VIDEO: 13 லட்சம் ஃபாலோயர்கள்.. 27 வயது நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை.. என்ன நடந்தது? அதிர வைக்கும் வீடியோ!

Published On:

| By Mathi

Harish-Finance

இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட நிதி ஆலோசகர் ஹரிஷ் (27) சென்னையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ஃபாலோயர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

யார் இந்த ஹரிஷ்?

புதுச்சேரியைச் சேர்ந்தவர் வி.ஹரிஷ். இவர் ‘Finance with Harish’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சேமிப்பு, நிதி மேலாண்மை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ADVERTISEMENT

ஹரிஷை இன்ஸ்டாகிராமில் மட்டும் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர். நீங்கள் வாங்கும் மாத சம்பளத்தை எப்படி எல்லாம் சேமிக்கலாம்? மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் எப்படி எல்லாம் முதலீடு செய்யலாம் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியவர் ஹரிஷ்.

ஹரிஷும் சர்ச்சைகளும்

அதேநேரத்தில் ஹரிஷின் இந்த ஆலோசனைகள் தொடர்பாகவும் சர்ச்சைகள் வெடித்தன. இது தொடர்பாக பங்கு சந்தை முதலீட்டு வாரியமான செபிக்கும் (SEBI) புகார்கள் பறந்தன.

ADVERTISEMENT

இதன் விளைவாக ஹரிஷின் சோசியல் மீடியா பக்கங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டன. ஆனாலும் ஹரிஷ் ஓய்ந்து போய்விடவில்லை. இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் புதிய பக்கங்களை திறந்து தனது ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

அடுத்ததாக எழுந்த சர்ச்சை, ஹரிஷிடம் செபியிடம் (SEBI) பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகருக்கான உரிமம் இல்லை என்கிற குற்றச்சாட்டு. ஹரிஷ் வைத்திருந்தது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சங்கமான AMFI வழங்கும் பதிவு எண். இதனை செபியிடம் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகருக்கான உரிமமாக ஹரிஷ் தவறாக குறிப்பிட்டார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு.

ADVERTISEMENT

இத்தகைய அடுத்தடுத்த விமர்சனங்கள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களால் சென்னை முட்டுக்காடு பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த பங்களாவில் ஹரிஷ் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கானத்தூர் போலீசார், ஹரிஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யூடியூபர் மீது புகார்

ஹரிஷின் மரணம் தொடர்பாக அவரது தந்தை விநாயகம், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், யூடியூபர் ஒருவர் தமது மகனுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறான தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், சமூக வலைதளங்களில் ஹரிஷ் குறிவைத்துத் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி வீடியோ

இதனிடையே ஹரிஷ் தற்கொலை செய்வதற்கு முன்னர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் தமக்கு மன உளைச்சல் கொடுத்த யூடியூபர் பற்றி ஹரிஷ் கூறியிருப்பதாவது: ஒருத்தவங்களோட உழைப்ப… ஒரு அஞ்சு வருஷத்தோட உழைப்ப. நீங்க என் மேல ஏதாவது ஒரு தப்பு இருக்குன்னா நீங்க வந்து அதுக்கு கேள்வி கேட்கலாம். அதுக்கு நான் பதில் சொல்லலாம். ஆனா என் அஞ்சு வருஷ உழைப்பை திருடி, நான் போய் உன் ஃபேமிலியை டார்கெட் பண்ணுவேன்… ‘நீ பாண்டிச்சேரிதானே? எனக்கு பாண்டிச்சேரியில யார் யாரெல்லாம் தெரியும் தெரியுமா? எனக்கு இந்த எம்.எல்.ஏ.-வை தெரியும். எனக்கு அந்த சீஃப் மினிஸ்டரையே தெரியும் எனக்கு’ அப்படின்னு சொல்லிட்டு அவரு அவ்வளவு பேசுறாரு.

‘நீ காசு கொடுக்காம எங்க போயிடுவ? நீ காசு கொடுக்கலைன்னா அப்ப உன்கிட்ட இருக்கிறது எல்லாத்தையுமே நான் வந்து எடுத்துருவேன்’ அப்படின்ற மாதிரி வந்து ரொம்ப ஒரு மாதிரி எனக்கு இதுக்கப்புறம் என்ன பண்றதுன்னே எனக்கு வந்து தெரியல.

ஏன்னா என்னால மத்தவங்களுக்கும் கெட்ட பேரு வர மாதிரி அவரு வந்து அத கிளப்பிவிட்டது வந்து, என் ஃப்ரெண்ட்ஸுங்களை எனக்குப் பார்க்கும் போதே எனக்கு வந்து கில்ட்டா (guilt) இருக்கு.

‘நீ வந்து இன்கம் டேக்ஸ் ஃபைன் பண்ணாங்க அப்படின்னா வந்து 60% பெனால்டி போடுவாங்க. ஜெயிலுக்கெல்லாம் போற மாதிரி இருக்கும். அதுக்கு எனக்கு பதிலா நீ காச கொடுத்துட்டன்னா நம்ம அப்படியே பேசி முடிச்சுக்கலாம். இல்லைன்னா வந்து நான் பார்ட் 2, பார்ட் 3 போடுவேன்’னு சொல்லி அவ்வளவு எனக்கு மென்டல் ஹராஸ்மென்ட் (mental harassment) அப்படின்றத அவரு கொடுத்துட்டாருங்க. எனக்கு வேற என்ன பண்றதுன்னே தெரியல.

இத எனக்கு சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ‘ஹரிஷ் பாத்துக்கலாம், என்ன பண்ணிட போறான்’ அப்படின்னாங்க. பட் இருந்தாலும் மத்தவங்கள டிஃபேம் பண்றதும், மத்தவங்களுக்கு வந்து அவன் இது பண்றதும் எனக்கு ரொம்ப இது பண்ணல. அதனால…

யாராவது இந்த வீடியோவ பாத்துட்டு இருக்கீங்க, என் ஃபாலோயர்ஸ் யாராவது இத பாத்துட்டு இருக்கீங்க… இல்ல, இந்த வீடியோ கண்டிப்பா வெளியில வரும். தயவுசெஞ்சு வெளிய வராம இருந்துடாதீங்க. எவ்வளவு பிரச்சனை ஆனாலும் பரவாயில்ல, தயவுசெஞ்சு இந்த வீடியோவ நீங்க வெளியில ரிலீஸ்… இவ்வாறு அந்த வீடியோவில் ஹரிஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாகவும் கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உதவி பெற: சினேகா உதவி எண் – 044-24640050, மாநில உதவி எண் – 104)

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share