தென் மாவட்டங்கள், கொங்கு பெல்ட்டில் இன்று கனமழை அடிச்சு விளையாடும்.. சென்னையிலும் ‘சேட்டை’தான்.. வெதர்மேன் பிரதீப் ஜான்

Published On:

| By Mathi

Rain-Oct22

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 22-ந் தேதி) தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது: இன்று தென் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்கள்தான் மழையின் முக்கியப் பகுதிகளாக இருக்கும். மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை அரபிக்கடலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை மாற்றத்தின்போது திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்யும் என்று கருத வேண்டாம். உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று முதல் பகல் நேரத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, குறுகிய நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவும்போது, கிழக்குத் திசையிலிருந்து வீசும் ஈரப்பதமான காற்று மழை மேகங்களைத் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வரை கொண்டு செல்லும்.

இதனால் சென்னையில் மட்டுமின்றி வேலூர், ராணிப்பேட்டையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், இன்று தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share