சென்னையில் நேற்று ஒரே இரவில் பெய்த கனமழை காரணமாக மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் சென்னையில் நேற்று கன மழை பெய்துள்ளது. பாரிமுனையில் 36 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருவேற்காடு சண்முகா நகர் பகுதியில் மின் கம்பம் மீது ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு பின்பு மின்விநியோகம் சீரானது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலும் நேற்று இரவு 10 மணிக்கு கரண்ட் கட் ஆகியுள்ளது. இன்று வரை மின்விநியோகம் இல்லாமல் அங்குள்ளவர்கள் சிரமப்பட்டுள்ளனர். மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது கேபிள் சரியில்லை என்று பதிலளித்துள்ளனர். தற்போது வரை அங்கு மின் வினியோகம் சீராகவில்லை என்று தகவல்கள் வருகின்றன.
சென்னை வியாசர்பாடி சுந்தரி நகர் பகுதியில் மழை காரணமாக மின்வயர் சேதமடைந்து தீப்பற்றி எரிந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக ராயபுரம் பகுதி மக்கள் தங்களது கார்களை அங்கிருக்கும் மேம்பாலத்தின் இருபுறமும் நீண்ட வரிசையில் நிறுத்தி வைத்துள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு நிற்பதை காண முடிகிறது.
