VIDEO: கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை.. மருதமலை கோயிலில் குளம் போல் தேங்கிய மழைநீர்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று (அக்டோபர் 20) மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது.

கோவையில் கடந்த வாரம் வரை கடும் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 5 நாட்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் இன்று காலையில் பெரும்பாலான பகுதியில் கடும் வெயில் நிலவிய நிலையில் பிற்பகலுக்கு பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை கோவை காந்திபுரம், கணபதி, கவுண்டம்பாளையம், துடியலூர், இடையார்பாளையம், வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, சாய்பாபா காலனி, ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக கவுண்டம்பாளையம் உட்பட ஒரு சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை காரணமாக ஒரு சில தெருக்களிலும் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் மழை நீர் கலந்து ஓடியதால் பாதசாரிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

குறிப்பாக, செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை என்பதால் இன்று கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்தச் சூழலில், மாலை நேரத்தில் பெய்த கனமழையால் கோயில் வளாகத்தில் மழைநீர் பெருமளவில் தேங்கியது.

ADVERTISEMENT

சுமார் அரை மணி நேரம் பெய்த மழைக்கே, கோயில் வளாகம் முழுவதும் குளம்போல் காட்சியளித்தது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் தேங்கிய மழைநீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயில் வளாகத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில், குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீரைக் கடந்து சென்றனர்.

மழைக்காலங்களில் கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள வடிகால் வசதிகளைச் சீரமைத்து, மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share