கோவை மாணவன் அகிலன் தற்கொலை: சாதிய வன்கொடுமை காரணமா.. நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தவர் அகிலன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் அகிலன் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற நிலையில், அவரது தாயார் கௌசல்யா வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். மாலை 4 மணிக்குக் கௌசல்யா வீட்டுக்கு வந்து பார்த்தபோது மாணவன் அகிலன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கௌசல்யா காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றிக் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இதனிடையே உயிரிழந்த மாணவனின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், பள்ளி வகுப்பறையில் ஸ்காலர்ஷிப் தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளனர். அப்போது மாணவன் அகிலனின் சாதி குறித்தும், மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்தும் ஆசிரியர் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிற மாணவர்கள் அகிலனுடன் பேசுவதில்லை என்பதும், இதனால் மாணவன் அகிலன் வருத்தத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அகிலனின் தந்தை அசோக் குமார் கூறுகையில், “பள்ளியில் எனது மகனின் சாதி அடையாளம் தெரியவந்த பிறகு சக மாணவர்கள் அவனுடன் பேசுவதைத் தவிர்த்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் பள்ளியில் முறையிட்டோம். அப்போது பள்ளித் தரப்பில், ‘அப்படி எதுவும் இல்லை, நாங்கள் விசாரிக்கிறோம்’ என்று மட்டும் தெரிவித்தனார். ஆனால் அதுகுறித்த முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதே சமயம் பள்ளி ஆசிரியர்கள் சிலர் சாதிய ஆதிக்க மனநிலையில் இருந்தனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், மகன் அகிலனின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மாணவரின் உடலைப் பெற மாட்டோம்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் ஆசிரியர்கள், மாணவர்கள் என 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

பள்ளி வகுப்பறையில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என ஆசிரியர் விஜயகுமார் கேட்தாகவும், அப்போது இருந்தே மாணவர்கள் இருவர் அகிலனை சாதிப்பெயர் சொல்லி திட்டியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த மாணவர் அகிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share