாங்கள் இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளச் சொல்வோம். நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாதவர்களை நாங்கள் ‘வாருங்கள், வாருங்கள்’ என்று அழைத்துக் கொண்டிருக்க முடியாது என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று இரவு (ஆகஸ்ட் 23) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியா கூட்டணியில் தவெக, திமுக ஆகிய கட்சிகள் இருக்கின்றனவா இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்குப் பதிலளித்த அவர், “இந்தியா கூட்டணி என்பது டெல்லியில் மோடி, அமித் ஷாவை எதிர்த்துப் போராடும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் எல்லாம் சேர்ந்து அமைத்த கூட்டணியாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிகள் எவையெல்லாம் இருக்கின்றன? 26 கட்சிகள் சேர்ந்து, அந்த இந்தியா கூட்டணி ஏப்ரல் மாதம் வரை இயங்கிக் கொண்டிருந்தது.

ADVERTISEMENT

மே மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு, அதில் இருந்த ஒரு கட்சி ‘நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை, நாங்கள் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம்; இந்தியா கூட்டணியே அழிந்துவிட்டது’ என்று கூறி சாபம் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்கள். அது யார் என்று உங்களுக்குத் தெரியும்.

அதற்கு அடுத்து அவர்களோடு சேர்ந்து அமைதியாக இரண்டு பேர் விலகி வந்தார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும். தேமுதிக-வும், கமலஹாசனின் மநீம கட்சியும் அமைதியாக வந்துவிட்டார்கள். அவர்களும் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டதாக வெளியில் சொல்ல மறுக்கிறார்கள்; ஆனால் இந்திய கூட்டணியின் கூட்டத்திற்கு வருவதில்லை.

ADVERTISEMENT

23 கட்சிகள் தொடர்கின்றன. 26 கட்சிகள் என்று நான் முதலில் சொன்னேன் அல்லவா, இப்போது 23 கட்சிகள் இந்தியா கூட்டணியில் தொடர்கின்றன.

எப்போது தவெக-விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்களோ, அப்போது தவெக-வை நாங்கள் இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளச் சொல்வோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாதவர்களை நாங்கள் ‘வாருங்கள், வாருங்கள்’ என்று அழைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்.”

“இந்தியா கூட்டணியில் தவெகவை சேர்க்காததால்தான் பிரதமராக ராகுல் காந்தியை முன்நிறுத்தாமல் இருக்கிறாரா விஜய்? ஏனெனில் விஜய் இதுவரை பிரதமராக ராகுல் காந்தியை முன்மொழியவே இல்லை. ஆனால் இதற்கு முன்பு ஸ்டாலின் இருந்தபோது, அவர் துணிச்சலாக ராகுல்தான் பிரதமர் என்றார். அந்த வார்த்தை தவெகவில் யாரிடமிருந்தும் வரவில்லையே?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “தேர்தல் வரட்டும். முதலில் விஜய் அவர்களைப் பொறுத்தமட்டிலும், 106 இடங்கள் கிடைத்த உடனே, முதலில் அவர் அழைத்தது ராகுல் காந்தியைதான்.

அவர் முதலமைச்சர் ஆவதற்கு ராகுல் காந்தியிடம் தான் அவர் ஆதரவு கேட்டார்.

முதலில் விஜய்க்கு ஆதரவாக கடிதம் கொடுத்தது ராகுல் காந்தி.. காங்கிரஸ் கட்சிதான் ஆதரவு கடிதம் கொடுத்தது. தவெக-வின் இன்றைய முக்கிய அமைச்சர்கள் அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்கள் எல்லாம் அமைச்சராக இருப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முதலில் வந்தது. இல்லையென்றால் என்ன.. அமித் ஷா எல்லா கதையையும் முடித்திருப்பார். முடித்த நேரத்தில் கட்சியை உடைத்து, அண்ணன் பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியிருப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டிலும், இந்த நிலைமை அனைவருக்கும் புரியும்.

தேர்தல் வரட்டும். விஜய் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார். எப்போதுமே அவர் மிகவும் குறைவாகத்தான் பேசுவார். பேச வேண்டிய நேரத்தில் பேசுவார் என்று நினைக்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து, “ஊடகங்களில் பார்த்தால், இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் ‘அடுத்த பிரதமர் விஜய் தான்’ என்பது போன்ற பெரிய பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அவரை உண்மையிலேயே ஒரு பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதற்கு யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வியெல்லாம் இருக்கிறது அல்லவா?” என்ற கேள்விக்கு, “இதைவிட மிகப் பெரிய சீரியஸ் பஞ்சாயத்து இங்கு போய்க்கொண்டிருக்கிறது. மோடி, அமித் ஷா ஆகியோருடன் நாடாளுமன்றத்தை முடக்கி சண்டை போடுவதில் இருந்து, ஊர் ஊராக அவர்கள் மற்ற கட்சிகளையெல்லாம் உடைத்து நொறுக்கிச் சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சண்டையை நாங்கள் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதெல்லாம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் விஷயங்கள்… எங்கே டிரெண்ட் ஆகியிருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கு யாராவது டிரெண்ட் ஆனால் எனக்குச் சொல்லுங்கள். சொன்னீர்கள் என்றால் நான் அதைப் பற்றிப் பேசுவேன்.” என்றார்.

அதேபோல் கம்யூனிஸ்ட்கள் கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு, “இடதுசாரிகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது மற்றும் அதிகாரிகளின் அணுகுமுறை தவறான விஷயம், அதை உடனடியாகக் கண்டித்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல உயர்கல்வித் துறை அமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன். அதிகாரிகள் இப்படி செய்து விட்டார்கள் என்று மட்டும் நாம் ஒதுங்கிப் போய்விட முடியாது. இது ஒரு கூட்டுத் தலைமை. புதிய ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆகியிருக்கின்றன, அதனால் இதைக் கவனமாக அணுக வேண்டும்.

அதிகாரிகள் மீது உடனே சாயம் பூச முடியாது, எல்லோருக்கும் சாயம் பூச ஆரம்பித்தால் எதுவும் மிஞ்சாது” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share