கோவை மாணவன் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்.. கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டேன் – தந்தை திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் கே.கே.நாயுடு பள்ளி மாணவன் சாதிய ரீதியாகக் கேலி, கிண்டல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தால்தான் மகனின் உடலைப் பெற்றுக்கொள்வேன் என மாணவனின் தந்தை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் விஜயகுமாரைக் கைது செய்த காவல்துறையினர், பீளமேடு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர் அகிலனின் உயிரிழப்புக்குக் காரணமான தலைமை ஆசிரியர் அருண்குமாரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவனின் உறவினர்கள் கோவை பீளமேடு காவல் நிலையம் முன்பு அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதுகுறித்து உயிரிழந்த மாணவனின் தந்தை கூறுகையில், தனது மகனுக்குக் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இதுதொடர்பாக வகுப்பாசிரியர் விஜயகுமார் சாதி தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அப்போது தனது மகனும் மற்றொரு மாணவரும் எழுந்து நின்று தங்களது சமூகத்தைத் தெரிவித்துள்ளனர். ஆசிரியர், மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா எனக் கேட்டுள்ளார். அதற்குத் தனது மகன் தெரியாமல் ஆமாம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சக மாணவர்கள் அவரை கேலி செய்து, சாதி ரீதியான வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனர்.

குறிப்பாக, சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அவமதித்ததுடன், தொடர்ந்து துன்புறுத்தியதால் தனது மகன் மனதளவில் பாதிக்கப்பட்டான். மேலும் இந்த பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை, வேறு பள்ளிக்கு மாற்றுமாறும் கூறினார். இதுகுறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் வகுப்பாசிரியர் விஜயகுமார் ஆகியோரிடம் புகார் அளித்தோம். பிரச்சினையைச் சரிசெய்வதாக அவர்கள் கூறினர். ஆனால், அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 10 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் சென்ற மகன், சம்பவத்தன்று காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டான். என்ன நடத்தது என்று தெரியவில்லை மாலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாகத் தெரிவித்தார். மேலும், “என் மகனுக்கு நீதி வேண்டும்” என்றார்.

மேலும், பள்ளி நிர்வாகம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகனைக் காப்பாற்றியிருக்க முடியுமோ என்ற எண்ணம் தனக்கு இருப்பதாகக் கூறிய அசோக்குமார், பள்ளியில் சாதி ரீதியான பிரச்சினைகள் இனியும் நடைபெறக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சம்பவம் தொடர்பாகப் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உடற்கூறாய்வு தொடர்பான ஆவணங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தனது மகனின் மரணத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் கூறினார்.

இந்நிலையில் பீளமேடு காவல் நிலையத்தில் துணை ஆணையர் தங்கதுரையைச் சந்தித்துப் பேசிய மாணவனின் தந்தை, விசாரணை முடிந்த பின்னரே கைது நடவடிக்கை குறித்துக் முடிவெடிக்க முடியும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளதாகக் கூறினார். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்த பிறகே மகனின் உடலைப் பெற்றுக்கொள்வேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share