மதுரையில் வைகை நதி ‘கார் பார்க்கிங்’கான துயரம்!

Published On:

| By Mathi

Madurai- Vaigai River- Car Parking

மதுரையில் வைகை நதி, கார் பார்க்கிங்காக பயன்படுத்தப்படுவதாக சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருருந்ததாது: வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, நதிக்குள்ளே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. “நதி கார்ப்பார்க்கிங்காகப் பயன்படுத்தப்படுகிறது” என்று நேற்றைய நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

அதைப் பார்த்ததும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரிடம் பேசினேன். “அந்தக் கதவின் சாவிகள் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூவரிடமும் இருக்கிறது; நாங்கள் திறந்துவிடவில்லை” என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு எனக்குப் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

ஆனால், இன்று காலை மீண்டும் அதே இடத்தில், வைகை நதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதையும், கதவு முழுமையாகத் திறந்திருப்பதையும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள்.

ADVERTISEMENT

வைகை நதியைப் பார்க்கிங்காகப் பயன்படுத்தக் காரணமானவர்கள் மீதும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அளித்த விளக்கம்: மேற்கண்ட புகார் தொடர்பாக, புலத் தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், வருவாய்த் துறை, காவல்துறை, நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியை சார்ந்த அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, பிரதான நுழைவாயில் சேதமடைந்திருந்ததால் வைகை ஆற்றுப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும், சேதமடைந்துள்ள பிரதான நுழைவாயிலை உடனடியாகச் சீரமைக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்விகள்

மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி, “ வைகை நதியில் கார்பார்க்கிங் செய்யப்படுவதைப்பற்றிய எனது பதிவின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விபரத்தை மாவட்ட ஆட்சியர் தெரியப்படுத்தியுள்ளார்.

“மாநகராட்சி அதிகாரிகளும் வடக்கு வட்டாட்சியரும் அந்த இடத்தைப் பார்வையிட்டு, வைகை ஆற்றுப் படுகையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்டதை உறுதி செய்துள்ளனர். முதன்மைக் கதவு சேதமடிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டு, கதவைப் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டுவரும்” என்று தெரிவித்துள்ளார். ஆட்சியரின் உடனடி தலையீட்டுக்கு நன்றி.

  • கதவைச் சேதப்படுத்தியது யாரெனக் கண்டறிவது கடினமல்ல, எதிரிலேயே சிசிடிவி (CCTV) கேமராக்கள் உள்ளன.
  • நதியைப் பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள நீர்வளத்துறை இது சார்ந்து ஏன் உரிய புகார் அளிப்பதில்லை?

இது போன்ற கேள்விகள் பதிலின்றி நிலைக்கின்றன.

இந்தப் பிரச்சனை தொடராமல் இருக்க உறுதியான, நிரந்தரதீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share