புயல் வருமோ? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

Low Pressure Area-Bay of Bengal

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 20-ந் தேதி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் 1.40 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இந்தச் சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இதே பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை, கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்டோபர் 21-ந் தேதி) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 22-ந் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

அக்டோபர் 20 முதல் 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக வலுப்பெறுமா?

வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அது புயலாக வலுப்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுப்பெறும் என்பது குறித்து எந்த முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share