முதலில் சொன்னது மின்னம்பலம்.. திமுக மா.செ.க்கு அதிகபட்ச வயது 70; 110 மாவட்டங்கள் – செயற்குழுவில் அதிரடி தீர்மானம்!

Published On:

| By Mathi

DMK MK Stalin

திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 70; 2 சட்டசபை தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர் நியமனம் என்பது உள்ளிட்ட அதிரடியான தீர்மானங்கள் அக்கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நமது மின்னம்பலத்தில் ”கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி திமுவைக் காக்க ஸ்டாலின் அதிரடி முடிவுகள்” என்ற தலைப்பிலான செய்தியில் திமுகவில் என்ன என்ன மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என விரிவாக முதலில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செயற்குழு கூட்டம் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்:

தீர்மானம்: 1- கிளைக் கழகங்கள்

கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தீர்மானம்: 2 – வட்ட கழகங்கள்

தற்போது மாநகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பாகத் திகழ்வது வட்டக் கழகங்கள். அதனை மேலும் வலிமைப்படுத்திட புதிய அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

ADVERTISEMENT

தீர்மானம் 3: வட்ட கழகங்கள்

நகர்ப்புறங்களில் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது மாநகரம் – நகரம் – பேரூர்க் கழகம் என்று இயங்கி வருகின்றன. மாநகர – நகர மற்றும் பேரூர்க் கழகக் கட்டமைப்புகளின் வலிமை மிக்க தூணாக விளங்குபவை வட்டக் கழகங்கள்.

சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும்.

அதுமட்டுமின்றி, மாநகர – நகர – பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 4- பேரூர் கழகங்கள்

கிராமபுறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட அமைப்பு பேரூராட்சிகள். அந்தப் பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் பேரூர்க் கழகச் செயலாளராக அதிகபட்சமாக, இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 5- பகுதி கழகங்கள்

மாநகரங்களில் கழகத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக விளங்குவது பகுதிக் கழகங்கள்.

சென்னை மாநகராட்சியில் இனி அமையும் பகுதிக் கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும்,

மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி கழகங்களாகவும் அமைய வேண்டும்.

அப்படி உருவாக்கப்படும் பகுதிக் கழகங்களுக்கான செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகபட்ச வயது 60 என்றும், அவர்கள் அதிகபட்சமாக இரு முறை அப்பொறுப்பில் பணியாற்ற முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: நகர கழகங்கள்

இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகிவரும் மாநிலம் தமிழ்நாடு. நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் நகரக் கழகங்களைப் பிரிப்பது இன்றியமையாததாகிறது. அதன் அடிப்படையில், சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்று நிர்ணயிக்கப்படுவதுடன், நகரச் செயலாளராக ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7: ஒன்றிய கழகங்கள்

மாவட்டக் கழகங்கள் எனும் வலிமைமிக்க அமைப்புகளைத் தாங்கி நிற்கும் தூணாக விளங்குபவை ஒன்றியக் கழகங்கள். அவற்றை மேலும் வலிமை பொருந்திய அமைப்பாக மாற்றிட

சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் ஒன்றியக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு கழக ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு கழக ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது. ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும். ஒரு கழக ஒன்றியம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக் கூடாது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 8: மாவட்ட கழகங்கள்

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் பேரியக்கத்தின் இரத்தநாளங்களாக விளங்குபவை மாவட்டக் கழகங்கள். தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை இதுவரை 77 ஆக வைத்துள்ளோம்.

வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பிரித்த பிறகு, ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டும் எஞ்சும் நிலை ஏற்பட்டால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும்.

கழகத்தின் நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்த மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது.

அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.

இதனடிப்படையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள், 110-ஆக அதிகம் ஆகும். மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கின்ற காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பின் தேவை எழவில்லை என்பதை இக்கூட்டம் கருத்தில் கொள்கிறது. அமையவுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் கழகத் தலைவர் அவர்களே முடிவெடுத்து அறிவிக்க இந்தத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9: மாவட்ட செயற்குழு கூட்டங்கள்

கழகத் தலைவர் அவர்கள் புதிதாக அமையவுள்ள 110 மாவட்டக் கழகங்களை அறிவித்தவுடன், அனைத்து மாவட்டக் கழகங்களிலும் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தில், தலைமைக் கழகத்திலிருந்து கழக மறுசீரமைப்புக் குழுவால் அளிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு மாவட்டத்தின் ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வட்ட – கிளைக் கழக அமைப்புகளை 15 நாட்கள் என்ற காலவரையறைக்குள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில், மீண்டும் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, ஒப்புதலைப் பெற்று, இறுதிப் பட்டியலைத் தலைமைக் கழகத்துக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என இந்தத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது. அதோடு, மேற்சொன்ன தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share