ஐயப்பா.. எங்கள் உரிமைகள் எங்கேயப்பா? சபரிமலையில் நீதி கேட்டு போராடும் பூர்வகுடிகள்!

Published On:

| By Mathi

Sabarimala-Mala arayan Tribes

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பெருவழிப் பாதையில், மல அரயர் பழங்குடியினர் அக்டோபர் 18-ந் தேதி நடத்திய ‘கானன பாத பூஜை’ கவனம் பெற்றிருக்கிறது. கேரளாவின் அழுதக்கடவு பகுதியில் நடைபெற்ற இந்தப் பூஜையைத் தொடர்ந்து, சபரிமலை காட்டுப்பாதையை ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை என்றதும் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது பம்பையில் புனித நீராடல், இருமுடிக்கட்டு, நெய் அபிஷேகம், மகரவிளக்கு, 18 படிகள்.. ஆகியவைதான்.

ADVERTISEMENT

ஆனால் சபரிமலை அமைந்துள்ள மலைப்பகுதிகளில் ஆயிரமாயிரமாண்டுகளாய் வாழ்ந்து வரும் பூர்வ குடிகளின் உரிமைகளை நசுக்கி மிதித்துவிட்டுதான் நாம் சன்னிதானத்தை அடைகிறோம் என்பதை எத்தனை ஐயப்ப பக்தர்கள் அறிவார்கள்?

சபரிமலை பாதைகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முக்கியமாக 3 பாதைகள் உள்ளன.

ADVERTISEMENT

பம்பை- நீலிமலை: பம்பையில் இருந்து சன்னிதானத்துக்குச் செல்லும் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தொலைவிலான மலைப்பாதை. பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி வழியாக சன்னிதானத்தை அடையலாம்.

பெருவழிப் பாதை: எருமேலியில் இருந்து அடர்ந்த காடுகள், மலைகள் வழியாகச் செல்லும் சுமார் 45 முதல் 50 கிலோ மீட்டர் தொலைவிலான பாரம்பரிய பெருவழிப் பாதை. இது எருமேலியில் தொடங்கி பேரூர்த்தோடு, காளைகட்டி, அழுதக்கடவு, அழுதைமலை, கல்லிடும்குன்று, இஞ்சிப்பாறைக்கோட்டை, முக்குழி, கரிமலை, பெரியானைவட்டம் வழியாகப் பம்பையை சென்றடைகிறது. பின்னர் பம்பையில் இருந்து நீலிமலை வழியாக சன்னிதானத்துக்குச் செல்கின்றனர். இந்தப் பெருவழிப் பாதையில் அழுதைமலை, கரிமலை ஆகியவற்றின் கடினமான ஏற்றங்களையும் இறக்கங்களையும் கடக்க வேண்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்தப் பாதை, ஐயப்ப பக்தர்களின் பாரம்பரிய யாத்திரையுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.

ADVERTISEMENT

புல்மேடு பாதை: இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப்பெரியாறு அருகேயுள்ள சத்திரம் பகுதியில் இருந்து புல்மேடு வழியாகச் சபரிமலைக்குச் செல்லும் காட்டுப்பாதை. புல்மேடு, பாண்டித்தாவளம் வழியாகச் சன்னிதானத்தை அடையலாம். இந்தப் பாதை பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், வனத்துறையின் கட்டுப்பாடுகளுக்கும் அனுமதிக்கப்பட்ட நேரங்களுக்கும் உட்பட்டே பக்தர்கள் செல்ல முடியும்.

அக்.18-ல் நடந்த ‘கானன பூஜை’

இதில் எருமேலியில் இருந்து காளைகட்டி வழியாக வரும் பக்தர்கள், அழுதை ஆற்றைக் கடந்து அழுதைமலையில் ஏறத் தொடங்கும் பகுதியின் பெயர் அழுதக்கடவு. இங்குதான் கடந்த 18-ந் தேதி மல அரயர் பழங்குடியினரின் அமைப்பான ”மல அரயர் மகாசபை” சார்பில் கானன பாத பூஜை நடைபெற்றது.

மல அரயர் பழங்குடியினரின் வழிபாட்டு முறையே தனித்துவமானது. மலைகளையும் காடுகளையும் தெய்வங்களாக வழிபடுவதும், இறந்துபோன முன்னோர்களை வணங்குவதும் இவர்களது பாரம்பரிய வழக்கமாக இருந்துள்ளது.

காட்டில் உள்ள குறிப்பிட்ட மரங்களின் அடியில்தான் இவர்களது வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. அவல், பொரி, பழங்கள், அடை, இளநீர் உள்ளிட்டவற்றைப் படைத்து வழிபட்டுள்ளனர். சில வழிபாடுகளில் கள்ளும் படைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் வயதில் மூத்தவர்களே பூஜைகளை நடத்தி வந்துள்ளனர். பூஜையின்போது இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, உடலைக் குனிந்து 3 முறை வணங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் மல அரயர் பழங்குடியினரின் வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். சபரிமலையைச் சுற்றியுள்ள 18 மலைகளைக் குறிப்பவைதான் இந்த 18 படிகள் என்றும், அந்த மலைகளை வணங்கிய பிறகே ஐயப்பனை வழிபடும் வழக்கம் தங்களது முன்னோர்களிடம் இருந்ததாகவும் மல அரயர் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இப்படி மலைகளையும் காடுகளையும் முன்னோர்களையும் வழிபட்டு வந்த மல அரயர் பழங்குடியினர், சபரிமலை ஐயப்பன் வழிபாட்டிலும் தங்களுக்குப் பாரம்பரிய உரிமைகள் இருந்ததாகக் கூறி வருகின்றனர்.

யார் இந்த மல அரயர்கள்?

சபரிமலை ஐயப்பன் கோயிலின் வரலாற்றைப் பேசும்போது, அந்த மலையையே தங்களது வாழ்விடமாகவும், ஐயப்பனை தங்களது வழிபாட்டு தெய்வமாகவும் கொண்ட மல அரயர் பழங்குடிகளின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கேரளாவின் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மல அரயர்கள். இந்திய அரசின் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தச் சமூகத்தினர், சபரிமலை ஐயப்பனையும் மலை தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றனர்.

‘மல அரயன்’ அல்லது ‘மல அரசன்’ என்ற சொல்லுக்கு ‘மலைகளின் அரசன்’ என்று பொருள் கூறப்படுகிறது. மலைகளோடும் காடுகளோடும் நெருங்கிய தொடர்புடைய வாழ்க்கை முறையைக் கொண்ட இந்தப் பழங்குடியினர், தங்களுக்கென தனித்துவமான வழிபாட்டு முறைகளையும் பண்பாட்டு மரபுகளையும் பின்பற்றி வருகின்றனர்.

இவர்கள் களி (Ivarkali), கோல்களி (Kolkali) ஆகியவை மல அரயர் சமூகத்தின் பாரம்பரிய நடனங்களாகும். ஐயப்பன் வழிபாட்டுடன் மலை தெய்வங்களான ‘மல தெய்வங்கள்’ வழிபாடும் இவர்களது ஆன்மிக வாழ்வில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

மல அரயர் சமூகத்தின் வரலாற்றில் 18 புனித மலைகளுக்கு தனி இடம் உண்டு. சபரிமலை, பொன்னம்பலமேடு, கவுண்டமலை, நாகமலை, சுந்தரமலை, சிட்டம்பலமேடு, கல்கிமலை, மதங்கமலை, மயிலாடுமேடு, ஸ்ரீபாதமலை, தேவர்மலை, நிலக்கல்மலை, தலப்பாறமலை, நீலிமலை, கரிமலை, புதுசேரிமலை, காளைகட்டிமலை, இஞ்சிப்பாறைமலை ஆகிய 18 மலைகளிலும் தங்களது முன்னோர்கள் வாழ்ந்ததாக மல அரயர் சமூகத்தினர் கூறுகின்றனர்.

இந்த மலைகள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; தங்களது முன்னோர்களின் வாழ்க்கை, பண்பாடு, ஆன்மிகம், வரலாறு ஆகியவற்றோடு இணைந்த நிலப்பகுதிகள் என்பதே அவர்களது பார்வை.

மல அரயர் சமூகத்தின் வரலாறு கேரளாவில் ஆட்சி செய்த ஆய் அரச மரபுடன் தொடர்புடையது என்றும் அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. ஆய் அரச மரபின் கடைசி மன்னராக விக்கிரமாதித்திய வரகுணன் குறிப்பிடப்படுகிறார்.

ஆய் அரசர்களின் ஆட்சியில் காந்தளூர்சாலை என்ற புகழ்பெற்ற கல்வி மையம் செயல்பட்டதாகவும், அது இந்தியாவின் பழமையான கல்வி மையங்களில் ஒன்றாக விளங்கியதாகவும் மல அரயர் சமூகத்தின் வரலாற்றுப் பதிவு கூறுகிறது. இந்தக் கல்வி மையத்தை ஆய் அரச மரபினர் நிறுவி நிர்வகித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் உள்ள சபரிபீடமும் மல அரயர் சமூகத்தினரின் கல்வி மற்றும் போர்ப் பயிற்சி மையமாக இருந்ததாக அவர்களது மரபுவழி வரலாறு கூறுகிறது.

கந்தன்- கருத்தம்மா தம்பதி மகன் ஐயப்பன்

ஐயப்பன் தொடர்பாகவும் மல அரயர் சமூகத்தினர் தனித்துவமான வரலாற்றைக் கூறுகின்றனர்.

மல அரயர் சமூகத்தின் மரபுவழிக் கதைகளின்படி, ஐயப்பன் பொன்னம்பலமேட்டில் உள்ள ஒரு குகையில் கந்தன், கருத்தம்மா என்ற பழங்குடித் தம்பதிக்குப் பிறந்தவர். ஐயப்பனின் தோற்றம் குறித்த இந்தக் கதை, மல அரயர் சமூகத்தினர் தலைமுறை தலைமுறையாகக் கூறிவரும் நம்பிக்கைகளில் ஒன்றாகும். (https://scroll.in/article/900283/twist-in-sabarimala-tale-keralas-mala-araya-adivasi-tribe-claims-ownership-of-the-hill-shrine)

சோழர்களின் படையெடுப்புகளிலிருந்து ஆய் அரச மரபைக் காப்பாற்றுவதற்காக ஐயப்பன் தலைமையில் மல அரயர் வீரர்கள் போரிட்டதாக அவர்களது மரபுவழிக் கதைகள் தெரிவிக்கின்றன.

பாண்டியர்களைத் தோற்கடித்த சோழப் படைகள் பின்னர் கேரளாவில் இருந்த ஆய் அரச மரபின் பகுதிகளையும் தாக்கியதாகவும், அப்போது ஆயிரக்கணக்கான மல அரயர் வீரர்களை ஐயப்பன் வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கரிமலை அரயன், வலியகடத்தா, கொச்சுகடத்தா, உடும்பரவில்லன், புதுசேரிமுண்டன் ஆகியோர் மல அரயர் சமூகத்தின் வீரர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

சுமார் 100 ஆண்டுகள் நீடித்த போரில் ஆயிரக்கணக்கான மல அரயர் வீரர்கள் உயிரிழந்ததாகவும், இறுதியில் ஐயப்பன் தலைமையிலான படைகள் வெற்றி பெற்றதாகவும் அவர்களது மரபுவழி வரலாறு கூறுகிறது.

சபரிபீடத்தில் வாழ்ந்த சபரி என்ற பெண் முனிவருக்கும் மல அரயர் சமூகத்தின் வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. சபரிபீடம் ஆன்மிக வழிபாட்டுக்கான இடமாக மட்டுமல்லாமல், போருக்கான திட்டமிடல், பயிற்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்ற இடமாகவும் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். (https://www.sreesabareesacollege.in/)

சரி.. அப்படி என்ன உரிமைகளை மல அரயர் பழங்குடியினர் வைத்திருந்தனர்?

சபரிமலையில் மல அரயர் பழங்குடியினர் கோரும் உரிமைகள் என்பது கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கான உரிமை மட்டுமல்ல. ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது, மகரவிளக்கு ஏற்றுவது, மலைகளை வழிபடுவது, பாரம்பரியக் காட்டுப்பாதையைப் பயன்படுத்துவது, கோயில் வழிபாட்டில் தங்களது முன்னோர்களுக்கு இருந்த பங்கை அங்கீகரிப்பது என நீள்கிறது.

மல அரயர் சமூகத்தினர் கோரும் முக்கிய உரிமைகள்

ஐயப்பனுக்கு தேனாபிஷேகம் செய்யும் உரிமை

இன்று சபரிமலையில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வது முக்கியமான வழிபாடு. ஆனால், அதற்கு முன்பாகத் தங்களது முன்னோர்கள் காட்டில் சேகரித்த தேனைக் கொண்டு ஐயப்பனுக்குத் தேனாபிஷேகம் செய்ததாக மல அரயர் சமூகத்தினர் கூறுகின்றனர்.

41 நாட்கள் விரதமிருந்து, காட்டுக்குள் சென்று தேன் சேகரித்து, அதைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ததாக மல அரயர் மகாசபை பொதுச்செயலாளர் பி.கே. சஜீவ் விளக்கியுள்ளார்.

இந்தத் தேனாபிஷேக உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளில் ஒன்று.

பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு ஏற்றும் உரிமை

ஒவ்வோர் ஆண்டும் மகர சங்கராந்தியன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலையில் ஐயப்பனுக்குத் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும் நேரத்தில், சன்னிதானத்துக்கு எதிரே உள்ள பொன்னம்பலமேடு மலையில் 3 முறை ஒளி தோன்றும். இதைத்தான் பக்தர்கள் மகரஜோதி என்று அழைத்து வழிபடுகின்றனர்.

இந்த ஒளி தெய்வீகமானது என்று பக்தர்கள் நம்பி வந்த நிலையில், பொன்னம்பலமேட்டில் மனிதர்களால்தான் இந்த விளக்கு ஏற்றப்படுகிறது என்பது பின்னர் வெளிப்படையாகத் தெரியவந்தது. இதை 2011-ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் தெளிவுபடுத்தியது. தற்போது பொன்னம்பலமேட்டில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (Travancore Devaswom Board) ஊழியர்கள்தான் மகரவிளக்கு ஏற்றுகின்றனர். கேரள வனத்துறை மற்றும் போலீசாரின் பாதுகாப்புடன் இந்தச் சடங்கு நடைபெறுகிறது.

ஆனால், இந்த விளக்கைத் தங்களது முன்னோர்கள்தான் பாரம்பரியமாக ஏற்றி வந்ததாக மல அரயர் பழங்குடியினர் கூறுகின்றனர். அந்த உரிமையை மீண்டும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

1950-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த உரிமை தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மகரவிளக்கை மீண்டும் தாங்களே ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்பதும் அவர்களது முக்கியக் கோரிக்கை.

சபரிமலை கோயில் பூஜைகளை நடத்தும் உரிமை

மல அரயர் சமூகத்தின் வாய்மொழி வரலாற்றின்படி, கரிமலை அரயன், தாளினினி அரயன், கோரம்பன் அரயன் ஆகியோர் வழிவந்த பூசாரிகள் ஐயப்பனுக்குப் பூஜைகளை நடத்தி வந்துள்ளனர்.

அப்போது வழிபாடு பெரும்பாலும் விளக்கேற்றி வணங்கும் எளிய முறையில் இருந்ததாக மலையாள ஆய்வாளர் எம்.பி. மனோஜ் குறிப்பிடுகிறார்.

பின்னர் சபரிமலை கோயிலில் தாழமண் தந்திரி குடும்பத்தினரின் தலைமையிலான பூஜை முறைகள் முக்கியத்துவம் பெற்றதால், தங்களது முன்னோர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் ஒதுக்கப்பட்டதாக மல அரயர் சமூகத்தினர் கூறுகின்றனர்.

கரிமலை உள்ளிட்ட கோயில்களில் வழிபாட்டு உரிமை

மல அரயர் சமூகத்தினர் சபரிமலை சன்னிதானத்தில் மட்டுமல்லாமல், பாரம்பரியப் பெருவழிப் பாதையில் உள்ள பல வழிபாட்டுத் தலங்களுடனும் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

காளைகட்டி சிவன் கோயில், இஞ்சிப்பாறைக்கோட்டை பழங்குடியினர் வழிபாட்டிடம், கரிமலை மூர்த்தி கோயில் போன்றவை இந்தப் பாதையில் உள்ளன.

கரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தங்களது சமூகத்தினர் மீண்டும் பூஜை செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மல அரயர் அமைப்புகள் கோரியுள்ளன.

வெளிச்சப்பாடு எனப்படும் சாமியாடி உரிமை

கேரளாவின் பாரம்பரிய வழிபாட்டில் வெளிச்சப்பாடு என்பது தெய்வத்தின் அருள்வாக்கைக் கூறுபவரைக் குறிக்கும். தமிழில் சாமியாடி என்று சொல்லலாம். சபரிமலை வழிபாட்டில் தங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெளிச்சப்பாடாகச் செயல்படும் உரிமை இருந்ததாகவும், அந்த உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பதும் மல அரயர் கோரிக்கை.

திருவாபரண ஊர்வலத்தில் பங்கேற்கும் உரிமை

சபரிமலை ஐயப்பனுக்கான திருவாபரணங்கள் கேரளாவின் பந்தளம் அரண்மனை வளாகத்தில் உள்ள வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஆண்டுதோறும் மகரவிளக்கு திருவிழாவுக்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கக் கிரீடம், ஆபரணங்கள் உள்ளிட்டவை 3 பெட்டிகளில் வைக்கப்பட்டு, பக்தர்கள் தலையில் சுமந்தபடி சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கால்நடையாகக் கொண்டு செல்கின்றனர். இந்தப் பயணம் பொதுவாக 3 நாட்கள் நடைபெறும்.

முதல் நாள் குளநடை, உள்ளன்னூர், ஆரன்முளா வழியாகச் சென்று ஆயிரூர் புதியகாவு தேவி கோயிலில் இரவு தங்குகின்றனர். 2-வது நாள் வடசேரிக்கரை, மாடமண், பெருநாடு வழியாக லாஹா வனத்துறை ஓய்வு விடுதியை அடைகின்றனர். 3-வது நாள் பிளாப்பள்ளி, நிலக்கல், அட்டத்தோடு, பெரியானைவட்டம், நீலிமலை வழியாகச் சரங்குத்தியை அடைகின்றனர். அங்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, திருவாபரணங்கள் சன்னிதானத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

மகரவிளக்கு நாளன்று மாலையில் அந்த ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்துடன் பந்தளம் அரச குடும்பத்தின் பிரதிநிதியும் பல்லக்கில் பயணிக்கிறார்.

திருவாபரணங்கள் திரும்ப எடுத்துச் செல்லப்படும் ஊர்வலத்தில் சரங்குத்தி வரை உடன் செல்லும் பாரம்பரிய உரிமை தங்களது சமூகத்தினருக்கு இருந்ததாகவும் மல அரயர் அமைப்புகள் கூறியுள்ளன.

பாரம்பரியக் காட்டுப்பாதை உரிமை

எருமேலியில் இருந்து காளைகட்டி, அழுதக்கடவு, கரிமலை வழியாகப் பம்பைக்குச் செல்லும் பெருவழிப் பாதையை நேரக் கட்டுப்பாடுகள் இல்லாமல் திறக்க வேண்டும் என்பது மல அரயர் மகாசபையின் மற்றொரு கோரிக்கை.

இந்தப் பாதையில் உள்ள பழங்குடியினரின் வழிபாட்டுத் தலங்களைப் பக்தர்கள் தரிசிக்கவும், யாத்திரை காலத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை விற்று வாழும் பழங்குடியினக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இது அவசியம் என்று மகாசபை கூறுகிறது.

2023-ம் ஆண்டில் இந்தப் பாதைக்கான நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் 24 மணி நேரமும் பாதையைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்கிறது.

இந்த உரிமைகள் எப்போது பறிபோனதாகக் கூறுகின்றனர்?

மல அரயர் மகாசபையின் ஒரு தரப்பின் வரலாற்றுக் கூற்றின்படி, 1900-களில் பந்தளம் அரச குடும்பத்தின் ஆதிக்கத்தால் சபரிமலைப் பகுதியில் இருந்து அவர்களது முன்னோர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு தாழமண் தந்திரி குடும்பத்தின் பூஜை முறைகள் சபரிமலையில் முக்கியத்துவம் பெற்றன என்கின்றனர்.

ஆனால் 1950-ம் ஆண்டு வரை தேனாபிஷேகம், மகரவிளக்கு உள்ளிட்ட சில வழிபாட்டு உரிமைகள் தங்கள் சமூகத்தினரிடம் நீடித்ததாகவும், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நிர்வாகத்துக்குப் பின்னர் அந்த உரிமையும் மறுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

நீதிமன்ற வழக்குகள்

மல அரயர் பழங்குடியினர் தங்களது பாரம்பரிய உரிமைக்காக நீதிமன்றப் படிகளையும் ஏறினர். பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு ஏற்றும் உரிமை தங்களுக்கே இருப்பதாகக் கூறி, மல அரயர் சம்யுக்த சமிதி சார்பில் 2013-ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், 1953-ம் ஆண்டிலேயே சபரிமலை வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி மல அரயர் சமாஜம் தேவசம் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்ததை மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், 2011-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு ஏற்றச் சென்ற தங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், மல அரயர் சமூகத்தினருக்கு மகரவிளக்கு ஏற்றும் உரிமை இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கேரள வனத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. பொன்னம்பலமேடு பெரியாறு புலிகள் காப்பகத்துக்குள் இருப்பதால், அனுமதியின்றி யாரையும் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் வாதிட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பி.ஜி. அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

2023-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு ஏற்றும் உரிமை மல அரயர் சமூகத்தினருக்கு இருந்தது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை என்று தெரிவித்தது.

மேலும், பல தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய உரிமை என்று கூறப்படும் ஒன்றை உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என்றும் விளக்கியது.

இதையடுத்து, மகரவிளக்கு ஏற்றும் உரிமை கோரி மல அரயர் சம்யுக்த சமிதி சார்பில் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில், மல அரயர் சமூகத்தினரின் உரிமை கோரிக்கையை விசாரிக்க கேரள பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பாரம்பரிய வழிபாட்டு உரிமை தொடர்பான இந்த விவகாரத்தை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்களது முன்னோர்களுக்கு இருந்ததாகக் கூறும் வழிபாட்டு உரிமைகளை மீட்க மல அரயர் பழங்குடியினர் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். நீதிமன்றப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், தங்களது கோரிக்கைகளை அவர்கள் கைவிடவில்லை.

உலுக்கிய உரிமைப் போராட்டம்

இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக 2012-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான மல அரயர் சமூகத்தினர் காளைகட்டி மலையிலிருந்து பொன்னம்பலமேடு நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டனர். பொன்னம்பலமேட்டில் மீண்டும் தங்களது பாரம்பரிய முறைப்படி மகரவிளக்கு ஏற்ற வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்.

ஆனால் போலீசாரும் நீதிமன்றமும் இந்தப் பயணத்தைத் தடுத்தது. இதையடுத்து பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு ஏற்றும் உரிமை மீண்டும் கிடைக்கும் வரை, புனித உடும்பரமலையில் உள்ள கோயிலில் மகரவிளக்கு ஏற்றும் வழக்கத்தைத் தொடருகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் அக்டோபர் 18-ந் தேதி அழுதக்கடவில் நடைபெற்ற கானன பாத பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. சபரிமலை காட்டுப்பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சபரிமலைக்கும் தங்களது முன்னோர்களுக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பையும் மல அரயர் பழங்குடியினர் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளனர்.

ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். சரணம் ஐயப்பா என்ற முழக்கம் அந்த மலைகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆனால், அதே மலைகளைத் தங்கள் வீடாகவும், அந்தக் காடுகளைத் தங்கள் வாழ்வாகவும், ஐயப்பனைத் தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் கொண்டிருந்த மல அரயர் பழங்குடியினர், தங்களது பாரம்பரிய உரிமைகளுக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஐயப்பனைக் காண மலையேறும் பக்தர்களின் சரண கோஷங்களுக்கு நடுவே, அந்த மண்ணின் பூர்வகுடிகள் தங்களது உரிமைகளுக்காக எழுப்பும் குரலும் ஒருநாள் ‘நீதியின் காதுகளுக்கு’ கேட்குமா?

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share