SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? 3.75 லட்சம் பேரின் ‘டேட்டா’ லீக் ஆனதா? உண்மை என்ன?

Published On:

| By Mathi

SBI-Data leak

SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துவிட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் SBI வங்கி வெளியிட்ட அறிக்கையில், 3,897 வாடிக்கையாளர்களின் டேட்டா மட்டுமே கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் SBI வங்கியில் கணக்கு தொடங்கும்போது நமது பெயர், பிறந்த தேதி, வீட்டு முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்கிறோம். அதேபோல வங்கியில் கடன் வாங்கும்போதும் பல தகவல்களை வழங்குகிறோம்.

ADVERTISEMENT

இப்படி வாடிக்கையாளர்கள் கொடுத்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கலாம் என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரச்சனை.

3.75 லட்சம் டேட்டா திருட்டு?

கடந்த அக்டோபர் 16-ந் தேதி SBI வங்கிக்கு ஓர் எச்சரிக்கை வந்தது. அதில், வாடிக்கையாளர்கள் தொடர்பான டேட்டாக்கள் டார்க் வெப் (Dark Web) எனப்படும் இணைய உலகத்தின் ரகசிய பகுதியில் லீக் ஆகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

டார்க் வெப் என்றால் என்ன?

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் இணையதளங்களைப் போல இல்லாமல், வேறு சில இணையப் பகுதிகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டார்க் வெப். இங்கு திருடப்பட்ட தகவல்களை விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களும் நடைபெறுகின்றன.

இந்த டார்க் வெப்பில்தான் SBI வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

SBI வங்கி அளித்த விளக்கம்

இந்த விவகாரத்தில் SBI வங்கி அளித்துள்ள விளக்கம்: கடந்த அக்டோபர் 16-ந் தேதி அமெரிக்கா மற்றும் நமது நாட்டின் இணையப் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து SBI வங்கிக்கு ஓர் எச்சரிக்கை வந்தது.

அதில், SBI வாடிக்கையாளர்கள் தொடர்பான சுமார் 3.75 லட்சம் பதிவுகள் டார்க் வெப் எனப்படும் இணையப் பகுதியில் லீக் ஆகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நாங்கள் உடனடியாக ஆய்வு நடத்தினோம். இதில் 3,897 வாடிக்கையாளர்களின் டேட்டாக்கள் டார்க்வெப்பில் லீக் ஆகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த டேட்டாவில் வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண், இமெயில் முகவரி, வீட்டு முகவரி, வங்கிக் கிளை விவரங்கள் மற்றும் கடன் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தகவல்கள் உண்மையானவையா? எப்படி வெளியே சென்றன? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதற்காக இணையப் பாதுகாப்பு வல்லுநர்களின் உதவியையும் நாடியுள்ளோம். வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இந்தச் சம்பவத்தால் SBI வங்கியின் வழக்கமான பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. வங்கியின் பணப் பரிவர்த்தனைகளும் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன. வங்கியின் நிதிநிலைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு SBI வங்கி தெரிவித்துள்ளது.

பொதுவாக அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கி கணக்கின் கடவுச்சொல் (Password), OTP அல்லது ரகசிய எண்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share