- நா.மணி
2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூடியூபில் ஒரு பாடல் வெளியானது. “அங்கங்கே ஒரு நாடு இருந்ததே, அந்நாட்டில் ஆறிருந்ததே, ஆறு நிறைய மீன் இருந்ததே….” என்று தொடங்கும் அந்தப் பாடல், நம்முடைய சிந்தனையை அப்படியே நிறுத்திவிடும் வல்லமை கொண்டது. சிலருக்கு நெஞ்சம் பதறும். சிலருக்கு இது அதீதக் கற்பனையாகத் தோன்றும்.
நல்ல மரங்கள் இருந்தன. நல்ல நிழல் இருந்தது. அந்த நிழலில் ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்ந்தன… என்று பயணிக்கும் பாடல், இறுதியில் வெயில் நரகத் தீயைப் போலச் சுட்டெரிக்கும் ஒரு நிலையைச் சித்திரிக்கிறது. இவ்வாறு நகர்ந்து, ஒரு நாடே இறந்துபோனதா, அந்த நாடு ஒரு கனவா என்ற கேள்வியுடன் முடிகிறது. கே.ஜே. சாஹில் அகமது படைத்த அந்தப் பாடலின் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு. ஆனாலும், அதில் அதீதக் கற்பனை கலந்திருக்கிறதோ என்ற எண்ணமும் அவ்வப்போது தோன்றும். இருந்தபோதிலும், அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதைத் தவிர்க்க முடிவதில்லை. அதன் இனிமையும், கண் விரியும் காட்சிகளும், சொற்களை தேர்வு செய்த பாங்கும், மீண்டும் அதனை நோக்கி நம்மை இழுத்துச் செல்கின்றன.
17/10/2026 ஒரு சம்பவம். ஓர் இடத்தைப் பார்த்ததும் அந்தப் பாடல் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டது. அந்தப் பாடலும், அந்த இடமும் எப்போதும் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த இடத்தை நேரில் பார்த்தபோது மனதுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அது நான் சிறுவயதில் பார்த்து, பழகி, விளையாடி, வாழ்வின் ஒரு பகுதியாக அனுபவித்த வட்டமலைக்கரையின் ஒரு பகுதி!
ஆறாக வாழ்ந்த ஒரு ஓடை.
செஞ்சேரிமலைப் பகுதியில் தொடங்கி, அமராவதி ஆற்றில் சென்று சேரும் ஒரு நீர்வழியை ஓடை என்று சொல்லலாம். ஆனால், அந்தப் பகுதி மக்கள் அதனைப் பொதுவாகக் ‘கரை’ என்றே அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஊருக்கும் அருகில் செல்லும்போது அந்தந்த ஊரின் பெயரால் அது அழைக்கப்பட்டது. நிழலி என்ற இடத்தில் செல்லும்போது நிழலைக்கரை. வட்டமலை என்ற ஊருக்கு அருகில் வரும்போது வட்டமலைக்கரை.
இந்தக் கரையின் கரைகளில்தான் எனது சிறுவயது நாட்கள் கழிந்தன. அந்தக் கரையின் இருபுறங்களிலும் நல்ல புங்கை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. வேறொரு பகுதியில் சீமைக் கருவேல் மரங்கள் பரவலாக இருந்தது . ஆங்காங்கே கரையோரங்களில் பல்வகை மரங்கள் ஏராளமான இருந்தன. கரையின் கிடைமட்டப் பகுதி முழுவதும் வெள்ளை வெளேர் என்ற மணல் பரவியிருந்தது. அது காவிரி ஆற்றின் மணலைப் போன்றதல்ல. ஆனாலும், பரந்துகிடந்த மணற்பரப்பு தனித்த அழகைக் கொண்டிருந்தது. சில இடங்களில் இருந்த மெல்லிய மணல், சிறுவர்கள் மணல் வீடு கட்டுவதற்கும் பயன்பட்டது. தண்ணீர் கலந்த ஈர மணல்.
எல்லா ஆறுகளிலும் காணப்படுவதைப்போல, அந்த மணற்பரப்புக்கு நடுவே பெரிய பாறைகள் இருந்தன. பாறைகளை ஒட்டி ஓடும் நீரால் மணல் பறிக்கப்பட்டு குழியாக இருக்கும். ஆற்றில் இறங்கி நின்று முன்னும் பின்னும் பார்த்தால், ஆறு வளைந்து மறையும் பகுதிவரை கரைகளும் மணலும் கோடு போட்டது போல் நன்றாகத் தெரியும். வெயில் காலத்தில் மணலைப் பார்க்க கண்கள் கூசும்.
பெயரளவில் அது ஓடையாக இருந்தாலும், காட்சியளவில் ஓர் ஆறாகவே இருந்தது.
பெரும்பாலான நாட்களில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் இரண்டு கரைகளும் நிரம்பி, பொங்கி பிரவாகம் எடுத்து வழிந்தோடிய காட்சிகளையும் பார்த்திருக்கிறோம். கரை பெருக்கெடுத்து ஓடும் போது அதனைக் கடக்க முடியாது.
ஆடு, மாடுகளுக்குத் தண்ணீர் கிடைப்பதற்கான அடிப்படை ஆதாரமாக அந்தக் கரை விளங்கியது.
கறவை மாடுகளுக்கு தவிடு, புண்ணாக்கு பருத்தித் கொட்டை கொடுத்து தண்ணீர் கட்டுவார்கள். மற்ற ஆடு, மாடுகள் கரையில் வயிறாரத் தண்ணீர் குடித்தன. விவசாய வேலைக்குச் சென்றவர்கள் மதிய வேளையில் ஆற்றில் குளித்து மகிழ்ந்தார்கள். எங்களைப் போன்ற சிறுவர்களுக்குப் பள்ளி விடுமுறை அந்த நாட்களில் பெரும்பாலான நேரத்தை இந்தக் கரையில்தான் கழித்தோம். நாங்களும் ஆடு, மாடுகளை மேய்ப்பது உண்டு . அது வெறும் வேலையாக இருக்கவில்லை. அது இயற்கையோடு வாழ்ந்த ஒரு வாழ்க்கை. அந்தக் கரையில் வாழ்ந்த மக்கள், நந்நீருக்கு அதில் ஊற்றுப் படித்தே உளமார குடித்து மகிழ்ந்தார்கள்.
ஓடையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அருகில் உள்ள மணலைக் கைகளால் தோண்டினால் போதும். தண்ணீர் ஊற்றெடுக்கும்.சிறிது நேரம் காத்திருந்தால் அந்த நீர் தெளிந்துவிடும். குடத்தில் சேகரித்து குடிக்கப் பயன்படுத்தலாம். எருமை மாடுகள்
ஆடு, மாடுகளைக் கழுவி விடுவோம். எருமைகள் படுத்து மகிழ்ந்தன. கரையோர மரங்களில் ஏறி விளையாடுவது, நீரில் இறங்கி மகிழ்வது, மீன்களைப் பிடிப்பது என அந்த ஓடையோடு இணைந்திருந்த நினைவுகள் ஏராளம்.
பள்ளிப் பருவத்தில் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது நாங்கள் பார்த்து அனுபவித்த எங்கள் கரை அது. அந்தக் கரையின் அருகில், வட்டமலையை ஒட்டி காங்கேயம்–தாராபுரம் அல்லது பழனி செல்லும் பிரதான சாலை அமைந்திருந்தது. தரைப் பாலம் அப்போது. மழைக்காலத்தில் தரைப்பாலத்தின் மேற்பரப்பில் பாசி படர்ந்திருக்கும். அங்கு நடந்து செல்வதே சவாலானது. வழுக்காமல் நடப்பதற்குத் தனிப் பயிற்சியே வேண்டும்.
ஆனால், நாங்கள் அந்த வழியாகத் தொடர்ந்து சைக்கிளில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள். பாசி படர்ந்த தரைப்பாலத்தில் சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்வதில் எங்களுக்குத் தனி மகிழ்ச்சி. எங்களைப் பார்த்து வேகமாகச் சைக்கிளில் வருபவர்கள் சிலர் வழுக்கி விழுவதும் உண்டு. இன்று நினைத்துப் பார்த்தால், அவை வெறும் சிறுவயது விளையாட்டுகள் அல்ல. அந்த ஆற்றோடும் நிலப்பரப்போடும் எங்களுக்கு இருந்த நெருக்கத்தின் வெளிப்பாடுகள்.
வட்டமலைக்கரையில் ஓடிவந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தாசநாயக்கன்பட்டி என்ற இடத்தில் அந்த நீர்வழியின் குறுக்கே ஒரு மண் அணை கட்டப்பட்டது. அதன் மூலம் சுமார் 6,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று பேசப்பட்டது.
அந்த அணை கட்டப்பட்ட பிறகு எவ்வளவு காலம் தண்ணீர் பாய்ந்தது? எவ்வளவு நிலம் உண்மையில் பாசன வசதி பெற்றது? காலப்போக்கில் நீர்வரத்து ஏன் குறைந்தது? என்ற கேள்விகள் அதிக தேடல் நிறைந்தது.

ஒருகாலத்தில் பெரும்பாலான நாட்களில் நீர் ஓடிக்கொண்டிருந்த வட்டமலைக்கரை, இன்று மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பாயும் நீர்வழியாக மாறியது எப்படி? மலைப்பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்துவிட்டதா? நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டதா? மணற்பரப்பின் இயல்பு மாறியது ஏன்? நிலப் பயன்பாட்டு முறைகளும் விவசாயச் செயல்பாடுகளும் இதற்குக் காரணமாக இருந்தனவா? இவை ஒவ்வொன்றும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆழமான கேள்விகள். இவற்றில் எதையும் உரிய ஆய்வின்றி உறுதியான காரணமாகக் கூற முடியாது.

மணலற்ற கரை! மரங்களற்ற ஆறு!
நேற்று அந்தக் கரையைப் பார்த்தபோது முதலில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அதன் மணற்பரப்பின் மறைவு.
ஒருகாலத்தில் வெள்ளை வெளேர் என்று பரந்திருந்த அந்த மணற்பரப்பில் இன்று ஒரு பிடி மணல்கூடத் தென்படவில்லை. பெயரளவில்தான் அதை இன்னமும் ‘கரை’ என்று அழைக்கிறோமோ என்று தோன்றியது. நாங்கள் பார்த்து அனுபவித்த அந்தக் கரையில் ஓர் ஆற்றுக்குரிய அத்தனை பண்புகளும் இருந்தன. ஓடும் நீர், மணற்பரப்பு, பெரிய பாறைகள், கரையோர மரங்கள், மீன்கள், ஊற்றுகள், ஆடு மாடுகளுக்கு பயன்பாடு என ஓர் உயிரோட்டமான சூழலியல் அமைப்பாக அது விளங்கியது. ஆனால், இன்று அதே இடத்தைப் பார்த்தால் ஓர் ஆற்றுக்குரிய அடையாளங்களே மங்கிப்போயிருக்கின்றன. ஆற்றுக்குள் இறங்கி நடந்து செல்லும் பழைய அனுபவத்தை நினைத்துப் பார்க்கிறேன். இன்று அந்தப் பாதையில் நடப்பதற்குக்கூடத் தயக்கம் ஏற்படுகிறது.
ஒருகாலத்தில் விவசாய வேலைக்குச் சென்றவர்கள் குளித்துவிட்டு, வேட்டியில் மீன்களைப் பிடித்து மகிழ்ந்தார்கள். ஒரு நீண்ட குச்சியால் நீரை வேகமாக அடிப்போம்.
தண்ணீர் தெறிக்கும். தெறித்து விழும் தண்ணீரில் மீன்களும் துள்ளிக் கரைக்கு வெளியே விழுவதும் உண்டு. அத்தகைய உயிரோட்டம் நிறைந்திருந்த ஓடை, இன்று நம்புவதற்கே கடினமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பார்த்த ஓர் ஆறு, எங்கள் கண் முன்னாலேயே தனது இயல்பான தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது. இது ஓர் ஆற்றின் மரணமா? என்று அஞ்சத் தோன்றுகிறது.

நான் வாழ்ந்த அந்தக் கரையை மீண்டும் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். சிறுவயதில் பார்த்த அந்தக் கரை இப்போது எப்படி இருக்கும் என்ற கற்பனை மேலெழுந்து கொண்டே இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்பு அமையவில்லை. நேரில் பார்த்த பிறகு, “பார்த்திருக்க வேண்டாமோ” என்றுகூட தோன்றுகிறது. நான் ஊற்று தோண்டித் தண்ணீர் குடித்த இடங்கள், குடம் குடமாகத் தண்ணீர் எடுத்துச் சென்ற பகுதிகள், ஆடு, மாடுகளைக் கழுவிவிட்ட இடங்கள், தண்ணீரில் முடிந்தவரை படுத்துக் கிடந்த நாட்கள், மீன்களைப் பிடித்து விளையாடிய பொழுதுகள் என ஒவ்வொன்றும் மனதில் அழியாத சித்திரங்களாக இருக்கின்றன.

ஆனால் இன்றைய யதார்த்தம், வேறொரு காட்சி. ஆங்காங்கே கொஞ்சம் நீர். அதுவும் முந்தைய நாள் பெய்த மழையால் தேங்கியிருந்தது. ஆங்காங்கே குழிகள், பெரிய பாறைகள், புதர்கள். ஒரு காலத்தில் நீரோட்டத்துடனும் மணற்பரப்புடனும் மரங்களுடனும் உயிர்ப்புடன் காட்சியளித்த இடம் இன்று முற்றிலும் மாறியிருந்தது. அந்த இடத்தில் நின்றபோது, சஹில் அகமதுவின் பாடலின் வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. “அங்கங்கே ஒரு ஆறு இருந்ததே; ஆற்றில் மீன் இருந்ததே!”இப்போது அவை வெறும் பாடல் வரிகளாகத் தோன்றவில்லை. என் சொந்த வாழ்க்கையின் ஒரு பெரும் சோகத்தை சொல்லும் சாட்சியங்களாகத் தோன்றின.
கட்டுரையாளர்

பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
