டிஜிட்டல் திண்ணை: ‘ஆட்டத்தை’ ஆரம்பித்த ஸ்டாலின்.. சட்டசபையில் சாஃப்ட் அப்ரோச்சுக்கு செம்ம ‘டோஸ்’.. சீனியர்களுக்கு அடுத்து என்ன? திமுக செயற்குழுவில் நடந்தது என்ன? விரிவான ரிப்போர்ட்!

Published On:

| By Minnambalam Desk

DMK Executive Committee Meeting? Detailed Report

வைஃபை ஆன் செய்ததும், “அகர முதல தொட்டு அறிஞர் அண்ணா பிளட்-டு..
அகர முதல தொட்டு தலைவர் கலைஞர் பிளட்-டு..”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. திமுக செயற்குழுவில இருந்து சூடான தகவல்களுடன் வந்திருக்கீங்க போல..

ஆமாங்க ப்ரோ.. திமுக வரலாற்றுல ரொம்ப முக்கியமான செயற்குழு இல்லையா.. அதிரடியான தீர்மானங்களை நிறைவேற்றதுக்கு முன்னாடி பேசுன ஸ்டாலின், “நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை.. “இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது! அதனை, அதன் அமைப்புமுறை காப்பாற்றும்!”ன்னு தலைவர் கலைஞர் சொல்லி இருந்தாரு.. நம்ம தோல்விக்கு நிர்வாகிகளின் செயல்பாடுகளும் காரணம்தான்.. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை. அதனால ஒவ்வொரு தொகுதியாக பார்த்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனையாக ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பிலேயே மாற்றம் செய்யலாம்னு சில மாறுதல்களை செய்ய இருக்கிறோம். சிலருக்கு கடுமையா, கசப்பா இருக்கத்தான் செய்யும்.. கசப்புதான் உடலுக்கு நல்லது. என்னதான் வெளிச்சம் கொடுத்தால் அதுக்கு கீழேயும் இருட்டு இருக்கு.. அதுமாதிரிதான் நம்மகிட்ட இருக்கிற தப்புகளை கவனிக்காம விட்டுட்டோம்”ன்னு பேசுனதுடன், “விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நாம் தொடங்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக – உண்மையானதா இருக்கனும்.. உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம்”ன்னு அழுத்தமாகவும் சொல்லி இருந்தார்.

ADVERTISEMENT

இதுக்கு பிறகுதான் அந்த அதிரடியான தீர்மானங்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டுச்சு.. அதாவது திமுக கட்சி மாவட்டங்களை 110 ஆக அதிகரிச்சுருக்காங்க.. 2 தொகுதிக்கு 1 மாவட்டம்னு பிரிச்சுருக்காங்க.. மா.செ.க்கள் அதிகபட்ச வயசு 70 தான்.. 3 முறைதான் மா.செ.வா இருக்க முடியும்.. ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பகுதி, பேரூர் கழக செயலாளர்களுக்கு அதிகபட்ச வயசு 60 தான்.. வட்ட செயலாளர் பதவிக்கு 50 வயசு; கிளை செயலாளருக்கு அதிகபட்ச வயசு 45-ன்னு அதிரடியாக தீர்மானங்கள் போட்டிருக்காங்க..

இப்படி அதிரடியான தீர்மானம் எல்லாம் நிறைவேத்துனப்ப எந்த சலசலப்பும் இல்லை.. யாருமே எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.. எல்லாருமே இந்த தீர்மானங்களை ஏத்துகிட்டாங்க..

ADVERTISEMENT

அதுக்கு பிறகு இந்த கூட்டத்துல திருவிடைமருதூர் ராமலிங்கம் முதல்ல பேச ஆரம்பிச்சாரு.. அவர், “நான் 10 முறை ஒன்றிய செயலாளராக இருந்துட்டேன்.. எம்.எல்.ஏ. , எம்.பி.யாகவும் இருந்துட்டேன்.. அதனால எனக்கு பதவி எல்லாம் வேண்டாம்.. இளைஞர்களுக்கு வழிவிடலாம்.. இங்க நிறைவேத்துன தீர்மானங்கள் எல்லாம் சரிதான்.”ன்னு பேசிகிட்டு இருந்தப்ப ஸ்டாலின் குறுக்கிட்டு, “திருவிடைமருதூர் ராமலிங்கத்திடம் ஒருமுறை, எம்.பி. பதவி வேணுமா? ஒன்றிய செயலாளர் பதவி வேணுமான்னு கேட்டேன்.. அதுக்கு அவரு, ஒன்றிய செயலாளர் பதவியே போதும்னு சொன்னாரு” என சுட்டிக்காட்டினார்.

அவரைத் தொடர்ந்து முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி பேசுனப்ப எல்லா சீனியர்ஸுமே அப்படியே ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிட்டாங்க.. அவரு, “சட்டசபையில உதயநிதி மட்டும்தான் பேசுற மாதிரி இருக்கு.. நம்ம சைடுல வேற யாரும் அவரு மாதிரி பேசுறது இல்லை. நம்ம கட்சிக்காரங்க, மாமன்.. மச்சான்னு பேசிகிட்டு இருக்காங்க.. அந்த மாதிரி எல்லாம் பேசிகிட்டு இருக்காம, உதயநிதிக்கு பக்கபலமா எல்லா எம்.எல்.ஏ.க்களும் இருக்கனும்”னு பட்டுன்னு சொன்னாரு..

ADVERTISEMENT

முன்னாள் எம்.பி. எம்.எம். அப்துல்லாவும், இதே டோனில்தான் பேசுனாரு.. அதாவது, “சட்டசபையில உதயநிதிக்கு எல்லாருமே சப்போர்ட்டா இருக்கனும்”னு பேசுனாரு..

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும் போதும் இதை சுட்டிக்காட்டினாரு.. அதோட, “வெறுக்க கத்தனும்னு பெரியார் சொல்வார்.. நீங்க தடவிக் கொடுக்கிற மாதிரி சட்டசபையில பேசக் கூடாது.. எம்ஜிஆர்தான் என்னை ஆளாக்கினவருன்னு உங்ககிட்ட பல முறை சொல்லி இருக்கேன்.. அவரு அதிமுகவுக்கு என்னை அழைச்சப்ப, “நீங்க என்னை ஜன்னல்ல இருந்து குதின்னு சொல்லுங்க குதிக்கிறேன்.. ஆனா உங்க கட்சியில மட்டும் சேரமாட்டேன்.. ஏன்னா எனக்கு தலைவர் கலைஞர் மட்டும்தான்னு சொல்லிட்டேன்.. அதே எம்ஜிஆரை எதிர்த்துதான் சட்டசபையில நான் எவ்வளவோ கடுமையாக பேசுனேன்.. சட்டம் ஒழுங்கு மோசம், ஊழல் செஞ்சிருக்காங்கன்னு எல்லாம் பேசுனேன்.. நம்மோட தனிப்பட்ட உறவுங்கிறது வேறு; நம்மோட அரசியல், கட்சி என்பது வேறு.

அதைவிட்டுட்டு சட்டசபையில போய் நீங்க அண்ணன்- தம்பி, மாமன் -மச்சான்னு நீங்க பேசிகிட்டு இருந்தீங்கன்னா, கீழே இருக்கிற கட்சி தொண்டனும் மத்த கட்சிக்காரனைப் பார்த்து மாமன்- மச்சான்னு போயிடுவான்.. அது நல்லா இருக்காது..”ன்னு தனக்கே உரிய நகைச்சுவையுடனும் கண்டிப்புடனும் பேசினார்.

பெண் நிர்வாகிகள் பேசுறப்ப, மா.செ. பதவி தொடங்கி எல்லா பதவிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுங்க தலைவரேன்னு வலியுறுத்தினாங்க.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசும் போதும், “ஆமாம்.. இதை நான் ஏற்கனவே தலைவர் (ஸ்டாலின்) கவனத்துக்கு கொண்டு பேசியிருக்கேன்.. நிச்சயம் தலைவர் இதை நிறைவேற்றுவார்”ன்னு சொன்னாங்க..

இந்த கூட்டத்துல ஆர்.எஸ். பாரதி பேசும் போது, “யாரும் யார் பேசுறதையும் போன்ல ரெக்கார்டு எல்லாம் செஞ்சு வைக்காதீங்கன்னு”ன்னு ஒரு பாயிண்ட்டை சொன்னார்..

இப்படி எல்லாரும் பேசுன பிறகு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நன்றி உரையில, “சட்டசபையில நாங்க பேசுறது இல்லைன்னு எல்லாம் சொன்னீங்க.. நாங்க சட்டசபையில அவங்களுக்கு பதில் சொல்லிட்டுதான் இருக்கோம்.. ஆனா நாங்க பேசுறதை எல்லாம் அவங்க காட்டுறது கிடையாது.. நம்ம கட்சி கொள்கைக்கு ஊறு விளைவிக்கிற மாதிரி என்னைக்குமே நாங்க நடக்கமாட்டோம்.. நாங்க சட்டசபையில நல்லா செயல்படுறோம்.. செயல்படுவோம்..”ன்னு சொன்னாரு.

இதுல ஸ்டாலின் பேசும் போது, “உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக – உண்மையானதாக அமைய வேண்டும்”ன்னு சொல்லி இருந்தாரு.. இதை பத்தி திமுகவில பெரிய டிபேட் நடந்துகிட்டு இருக்கு..

அது என்ன “உண்மையா உறுப்பினர் சேர்க்கனும்”ன்னு ஸ்டாலின் அழுத்தி சொல்றாரேன்னு நாம விசாரிச்சப்ப, “செந்தில் பாலாஜியோட ஐடியாவை கேட்டுட்டு போன டைம் ஆன்லைன்ல உறுப்பினர் சேர்க்கை நடத்தினாங்க.. அதாவது, ”ஆன்லைன்ல உறுப்பினர் சேர்க்கை நடத்துனா ஓடிபி வாங்கி அவங்ககிட்ட கையெழுத்து வாங்கலாம்.. அப்ப கட்சிக்கு கமிட்மெண்ட்டா இருப்பாங்க”ன்னு செந்தில் பாலாஜி ஐடியா கொடுத்திருந்தார்.. இதை அக்செப்ட் பண்ணிட்டுதான் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டுச்சு..

ஆனால், ”சில பூத்களில் ஏன் இவ்வளவு குறைவான உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கு?” “இந்த பூத்ல ஏன் யாருமே உறுப்பினரா சேர்க்கலை”ன்னு கேட்டு நெருக்கடி கொடுத்ததால நிறைய பேரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய சூழ்நிலையும் வந்துருச்சு..

உதாரணமா கரூர் சட்டசபை தொகுதியில இருக்கிற வாக்காளர்களில் 75 சதவீதம் பேரை ஆன்லைனில் உறுப்பினரா ஓடிபி எல்லாம் வாங்கி கரெக்ட்டா சேர்த்துட்டதா சொன்னாங்க.. ஆனா கரூர் தொகுதியில திமுக 3-வது இடத்துக்குதான் போச்சு.. இதை எல்லாம் மனசுல வெச்சுகிட்டுதான், இனிமேலாவது ”ஒரிஜனலா” உறுப்பினர்களை சேர்க்கனும்னு அழுத்தமா சொன்னாராம் ஸ்டாலின்..

செயற்குழுவில எடுத்த முடிவில யாருக்குமே வருத்தமே இல்லையாங்க ப்ரோ?

இதையும் நாம விசாரிச்சப்ப.. செயற்குழு முடிஞ்சு வெளியே சகாக்களோடு சாப்பிட்டு கொண்டே பேசுன திமுகவோட சீனியர் மாவட்ட செயலாளர்கள், “ கட்சியில மா.செ.ன்னு கெத்தாக இருந்துட்டு இப்ப 2 தொகுதிக்கு ஒரு மா.செ.ன்னு போட்டா என்ன மரியாதை இருக்க போகுது? ஒன்னுமே இருக்காது”ன்னு ரொம்பவே வருத்தப்பட்டாங்க..

அதோட, “சரிங்க இளைஞர்களுக்கு எல்லாம் வழிவிடுறோம்.. அதுக்காக சீனியர்கள் எல்லாம் என்ன செய்யறது? சீனியர்களை நம்ம கட்சி எப்படி பயன்படுத்த போகுதோ?”ன்னு அப்படிங்கிற குரலையும் நாம கேட்க முடிஞ்சதுங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share