கோவை: கனமழையால் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்! – மாநகராட்சி அதிகாரியிடம் அமைச்சர் சம்பத்குமார் வாக்குவாதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சம்பத் ஒருநாள் கூட முறையாக வேலை நடப்பதில்லை… எங்கே தூர்வாரினீர்கள்? நாளை மக்களுடன் வந்து காட்டுங்கள்!” என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் கடந்த வாரம் வரை பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதன் காரணமாக சிவானந்தா காலனி, சங்கனூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், கழிவு நீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதிகளைச் சீரமைத்து, தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மாநகராட்சி அதிகாரியிடம் மழைநீர் தேங்கியுள்ளதற்கான காரணம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

அப்போது அதிகாரியிடம் கடுமையாகப் பேசிய அமைச்சர், “நீங்கள் சரியாகச் செயல்படவில்லை. இங்கு பார்த்தால் எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. ஒருநாள் கூட வேலை நடப்பதில்லை. எந்தெந்த இடங்களில் வேலை செய்தீர்கள்? அதை வந்து காட்டுங்கள். நாளை மக்களுடன் வந்து, நீங்கள் வேலை செய்த இடங்களைக் காட்டுங்கள். மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வாரி பராமரித்திருந்தால், இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது எனக் கூறிய அமைச்சர், “சரியாகத் தூர்வாரி இருந்தால் இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டிருக்காது” என்று காட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வடிகால்களைச் சீரமைத்து மீண்டும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share