மாணவன் அகிலன் தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்யாத டம்மி அரசு – உதயநிதி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

30 Major Crimes in 12 Days of Vijay Rule- Udhayanidhi Stalin

கோவையில் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை தவெக அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உளளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் அகிலன் (16), அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் கே.கே.நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். பள்ளியில் சக மாணவர்கள் இவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும், ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாகக் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கடுமையான மனவேதனைக்கு உள்ளான மாணவர் அகிலன், கடந்த புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், கே.கே.நாயுடு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவரின் பெற்றோர், உறவினர்களுடன் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது வாயிலிலிருந்து பிரதான வாயில் வரை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கரியப்பனவரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை அளித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனிடையே, மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் மாணவன் அகிலன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,”கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.

ADVERTISEMENT

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச்சூழலில், கழகம் – முற்போக்கு அமைப்புகள் – மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என பதிவிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share