வானிலை மையம் Vs மாநகராட்சி: மழை பதிவுகளால் வெடித்த ‘பஞ்சாயத்து’!

Published On:

| By Mathi

IMDChennai Vs Corporation

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் பெய்த கனமழையின் அளவு குறித்து வானிலை ஆய்வு மையமும் சென்னை மாநகராட்சியும் வெளியிட்ட தரவுகளில் பெரும் வித்தியாசம் இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 21-ந் தேதி) வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரையிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

ADVERTISEMENT

செய்தியாளர்: சார், இன்னைக்கு இரவிலிருந்து தென்மாவட்டங்களில் மழை இருக்குமா? இன்னையிலிருந்து கனமழை இருக்குமா?

வானிலை மைய இயக்குநர்: இன்னையிலிருந்து இருக்கும். தென் தமிழக மாவட்டங்களுக்கு இன்னையிலிருந்து மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

ADVERTISEMENT

செய்தியாளர்: இதுவரைக்கும் வடகிழக்கு பருவமழை எவ்வளவு சதவீதம் கிடைத்திருக்கிறது சார்?

வானிலை மைய இயக்குநர்: பொதுவாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை 44 செ.மீ. பெய்யும். அக்டோபர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 21-ந் தேதி வரை 11.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

செய்தியாளர்: சார், நீங்கள் ரெட் அலர்ட் கொடுத்ததற்கான காரணத்தைச் சொல்லும்போது, முந்தைய நாள் அதிக மழை பதிவானது, அதன் தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என்பதால்தான் ரெட் அலர்ட் கொடுத்தோம் என்று சொன்னீர்கள். பின்னர் மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அதை திரும்பப் பெற்றதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அதிக கனமழை பதிவானது என்பதிலேயே பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன.

ஏனென்றால் வானிலை ஆய்வு மையம் மீனம்பாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவானதாகச் சொல்கிறது. அதே பகுதிக்கு சென்னை மாநகராட்சி கொடுக்கும் தரவு 28 செ.மீ. என்று இருக்கிறது. அதே மாநகராட்சிதான் பாரீஸில் 37 செ.மீ. மழை பெய்ததாகச் சொல்கிறது. அருகில் உள்ள சென்ட்ரலில் 26 செ.மீ. மழை பெய்ததாகச் சொல்கிறது. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே சுமார் 10 செ.மீ. வித்தியாசம் இருக்கிறது.

அதேபோல மீனம்பாக்கம் பகுதியில் வானிலை ஆய்வு மையத்துக்கும் மாநகராட்சிக்கும் இடையே ஏறக்குறைய 10 செ.மீ. வித்தியாசம் இருக்கிறது. இப்போது மழைமானிகள் உண்மையிலேயே சரியாக வேலை செய்கின்றனவா? மாநகராட்சி தவறாகத் தரவு கொடுத்ததா? அல்லது மழைமானிகளில் தவறு இருக்கிறதா? எங்கே சிக்கல் இருக்கிறது?

வானிலை மைய இயக்குநர்: அந்தப் பிரச்சனையை நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இந்த வேறுபாடுகளை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து வருகிறது. எங்களுடைய மழைமானியையும், மாநகராட்சியின் மழைமானியையும் சரிபார்க்கச் சொல்லியிருக்கிறோம். எங்களுடைய தானியங்கி வானிலை நிலையத்தை சம்பந்தப்பட்ட குழுவினர் சரிபார்த்துள்ளனர். அதேபோல சென்னை மாநகராட்சியும் அவர்களுடைய மழைமானிகளைச் சரிபார்த்து வருகிறது.

இரண்டு மழைமானிகளும் ஒரே மாதிரி வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் மழை அளவீடு துல்லியமாக இருக்க வேண்டுமென்றால் இரண்டு மழைமானிகளும் சரியாக இயங்க வேண்டும். அதனால் இரண்டையும் சரிபார்க்கச் சொல்லியிருக்கிறோம். தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து வருகிறது.

செய்தியாளர்: சார், இது முதல் முறை இல்லை. கடந்த 2023-ம் ஆண்டு மிக்ஜாம் புயலின்போதுகூட மடிப்பாக்கத்தில் 44 செ.மீ. மழை பெய்ததாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. அப்போது வானிலை ஆய்வு மையம் அந்த அளவுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டு, அந்தத் தரவை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

ஆனால் இந்த முறை மாநகராட்சி கொடுத்திருக்கும் தரவுகளிலேயே முரண்பாடு இருக்கிறது. ஒருபக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கும் மாநகராட்சிக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. இன்னொரு பக்கம் மாநகராட்சியின் தரவுகளுக்குள்ளேயே வேறுபாடு இருக்கிறது.

பாரீஸில் 37 செ.மீ., சென்ட்ரலில் 26 செ.மீ. என்று சொல்கிறார்கள். வெறும் ஒரு கிலோமீட்டர் அல்லது ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்குள் இவ்வளவு பெரிய வித்தியாசம் ஏற்படுவது வானிலை அறிவியல்படி சாத்தியமா?

வானிலை மைய இயக்குநர்: அப்படி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், அதனால்தான் மழைமானிகளைச் சரிபார்க்கச் சொல்லியிருக்கிறேன்.

செய்தியாளர்: சார், மாநகராட்சியின் மழைமானிகளையும் சரிபார்க்கச் சொல்லியிருக்கிறீர்களா?

வானிலை மைய இயக்குநர்: ஆமாம். மாநகராட்சிக்கும் சொல்லியிருக்கிறோம்.

செய்தியாளர்: மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்யும் குழு இருக்கிறதா?

வானிலை மைய இயக்குநர்: அவர்களுக்குத் தொழில்நுட்பக் குழு இருக்கிறது. அவர்கள் சரிபார்த்து வருகிறார்கள்.

செய்தியாளர்: மாநகராட்சிதான் சரிபார்க்கிறதா?

வானிலை மைய இயக்குநர்: ஆமாம். மாநகராட்சி சரிபார்த்து வருகிறது. இரண்டு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.

செய்தியாளர்: அப்படியானால் நிர்வாகக் காரணங்களுக்காகத்தான் அடுத்த நாள் ரெட் அலர்ட் கொடுத்தீர்களா?

வானிலை மைய இயக்குநர்: இல்லை, இல்லை. நிர்வாகக் காரணங்கள் மட்டுமல்ல. அன்றைக்கு நாங்கள் கனமழையை எதிர்பார்த்தோம். வட தமிழகப் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி இருந்தது. சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல நாங்கள் வெறும் எண்ணியல் வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளை மட்டும் அடிப்படையாக வைத்து எச்சரிக்கை கொடுப்பதில்லை. வானிலை அமைப்புகளையும் அடிப்படையாக வைத்துதான் எச்சரிக்கை கொடுக்கிறோம்.

அன்றைக்கு வட தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி இருந்தது. பின்னர் அந்தச் சுழற்சி வலுவிழந்தது. அதனால் மிக கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து மாலையிலேயே ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றோம்.

செய்தியாளர்: சார், நீங்கள் மழைமானிகளின் தரவை அடிப்படையாக வைத்துதான் ரெட் அலர்ட் கொடுத்தீர்களா? ஒருவேளை முந்தைய நாள் மழை அளவு குறைவாகப் பதிவாகியிருந்தால், அடுத்த நாளுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருக்க மாட்டீர்களா? அன்றைக்கு நீங்கள் முதலில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுத்திருந்தீர்கள். பின்னர் மழையின் தீவிரத்தைப் பொறுத்து அதை ரெட் அலர்ட்டாக உயர்த்தினீர்கள்.

ஒருவேளை அந்த சனிக்கிழமை மிக கனமழை பெய்யாமல், கனமழை மட்டுமே பெய்திருந்தால், அடுத்த நாளுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருப்பீர்களா?

வானிலை மைய இயக்குநர்: அதற்கான வாய்ப்பு குறைவு.

செய்தியாளர்: அப்படியானால் இந்தத் தவறான மழை அளவுத் தரவுகள் உங்களைத் தவறாக வழிநடத்தியிருக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாமா?

வானிலை மைய இயக்குநர்: அது தவறான தரவு என்று இப்போதே எப்படிச் சொல்ல முடியும்? தரவு தவறாக இருந்தால், அது எங்களைத் தவறாக வழிநடத்தியதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் முதலில் தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து முடிவைச் சொல்லட்டும். அது சரியான தரவா, தவறான தரவா என்பதை ஆய்வு முடிவுக்குப் பிறகு பார்க்கலாம். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்தார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share