தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், இன்று (அக்டோபர் 19-ந் தேதி) கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், நாளை (அக்டோபர் 20-ந் தேதி) டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
இன்று (அக்டோபர் 19-ந் தேதி) நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
நாளை (அக்டோபர் 20-ந் தேதி) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்.21-ல் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 22-ல் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

அக். 23-ல் 10 மாவட்டங்களில் கனமழை
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக் 24, 25-ல் 23 மாவட்டங்களில் மழை
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 23 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். இந்த நாட்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சென்னையில் மழை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அக்டோபர் 22 மற்றும் 23-ந் தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
