’மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’.. கர்நாடகா தசரா விழாவில் 650 கிலோ வெள்ளி அம்பாரியுடன் மிரண்டு ஓடியது.. அம்மன் தங்க வளையல்கள் மாயம்!

Published On:

| By Mathi

Karnataka-Elephant

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் தசரா ஊர்வலத்தின்போது 650 கிலோ எடையுள்ள வெள்ளி அம்பாரியைச் சுமந்து சென்ற யானை திடீரென மிரண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலத்தில் மைசூருவுக்கு அடுத்தபடியாக சிவமொக்காவிலும் தசரா விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா விழாவையொட்டி சிவமொக்காவில் நேற்று (அக்டோபர் 21-ந் தேதி) ஜம்பூ சவாரி எனப்படும் யானை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

சிவப்ப நாயக்கர் அரண்மனையில் இருந்து அல்லம பிரபு மைதானம் வரை நடைபெற இருந்த இந்த ஊர்வலத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்ட வெள்ளி அம்பாரியைச் சுமந்து செல்ல சோமண்ணா என்ற யானை தேர்வு செய்யப்பட்டிருந்தது.

வழக்கமாக இந்த ஊர்வலத்தில் சாகர் என்ற யானைதான் வெள்ளி அம்பாரியைச் சுமந்து செல்லும். கடந்த 6 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வந்த சாகர் யானைக்குக் காலில் வலி ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் அதற்குப் பதிலாக சோமண்ணா யானையை வனத்துறையினர் தேர்வு செய்தனர்.

ADVERTISEMENT

கர்நாடகாவின் சக்ரேபைலு யானைகள் முகாமைச் சேர்ந்த 35 வயதான சோமண்ணாவுக்கு, சிவமொக்கா தசரா ஊர்வலத்தில் முதல்முறையாக வெள்ளி அம்பாரியைச் சுமந்து செல்லும் பொறுப்பு தரப்பட்டது.

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நேற்று பிற்பகல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. சிவமொக்கா எம்.எல்.ஏ. எஸ்.என்.சன்னபசப்பா அம்மனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் தசரா ஊர்வலம் தொடங்கியது.

ADVERTISEMENT

650 கிலோ வெள்ளி அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சோமண்ணா யானையின் முதுகில் ஏற்றப்பட்டது. மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஆனால், ஊர்வலம் தொடங்கி சிறிது தூரம் சென்றதுமே எதிர்பாராத சம்பவம் நடந்தது.

வெள்ளி அம்பாரியுடன் கோட்டை சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்த சோமண்ணா யானை, திடீரென திரும்பி எதிரே உள்ள சாலையில் வேகமாக நடக்கத் தொடங்கியது. அத்துடன் ஆவேசப்பட்ட சோமண்ணா யானை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை முட்டித் தள்ளியது. இதைப் பார்த்து அருகில் நின்றிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். சிலர் அலறியடித்து ஓடினர். காரை முட்டிய பின்னரும் யானை அங்கிருந்து திரும்பி சாலையில் நடக்கத் தொடங்கியது.

யானை எந்தப் பக்கம் செல்லும் என்று தெரியாமல் பொதுமக்கள் பதற்றத்துடன் பின்னோக்கி நகர்ந்தனர். போலீசாரும் தன்னார்வலர்களும் கைகளை அசைத்து, யானை செல்லும் வழியிலிருந்து விலகி நிற்குமாறு பொதுமக்களை எச்சரித்தனர். ஆனால் சோமண்ணா யானை தொடர்ந்து சாலையில் ஓட அதன் பின்னால் போலீசாரும் வனத்துறையினரும் சென்றனர்.

ஒருகட்டத்தில், யானையின் முதுகிலிருந்த 650 கிலோ வெள்ளி அம்பாரி நழுவி கீழே விழுந்தது. இதில் அம்பாரி சேதமடைந்ததுடன், அதற்குள் வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையும் சேதமடைந்தது. அம்மன் சிலையின் ஒரு கை உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அம்பாரியில் இருந்த சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மொத்தம் 8 தங்க வளையல்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. அம்பாரி கீழே விழுந்த பின்னர் 2 வளையல்கள் மட்டுமே கிடைத்ததாகவும், மற்ற 6 தங்க வளையல்கள் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் தசரா ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சோமண்ணா யானையைச் சமாளிக்க அதன் பாகன்களும் வனத்துறையினரும் முயன்றனர். சாகர், பகதூர் ஆகிய மற்ற 2 யானைகளின் உதவியும் பெறப்பட்டது.

இதையடுத்து கால்நடை மருத்துவர்களான ஆனந்த், முரளி மனோகர் ஆகியோர் சோமண்ணாவுக்கு மயக்க ஊசி செலுத்தினர். சுமார் அரை மணி நேர முயற்சிக்குப் பின்னர் கோட்டை சீதாராம ஆஞ்சநேயர் கோவில் அருகே யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிவமொக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.நிகில் தெரிவித்தார். சிவமொக்கா மாநகராட்சி ஆணையர் மயண்ண கவுடா கூறுகையில், ஊர்வலம் தொடங்கிய சுமார் 10 நிமிடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், வெள்ளி அம்பாரியும் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையும் சேதமடைந்ததாகவும் தெரிவித்தார்.

இதனிடையே தசரா ஊர்வலத்துக்காக சோமண்ணா யானைக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அடுத்த ஆண்டு முதல் ஜம்பூ சவாரி ஊர்வலங்களில் பங்கேற்கும் யானைகளுக்கு குறைந்தபட்சம் 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை பயிற்சி அளிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share