10 நாட்களாக தேடியும் கிடைக்காத செஞ்சி சிறுமி.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

Published On:

| By Mathi

girl missing

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 10 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் வடிவேலு- பவானி தம்பதி. இவர்களது 2-வது மகள் 7 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ந் தேதி சிறுமியின் பிறந்தநாளை குடும்பத்தினர் கொண்டாடினர். அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மறுநாள் அக்டோபர் 12-ந் தேதி அதிகாலை காணவில்லை.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. மதிவாணன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சிறுமி மாயமான பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் அழைப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறுகளிலும் தீயணைப்புத் துறையினர் தேடினர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

இதனிடையே, சிறுமி மாயமான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், சிறுமி மாயமாகி 10 நாட்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி நேற்று (அக்டோபர் 21-ந் தேதி) உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிறுமி மாயமானது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share