அதிகார வரம்பை மீறக் கூடாது… அமலாக்கத்துறையை வெளுத்துவிட்ட உச்சநீதிமன்றம்!

Published On:

| By Mathi

Supreme Court-ED

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் அதிகார வரம்பு குறித்து உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 21-ந் தேதி) காட்டமான கேள்விகளை எழுப்பியது.

கேரளாவைச் சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) நிறுவனம், பினராயி விஜயனின் மகள் வீணாவுடன் தொடர்புடைய எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ.1.72 கோடி வழங்கியது; எந்த சேவையுமே வழங்காமல் பினராயி மகள் தொடர்புடைய நிறுவனத்துக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டது என்கிறது அமலாக்கத்துறை.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 66(2) பிரிவின்கீழ் கேரள காவல்துறைக்குத் தகவல்களையும் அனுப்பி வைத்தது.

அமலாக்கத்துறையின் இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அமலாக்கத்துறை வழங்கிய தகவல்களில் குற்றம் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

ஆனால், இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக விசாரணை நடத்துவது அவசியம் என்று கேரள அரசு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. அதே நேரத்தில் அமலாக்கத்துறை தகவல் அளித்திருப்பதால், காவல்துறை கட்டாயமாக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமா என்ற பிரச்சினை எழுந்தது.

இந்த நிலையில் பினராயி விஜயன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்ய முயன்றனர். ஆனால், அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

ADVERTISEMENT

இந்த மனுவை நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது.

பினராயி விஜயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, இந்த வழக்கில் உயர்நீதிமன்றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாகவும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாகவும் வாதங்களை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வி. மோகனா, மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியிருக்கலாம் (“Leave to appeal could have been granted.”) என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, இந்த வழக்கில் மற்றொரு முக்கியமான சட்டப் பிரச்சினை இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 66(2) பிரிவின்கீழ் அமலாக்கத்துறை தகவல் அனுப்பினால், அதன் அடிப்படையில் கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா (First is whether 66 (2) is a mandate) என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், உயர்நீதிமன்றத் தனி நீதிபதி தனது உத்தரவின் ஓர் இடத்தில் அமலாக்கத்துறையின் தகவல் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்வது கட்டாயம் என்று கூறியிருப்பதாகவும், மற்றோர் இடத்தில் அந்தத் தகவல்களை ஓரளவு சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்திருப்பதாகவும் (The single judge says in one paragraph that it is and in another says some degree of verification is necessary) நீதிபதி பாக்சி சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறையின் அதிகார வரம்பு தொடர்பாகவும் நீதிபதி பாக்சி கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்.

அதாவது, “ Don’t extend your hand beyond your statutory limits”- சட்டம் வழங்கியுள்ள அதிகார எல்லையைத் தாண்டி அமலாக்கத்துறை செயல்படக் கூடாது என்பதுதான் நீதிபதி பாக்சியின் எச்சரிக்கை.

பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரிக்கலாம். அதன் விசாரணையில் வேறு குற்றங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அவற்றை அனுப்பவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், அந்தத் தகவல்களின் அடிப்படையில் மற்றொரு விசாரணை அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் அமலாக்கத்துறையின் அதிகாரம் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதே நீதிபதிகள் எழுப்பிய கேள்வி.

மற்ற அமைப்புகளின் சட்டப்பூர்வ அதிகார வரம்பில் தலையிடுவதற்காகத் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி பாக்சி எச்சரித்தார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share