கனமழை காரணமாக திருப்பத்தூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 22-ந் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக, திருப்பத்தூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி- கேரளா எல்லையான நெய்யாற்றின்கரை- பாறசாலை இடையே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 3 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. 7 ரயில்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
