தமிழகத்தில் ‘விசில்’ ‘சர்க்கார்’.. வங்கக் கடலில் ‘முரசு’ புயல்?.. அடடா சுவாரசியம்!

Published On:

| By Mathi

Cyclone Murasu

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவின் ‘விசில்’ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலுக்கு ‘முரசு’ என்று பெயர் சூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடலில் அக்டோபர் 23-ந் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், அது புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலுக்கு ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்கூட்டியே பரிந்துரைக்கின்றன. உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய, பசிபிக் பொருளாதார சமூக ஆணையத்தின் கீழ் செயல்படும் குழு இதற்கான பெயர்ப் பட்டியலை தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பட்டியலில் இந்தியா பரிந்துரைத்த பெயர்களில் ‘கதி’, ‘தேஜ்’, ‘முரசு’, ‘ஆக்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில் ‘முரசு’ என்பது தமிழ்ச் சொல். தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கருவி முரசு. தமிழக அரசியலில் முரசு என்றதும் தேமுதிகவின் தேர்தல் சின்னமான முரசுதான் நினைவுக்கு வரும்.

ADVERTISEMENT

ஆனால் புயலின் பெயரில் ஒரு குழப்பமும் இருக்கிறது. வங்கக் கடலில் கடந்த செப்டம்பர் மாதம் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை சில ஊடகங்கள் ‘அர்னாப் புயல்’ என்று குறிப்பிட்டன. உத்தரப்பிரதேசம், பீகாரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள், ‘அர்னாப் புயல்’ என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தன.

ஆனால் அது புயலாக வலுப்பெறாமல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே இருந்ததாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் அதற்கு அதிகாரப்பூர்வமாக ‘அர்னாப்’ என்று பெயர் சூட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டன. இதுதான் இப்போது ‘முரசு’ பெயரில் எழுந்துள்ள குழப்பத்துக்குக் காரணம்.

புயல்களுக்கான அதிகாரப்பூர்வ பெயர்ப் பட்டியலில் வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயரும் அதே பட்டியலில் உள்ளது. ஆனால் இந்த இரண்டு பெயர்களுக்கும் இடையில் மற்ற நாடுகள் பரிந்துரைத்த பெயர்களும் வருகின்றன.

எனவே, செப்டம்பர் மாதத்தில் ‘அர்னாப்’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டதா, தற்போதைய பட்டியலில் அடுத்ததாக எந்தப் பெயர் உள்ளது? என்பது உறுதியாகவில்லை.

அத்துடன் அக்டோபர் 23-ந் தேதி வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறுமா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. என்னதான் இருந்தாலும் தமிழகத்தில் ‘விசில்’ சர்க்கார் நடைபெறும் நேரத்தில் வங்கக் கடலில் ‘முரசு’ புயல் உருவாகுமா என்ற சுவாரசிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share