சென்னையில் நேற்று கன மழை பெய்த நிலையில் இன்று கோவையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நேற்று, சென்னையில் இரவு முழுவதும் அதி கனமழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களிலும் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் இரண்டாவது நாளாக இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதல்வர் விஜய் ரிப்பன் மாளிகையில் மழை நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை மக்களுக்கு மாநில பேரிடர் ஆணையம் எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் அனுப்பியது.
ஆனால், இன்று இரவு சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
இந்த சூழலில், கோவையில் இன்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர், தேங்கிய நிலையில் அங்கு மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மழை நீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
அவிநாசி சாலையில் கனமழையின் காரணமாக இரு புறங்களிலும் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
கோவை சங்கனூர் பகுதியில் மழைநீருடன் சாக்கடை கழிவுகளும் சேர்ந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது ராட்சத மரம் விழுந்து சேதமடைந்துள்ளது.
காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், குனியமுத்தூர், சுந்தராபுரம், ஆத்துப்பாலம், இராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையால் சாலையில் ஆறு போல் மழைநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
