சிவகங்கை மாவட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு காளையைப் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ‘இரட்டையர்கள்’ இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த ‘சுள்ளான்’ மதனும் நேற்று (அக்டோபர் 18-ந் தேதி) மஞ்சுவிரட்டு நடைபெற்ற இடத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை பழிவாங்கும் நடவடிக்கையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2024-ல் நடந்த இரட்டை கொலையும் சுள்ளான் மதனும்
சிவகங்கை சீமையை பதற வைத்துக் கொண்டிருக்கிறது புதுப்பட்டியைச் சேர்ந்த சக்தி என்பவரது மகன் மதன் என்ற ’சுள்ளான்’ மதன் படுகொலை சம்பவம்..
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு அலப்பறைகள் செய்வதிலும் சுள்ளான் மதன் கும்பல் சளைத்ததில்லை. அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டுவது, நண்பர்கள் புடைசூழ காதலியுடன் உலா வருவது, ஆள் உயர அரிவாள்களையும் வாள்களையும் கையில் ஏந்தியபடி போஸ் கொடுப்பது என விதவிதமாக ரீல்ஸ் போட்டு வந்தனர். ‘எப்போதும் கெத்து நாங்கதான்’ என ரவுசு விடும் வீடியோக்களை வெளியிட்டு, சமூக வலைதளங்களிலும் ‘அட்டகாசம்’ செய்து வந்தது சுள்ளான் மதன் கும்பல்.

யார் இந்த சுள்ளான் மதன்? ஏன் சிவகங்கை சீமை பதறிக் கொண்டிருக்கிறது? இந்த ‘சுள்ளான்’ மதனின் கொலை சரித்திரம் 2024-ல் ஒரு ஜல்லிக்கட்டு என்கிற மஞ்சுவிரட்டு போட்டியில் தொடங்கியது.
2024-ம் ஆண்டு ஜூன் 22-ந் தேதி. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள பணங்குடி கிராமம். அங்கு மஞ்சுவிரட்டு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து காளைகளுடன் வந்த இளைஞர்கள் மஞ்சுவிரட்டில் பங்கேற்றனர்.
அவர்களில் காரைக்குடி அருகே சாத்தரசன்பட்டியைச் சேர்ந்த நவீன், கல்லல் பகுதியைச் சேர்ந்த சூர்யா, அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த ராஜேஷ் (21) ஆகியோரும் அடங்குவர். இவர்கள் 3 பேரும் தங்களது காளைகளை அவிழ்த்துவிடுவதற்காக வந்திருந்தனர்.
நவீன், தேவகோட்டை அருகே உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். மஞ்சுவிரட்டு என்றால் இவருக்கும் இவரது நண்பர்களுக்கும் அலாதி ஆர்வம். எங்கு மஞ்சுவிரட்டு நடந்தாலும் காளைகளுடன் சென்றுவிடுவார்கள்.
அன்றைய மஞ்சுவிரட்டில் அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த ராஜேஷின் காளை அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த அந்தக் காளையை 4 இளைஞர்கள் சேர்ந்து பிடித்தனர். அவர்களில் ஒருவர்தான் புதுப்பட்டியைச் சேர்ந்த மதன் என்ற ‘சுள்ளான்’ மதன்.
மஞ்சுவிரட்டில் விதிகளை மீறி காளையைப் பிடித்ததால் ராஜேஷும் அவரது நண்பர்களும் ஆத்திரமடைந்தனர்.
“ஏய்.. இப்படியெல்லாம் மாட்டைப் பிடிக்கக் கூடாது.. மாட்டை விடு..” என்று மதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதனும் பதிலுக்கு வாக்குவாதம் செய்தார். வார்த்தைகள் தடித்தன. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதற்கு மேல் அங்கு நிற்க வேண்டாம் என்று முடிவெடுத்த ராஜேஷ், நவீன், சூர்யா ஆகியோர் தங்களது 3 காளைகளையும் டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றினர். ஆனால் பிரச்சனை அத்துடன் முடியவில்லை.
காளைகளை ஏற்றிக்கொண்டிருந்த இடத்திற்கே மதன் வந்தார். “நான் மாட்டைப் பிடிப்பேன்.. நீ மாட்டைப் பிடிக்க விடமாட்டியா?” என்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுவிரட்டுப் பார்வையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். மதனுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவரைத் தாக்கவும் முயற்சித்தனர்.

அந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காரடிப்பட்டியைச் சேர்ந்த “இரட்டையர்களான” ஜெயசூர்யா , சுபாஷ் ஆகியோரும் இருந்தனர்.
ஆண்டிச்சாமியின் மகன்களான இவர்கள் இருவரும் தங்களது சொந்த ஊரில் ஏற்பட்ட குற்ற வழக்குப் பிரச்சனையால் சிவகங்கைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தனர். வேலைக்குச் செல்வது ஒருபுறம் இருந்தாலும், மஞ்சுவிரட்டு நடைபெறும் இடங்களுக்குச் செல்வதும் இவர்களது வழக்கமாக இருந்தது. பணங்குடி மஞ்சுவிரட்டில் ராஜேஷ், நவீன் ஆகியோருக்கு ஆதரவாக ஜெயசூர்யாவும் சுபாஷும் மதனைத் தாக்க முயற்சித்தனர்.
இதன் பின்னர் 8 நாட்கள் கடந்தன.
2024-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்மாயை ஒட்டி ஒரு தோப்பு. அங்கு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. அருகே ஒரு பந்தலும் கட்டிலும் இருந்தன.
அன்று மாலை ஜெயசூர்யாவும் சுபாஷும் இருசக்கர வாகனத்தில் அந்தத் தோப்புக்கு வந்தனர். சிறிது நேரத்தில் ராஜேஷும் நவீனும் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து சேர்ந்தனர். நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து பேசத் தொடங்கினர்.
“என்னப்பா.. மஞ்சுவிரட்டுக்குப் போயிட்டு வந்துட்டீங்களா?”
“என்னய்யா.. நீங்க எல்லாம் மஞ்சுவிரட்டுக்கு வரலையா? நாங்க போனோம்.. வடமாடு மஞ்சுவிரட்டு..”
இப்படியாக மஞ்சுவிரட்டில் நடந்த சம்பவங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.
மாலை 4 மணிக்குத் தொடங்கிய பேச்சு இரவு 7 மணியைத் தாண்டியும் நீண்டது. நண்பர்கள் ஒன்றாக மது அருந்தினர். நேரம் நகர்ந்தது.
இரவு 9.30 மணி.
தோப்பைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. அங்கு ஒரு சிறிய விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் நண்பர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது கண்மாய்க் கரைக்குப் பின்னால் இருந்து வாகனங்களின் முகப்பு விளக்குகள் தெரிந்தன.
ஒன்று.. இரண்டு.. மூன்று..
3 இருசக்கர வாகனங்கள் தோப்பை நோக்கி வந்தன. அவற்றில் 7 பேர் வந்திறங்கினர்.
அந்தக் கும்பலில் கத்தியுடன் நின்றவர், 8 நாட்களுக்கு முன்பு பணங்குடி மஞ்சுவிரட்டில் தகராறில் ஈடுபட்ட அதே மதன். அவருடன் முத்துப்பாண்டியும் வந்திருந்தார். வந்திறங்கிய 7 பேரும் தோப்பில் அமர்ந்திருந்தவர்களைச் சுற்றி வளைத்தனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த நவீன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். அவரது முதுகில் வெட்டு விழுந்தது. காயத்துடன் அங்கிருந்து ஓடினார்.
ராஜேஷும் அங்கிருந்து தப்பியோடினார். அஜய்யும் தப்பினார்.
ஆனால் சகோதரர்களான ஜெயசூர்யாவும் சுபாஷும் அந்தக் கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். 7 பேர் கொண்ட கும்பலில் 5 பேர் சுற்றி நின்றனர். மதனும் முத்துப்பாண்டியும் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கினர்.
ஜெயசூர்யாவின் தலையில் அடுத்தடுத்து வெட்டுகள் விழுந்தன. சுபாஷின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளிலும் வெட்டுகள் விழுந்தன. இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். அண்ணன், தம்பி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாக்குதலில் இருந்து தப்பிய நவீன், ராஜேஷ், அஜய் ஆகிய 3 பேரும் அருகிலுள்ள பகுதியில் மறைந்திருந்தனர். வெளியே வந்தால் தங்களையும் வெட்டிக் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் அங்கேயே காத்திருந்தனர்.
இரவு 10 மணியைக் கடந்தது.
தோப்பில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு 3 பேரும் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் காளையார்கோவில் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
அங்கு ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தகவலைத் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தோப்பில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சகோதரர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் குற்ற எண் 321/2024-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சுள்ளான் மதனும் கூட்டாளிகளும்..
ஜூன் 22-ந் தேதி பணங்குடி மஞ்சுவிரட்டில் ஒரு காளையைப் பிடிப்பதில் தொடங்கிய தகராறு, 8 நாட்களுக்குப் பின்னர் ஜூன் 30-ந் தேதி இரவு ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய அண்ணன், தம்பி இருவரின் கொலையில் முடிந்தது.
ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காளையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக சுள்ளான் மதனின் இன்ஸ்டாகிராம் காதலி மதுமதி (26), திவாகர் (23), சந்தோஷ் (23), ராம்ஜி (21), யுவராஜ் (22), அபினேஷ் (22), அருண்குமார் (30) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, போலீசாரால் தேடப்பட்டு வந்த சுள்ளான் மதன், முத்துப்பாண்டி, செல்வகுமார், மணிகண்டபிரபு ஆகிய 4 பேரும் 2024-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரட்டை கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன, தாக்குதலில் யார் யார் பங்கேற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் கொலைக்கான ஆயுதங்களை வழங்கியதாக மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் தடுப்பு சட்டம்
இதற்கிடையே, இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுள்ளான் மதன், முத்துப்பாண்டி, செல்வகுமார், மணிகண்டபிரபு ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இரட்டை கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சுள்ளான் மதன், 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 2026-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த சுள்ளான் மதன்
இந்த நிலையில் அக்டோபர் 18-ந் தேதி சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே மேலமங்கலம் கிராமத்தில் வடமஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இந்த மஞ்சுவிரட்டைப் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும் பொதுமக்களும் திரண்டு வருகின்றனர்.
மீண்டும் ஜல்லிக்கட்டு.. மீண்டும் படுகொலை
இந்த மஞ்சுவிரட்டைப் பார்ப்பதற்காக சுள்ளான் மதனும் தனது நண்பர்களுடன் மேலமங்கலத்திற்குச் செல்கிறார்.
பிற்பகல் சுமார் 2 மணி.
மேலமங்கலத்தில் நாடக மேடை அருகே உள்ள கரும்புத் தோட்டப் பகுதியில் சுள்ளான் மதன் தனது நண்பர்களுடன் இருக்கிறார்.
அப்போது அந்தப் பகுதியை நோக்கி 5 இருசக்கர வாகனங்கள் வருகின்றன. அவற்றில் 11 பேர் வந்திறங்குகின்றனர். அவர்கள் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருக்கின்றனர்.
சுள்ளான் மதனைப் பார்த்ததும் அந்தக் கும்பல் அவரைத் தாக்க முயற்சிக்கிறது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மதன், அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடுகிறார். ஆனால் அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்திச் செல்கிறது.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கரும்புத் தோட்டத்திற்குள் ஓடுகிறார் சுள்ளான் மதன். அவரைப் பின்தொடர்ந்து செல்லும் கும்பல், தோட்டத்திற்குள் அவரைச் சுற்றி வளைக்கிறது.
பின்னர் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுள்ளான் மதனைச் சரமாரியாக வெட்டுகிறது. கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயமடைந்த சுள்ளான் மதன் அந்த இடத்திலேயே உயிரிழக்கிறார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்கிறது.
மஞ்சுவிரட்டு நடைபெற்ற பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. சுள்ளான் மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவுகிறது.
தகவலறிந்து சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர். கரும்புத் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சுள்ளான் மதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, துணைக் காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்துகின்றனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசாரும் விசாரணையில் ஈடுபடுகின்றனர்.
சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்களும் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரள்கின்றனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சுள்ளான் மதனை வெட்டிக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன.
தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மானாமதுரையைச் சேர்ந்த பாபு (23), பாலமுருகன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பிரதீப் (28) ஆகிய 3 பேர் கைது செய்யப்படுகின்றனர். மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
”காத்திரு பகையே“.. காரணமா?
காத்திரு பகையே! என 2024-ல் படுகொலை செய்யப்பட்ட ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோரது நண்பர்கள், ‘சுள்ளான்’ மதனை பழிதீர்க்க 2 ஆண்டுகளாக காத்திருந்து பழி எடுத்தனரா?
’சுள்ளான்’ மதன் கொலையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் ஜெயசூர்யா, சுபாஷ் சகோதரர்களுக்குமான ‘லிங்க்’ என்ன? என அத்தனை கோணங்களிலும் சிவகங்கை போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
